ரெபல் - விமர்சனம்!
இந்திய சினிமாக்களில் மோலிவுட் எனப்படும் மலையாள சினிமாக்கள் தனக்கே உரிய பாணியில் தனித்து ஜொலித்துக் கொண்டிருக்கிறது. சமீப காலமாக ரிலீஸாகும் ஒவ்வொரு மலையாள படமும் தன் எல்லைகள் கடந்து பெருத்த வரவேற்பைப் பெற்று வரும் சூழலில் 80களில்கேரளாவிலுள்ள மூணாறு தமிழ் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்களுடைய பிள்ளைகள் கல்லூரியில் போராடும் அவல நிலையைச் சுட்டிக் காட்டி ஒரு படம் கொடுத்து பார்ப்போர் மனதில் செங்கொடியை இறக்க முயன்று இருப்பதே ரெபல் படம்.
கதை என்னவென்றால் 1980 காலகட்டத்தில் மூணாறு தேயிலை தோட்டத்தில் தமிழ் தொழிலார்களின் வாரிசுகள் பாலக்காடு நகரில் உள்ள ஒரு கல்லூரிக்கு படிக்க செல்கிறார்கள். அங்கே உள்ள மலையாள மாணவர்கள் இவர்கள் தமிழர்கள் என்பதாலேயே அவமானப்படுத்துகிறார்கள். ராக்கிங் செய்யப்படுகிறார்கள். இந்த பிரச்சனையில் ஒரு தமிழ் மாணவர் கொல்லப்பட பொங்கி எழும் நாயகன் ஜிவி பிரகாஷ் மோலிவுட் பசங்களை அடித்து நொறுக்கி விடுறார். இதை அடுத்தும் தொடரும் இந்த பிரச்சனைக்கு பின்னால் இரண்டு பெரிய அரசியல் கட்சிகள் இருப்பதைக் கண்டு பிடித்த நிலையில் தமிழ் மாணவர்களை ஒன்று திரட்டி மாணவர் தேர்தலில் நிற்கிறார் . இதன் காரணமாக கல்லூரியையும் தாண்டி கலவரம் பரவுகிறது. இறுதியில் நடப்பது என்ன சொல்வதே ரெபல் .
நாயகன் ஜி.வி.பிரகாஷ் குமார், கேஷூவலான காலேஜ் ஸ்டூடண்ட் ரோலில் வந்து கொஞ்சம் ஆக்ரோஷமாக முடிந்த அளவு ஸ்கோர் செய்கிறார். இரண்டாம் விஜய் ஆண்டனி என்ரு பேர் எடுக்க முடிவு செய்து விட்டார் போலும். ஹீரோயினாக நடித்திருக்கும் மமீதா பைஜு வுக்கான கேரக்டர் ஏமாற்றம் தந்து விட்டது. வில்லனாக நடித்திருக்கும் வெங்கிடேஷ், விளிம்பு நிலை மாணவனாக நடிக்கும் ஆதித்யா பாஸ்கர் (இவர் நடிகர் எம். எஸ். பாஸ்கரின் மகன்) ஆகியோர் பரவாயில்லை என்று சொல்ல வைக்கிறார்கள்
கேமராமேன் அருணின் ஒளிப்பதிவு மூலம் மூணாரின் குளிர்ச்சி திரையில் கொண்டு வந்து படத்தை ஒப்பேற்றியதில் பெரும் பங்கு பெற்று விட்டார். ஆர்ட் டைரக்டரும் தன் கடமையை மிகச் சரியாக செய்து கவனம் பெறுகிறார். இசை என்று தன் பெயரை டைட்டிலில் போட ஆசைப்பட்டவர் உருப்படியான பாடல்களையும் கொடுக்காமல் பின்னணியையும் நாரசாரமாக்கி கடுப்பேற்றுகிறார்.
பட தொடக்கத்தில் கேரளாவில் தமிழர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை சொல்ல போகிறார்கள் என்று நாம் நினைக்கும் முன்பே இது காலேஜ் ரேகிங் பிரச்னை என்று கன்ஃப்யூஸ் பண்ணத் துவங்கி இல்லையில்லை சாதிப் பிரச்னையா? இனப்பிரச்னைங்க.. அதையும் தாண்டி மொழிப் பிரச்னை என்று சொல்ல வந்த விஷயத்தில் டைரக்டரும் குழம்பி நம் தலைமுடியையும் கலைத்து விட்டு அனுப்புகிறார்கள்..
மொத்தத்தில் இந்த ரெபல் - டைம் வேஸ்ட் மூவி
மார்க் 2.25/6