'LGBTQIA+ தம்பதியினருக்கு ரேஷன் கார்ட்!
'LGBTQIA+ தம்பதியினர் ரேஷன் கார்டு வைத்துக் கொள்வதற்கு தடை விதிக்கக் கூடாது. அவர்களைக் குடும்பமாகவே பாவிக்க வேண்டும்.'- ...என்று மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் ஆணை விடுத்து சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. இது ஒரு முக்கியமான அறிவுரை. காரணம், இதுவரை மணமான தம்பதியினர் மட்டும்தான் சட்டரீதியான குடும்பமாக கருதப்பட்டு வந்திருக்கின்றனர். LGBTQIA+ தம்பதியினருக்கு இருந்த பிரச்சினையே சட்டரீதியான அங்கீகாரம் இல்லாததால், இணை வங்கிக் கணக்கு திறப்பது, இணைந்து சொத்துகள் வாங்குவது, காப்பீடுகள் எடுப்பது, அறுவை சிகிச்சைகளுக்கு சம்மதப் படிவத்தில் கையெழுத்துப் போடுவது போன்றவை சாத்தியமின்றி இருந்தது. அதனால்தான் அவர்களின் ஒரு கூட்டமைப்பு LGBTQIA+ க்களுக்கு திருமண உரிமை பெறுவதற்கான வழக்கைத் தொடுத்தார்கள். முறையாக திருமணம் செய்து கொண்டால் இந்தத் தடைகள் நீங்கி விடும் என்பதால் அவர்கள் அந்த உரிமை கோரினார்கள்.
ஆனால் அது குறித்த விசாரணையில் மத்திய அரசு LGBTQIA+ திருமண உரிமையை எதிர்த்து நின்றது.இவர்கள் திருமணம் செய்து கொண்டால் கலாச்சாரம் கெட்டு விடும், குடும்ப அமைப்பே சிதறி விடும், பூமாதேவி பூமியைப் பிளந்து விடுவாள், என்ற ரேஞ்சுக்கு கதறி அஃபிடவிட் சமர்ப்பித்தது.கூடவே,அவர்களுக்கு திருமண உரிமை வழங்கும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு இல்லை, நாடாளுமன்றத் தீர்மானம் மூலமே அது சாத்தியம், என்றும் வாதிட்டது.அந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட் அதற்கான முனைப்புகளை எடுக்க சொல்லி அறிவுரைத்திருந்தது. கூடவே அந்த மண உரிமை முழுமையாகக் கொடுக்கப்படும் வரை அவர்களுக்கு இருக்கும் சட்ட ரீதியான தடைகளை விலக்கவும் ஆவன செய்யவும் கேட்டிருந்தது. அதன் ஒரு பகுதியாகத்தான் அரசின் இந்த சுற்றறிக்கை வந்திருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக மேலும் பல உரிமைகள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.இப்படியே போய் LGBTQIA+ மக்களுக்கு திருமண உரிமை கிடைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று நம்புகிறேன்.
அவர்கள் திருமணம் செய்து கொள்ள இருக்கும் முக்கிய தடை மதத்தில் இருந்துதான் வருகிறது.அனைத்து மதத் தலைவர்களும் LGBTQIA+க்கு எதிரானவர்களாகவே இயங்குகிறார்கள். திருமணம் என்பது விவசாயப் பழங்குடிகளின் ஒரு அமைப்பு. விவசாய, பண்ணை சொத்துகளை பாதுகாக்க, அவற்றை அடுத்த தலைமுறைக்குக் கடத்த ஏற்பட்ட வசதியான அமைப்பு. யார் என் மகன் என்று தெரிந்தால்தான் என் நிலம், ஆடு மாடுகளை அவனுக்குக் கொடுக்க முடியும். அதனால்தான் உலகெங்கும் பெண்களுக்கு கற்பு என்பது வரித்துக் கொடுக்கப்பட்டது. அதனை நவீன அரசுகள் சட்ட ரீதியான ஒரு தேவையாக மாற்றி விட்டிருக்கின்றனர். அந்த சட்ட ரீதியான தேவை நீங்கும் போது திருமணம் என்ற அமைப்பும் கலைந்து போய் விடும்.
எனவே, என்னைப் பொருத்தவரை, உலக அரசுகள் இரண்டில் ஒன்று செய்ய வேண்டும்:
1. ஒன்று எந்தத் தனி மனித, மனிதி தம்பதியும் தங்களை குடும்பமாக அறிவித்துக் கொண்டு, மணம் புரியத் தேவையின்றி சட்ட ரீதியான சேவைகளை நுகர்ந்து கொள்ள முடியும் என்று அறிவிக்க வேண்டும்.
2. அல்லது, மண உரிமை அனைவருக்கும் உண்டு என்று அறிவிக்க வேண்டும்.
அப்படி இரண்டில் ஒரு பக்கம் தெளிவாக உருட்ட முடியாமல் அரசுகள் தவிப்பதற்குக் காரணம் மதம் எனும் டைனோசார். பண்டைய விவசாய அல்லது நாடோடி காலத்துக்கு ஏற்படுத்தப்பட்ட மதம் எனும் இந்த சிஸ்டம் நியாயமாக நவீன உலகில் வழக்கொழிந்து போயிருக்க வேண்டும். ஆனால் தொடர்ந்து நம்மிடையே உலா வந்து கொண்டிருக்கிறது. அதுவும் சும்மா உலவிக் கொண்டிராமல், பல்வேறு சட்ட,அறிவியல் விஷயங்களில் தன் மூக்கை நுழைக்கிறது. கருக்கலைப்பு செய்யலாமா, முகநூல் பயன்படுத்தலாமா, LGBTQIA+ திருமணம் செய்து கொள்ளலாமா போன்றவை நவீன கேள்விகள். இவற்றுக்கு அறிவியல் பூர்வ அல்லது சட்ட பூர்வ பதில் மட்டுமே தேவை. ஆனால் சம்பந்தமே இல்லாமல் இந்த டைனோசார் உள்ளே புகுந்து பதில் சொல்லிக் கொண்டு இருக்கிறது. பாஸ், உங்களுக்கு பூமி ஒரு உருண்டை என்ற மேட்டரே கூட தெரிந்திருக்கவில்லை.
நவீன அறிவியல் வந்துதான் சொல்ல வேண்டி இருந்தது. நீங்கள் வந்து நவீன கேள்விகளில் மூக்கை நுழைக்கலாமா?சோகம் என்னவெனில், இந்த டைனோசார் மீது விண்ணில் இருந்து எந்தக் கல்லும் விழ வாய்ப்பில்லை. பூமியில் வாழும் மக்கள்தான் கல்லெறிந்து அழிக்க வேண்டும். மதம் எனும் டைனோசார் அழிந்த பின், இது போன்ற அறம் சார்ந்த நவீன கேள்விகளுக்கு பழங்கால, காலாவதியான புத்தகங்களில் இருந்து பதில் தேட வேண்டிய அவசியம் இருக்காது. எது எப்படியோ, சுப்ரீம் கோர்ட் அறிவுரையை புறக்கணித்துக் கடக்காமல் LGBTQIA+ தம்பதியினருக்கு இருந்த சட்டச் சிக்கல்களைகளையும் முயற்சியில் இறங்கி இருக்கும் மத்திய அரசுக்கு நன்றிகள்.