ரஞ்சனா நாச்சியாரின் செயலால் எனக்குள் எழும் கேள்விகள்!
ரஞ்சனா நாச்சியார், பேருந்துப் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்துடன் பயணித்த மாணவர்களை அடித்து இறக்கிய காணொளிக் காட்சியை பார்த்தேன். அவர் முதலில் ஓட்டுனரிடம் சென்று வண்டியை நிறுத்தி நடத்துனரிடம் சொல்லி மாணவர்களை இறக்கி விடுங்கள் என்று வேண்டுகோள் வைக்கிறார். பிறகு மாணவர்களை கரிசனத்தோடும், அன்போடும் அடித்து இறக்குகிறார். அவரது கண்களில் நல்லெண்ணம் இருக்கிறது. அவர் தனது குழந்தைகளைப் போலத்தான் மாணவர்களை கண்டிப்புடன் அடித்து இறக்கி விடுகிறார். ஆனால் யாரையோ "அறிவு கெட்ட நாயே, அறிவு கெட்ட நாயே" என்று நடத்துனர் பக்கம் கையைக் காட்டி கடிந்து பேசுகிறார். அது யாராவது மாணவராக இருந்தால் பெரிய குற்றமில்லை. ஒருவேளை அவர் நடத்துனரை அப்படிப் பேசி இருந்தால் அது தவறு. கண்டிக்கப்பட வேண்டியது.
அரசு அவரை புகாரின் பேரில் கைது செய்திருக்கலாம். அது அரசின் கடமை. அரசுப் பணியாளர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது, மாணவர்களைப் பொது வெளியில் உடல்ரீதியாகத் துன்புறுத்துவது, மன உளைச்சல் ஏற்படுத்துவது என்று காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்கக் கூடும். அது நியாயமானதுதான்.
ஆனால், இது போன்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கரிசனத்தோடு தான் நடத்தப்படுவார்கள். இது ஒரு Formal Procedure என்றுதான் காவல்துறை அவர்களை நடத்தும். பிற குற்றவாளிகளைப் போல நடத்த மாட்டார்கள். மேலும் சேதுபதி ராஜா குடும்பப் பெண்மணி என்ற நடுக்கமும், பாசமும் வேறு நமது அரசு இயந்திரத்துக்கு உண்டு. சாலையில் போக்குவரத்து விதிகளை மீறிப் போகிற ஒரு மனிதனைக் கூட அவன் உயர் சாதிக்காரன் என்று தெரிந்த பின் வளைந்து நெளிவதும், ஒடுக்கப்பட்டவன் என்று தெரிந்தால் ஒருமையில் அழைக்கிற, வன்முறையை ஏவுகிற புழுக்கள் கூட நமது காவல்துறையில் உண்டு. திமுக, அதிமுக என்று எந்த அரசிலும் அதற்கெல்லாம் விதிவிலக்கில்லை.
ஆனால், இவை அனைத்தையும் தாண்டி எனக்குள் எழும் கேள்விகள் இதுதான்.
1) மாணவர்கள் விசாலமான இருக்கைகள் காலியாக இருக்கும் பேருந்தில் படியில் தொங்கிக் கொண்டு பயணித்தார்களா? இல்லை. அப்படியானால், போக்குவரத்துக்கு சாதகமான பேருந்துகள் எண்ணிக்கையளவில் நம்மிடம் குறைவா? குறைவுதான். இன்னும் சில ஊர்களுக்கு சாலை வசதி இல்லை. பேருந்துகள் இல்லை. பேருந்துகள் இல்லாமல் நான்கு கிலோமீட்டர் தொலைவு நடந்து போகிற ஊர்க்காரர்களை எனக்குத் தெரியும்.
2) தமிழகம் முன்னேறிய மாநிலமாக்கும், நாம் ஸ்காண்டிநேவியன் நாடுகளுக்கு ஒப்பானவர்களாக்கும் என்று சிலர் பெருமையோடு பேசுவதைப் பார்த்திருக்கிறேன். நானே பேசி இருக்கிறேன். சென்னை நகரத்தின் உட்பகுதியில் இருக்கும் பல சாலைகள் குண்டும் குழியுமாக கேட்பாரற்று நாள்தோறும் விபத்துகளை உருவாக்கும் சாலைகள் தான்.
3) ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் சாலை வரி, வாகன உரிமத்துக்கான வரிகள், மாநகராட்சி வரி, சுங்கச்சாவடி வரி, அந்த வரி இந்த வரியென்று போட்டுத் தாளித்து விடுகிறார்கள். இந்த வரிவசூல் வழியாக திரட்டப்படும் பணமெல்லாம் எங்கே யாருக்காக செலவிடப்படுகிறது?
3) பத்தாண்டுகளுக்கு மேலாக ஒப்பேறாத சாலையோடு பரிதாபமாக இருக்கும் ஊராட்சிகளின் தலைவர்கள் பென்ஸ் காரில் வந்து ஏதோ ஜாக்சன் துரை போல வந்து "படம் காட்டுகிறார்கள்". இவர்களெல்லாம் எப்படி பொருளீட்டுகிறார்கள்?"
4) அடிப்படையான விஷயங்களில் நிகழும் இதுபோன்ற தொடர் குறைபாடுகளை, ஏமாற்று வேலைகளைக் குறித்து நமது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கேள்வி கேட்பதை விட்டுவிட்டு நாம் இதுபோன்ற தேவையற்ற ஆணிகளை ஏன் பிடுங்கிக் கொண்டிருக்கிறோம்?
5) நாம் அனைவருமே இந்த ஏமாற்று வேலைகளில் கூட்டுக் களவாணிகளாக இருந்து எளிய மனிதர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம் அல்லவா? நீதி மற்றும் அறம் குறித்து நமது குழந்தைகளுக்கு நாம் உறுதியான குரலில் ரஞ்சனா நாச்சியார் போல பாடம் எடுத்திருந்தால் அல்லது ரெண்டு சாத்து சாத்தியிருந்தால் ஒருவேளை அவர்கள் இதுபோல் படிக்கட்டில் தொங்கி இருக்க மாட்டார்களோ?
இறுதியாக, நான் இந்த விவகாரத்தில் திருமதி.ரஞ்சனா நாச்சியார் பக்கம் நிற்கிறேன். அவரது கண்களில் நான் நீதியையும் அந்த மாணவர்களின் மீதான உண்மையான அக்கறையையும் பார்த்தேன். எல்லாவற்றையும் தாண்டி அவரது அந்த செயலில் அறமும், நீதியும் இருந்ததை நான் பார்த்தேன். நமது மாணவர்களின், நமது குழந்தைகளின் உயிரைப் பாதுகாக்க இரண்டு சாத்து சாத்தினால் என்ன குடி முழுகி விடப்போகிறது? அது நமது கடமையும் கூடத்தானே?