’ரணம்’ - விமர்சனம்
நெக்ரோஃபிலியா" என்பது மரணம் மற்றும் இறந்தவர்கள் மீதான ஈர்ப்பு மற்றும் அதிலும் குறிப்பாக, சடலங்களின் மீதான ஈர்ப்பு. அதாவது உயிரிழந்தபின் பின் சடலங்களுடன் உடலுறவு கொள்ளும் நபர்களை நெக்ரோபிலியா (necrophilia) என அழைக்கும் வழக்கம் உள்ளது. இத்தகைய மனநிலை உள்ளவர்களுக்கு பிணங்களை கண்ட பின் பாலுணர்வு தூண்டப்படும். அதன் காரணமாக கொலை செய்தோ அல்லது புதைக்கப்பட்ட சடலத்தை வெளியில் எடுத்தோ அதை வன்புணர்வு செய்வது இவர்களின் வழக்கமாக உள்ளது. சினிமாவில் அதிகம் பேசப் படாத ஒரு உளவியல் விஷயத்தை பற்றி ரணம் என்ற பெயரில் படமொன்றைக் கொடுத்துள்ளார்கள்.
அதாவது சென்னையில் அடுத்தடுத்த இடங்களில் கால், கை, உடம்பு என தனித்தனியாக எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்படுகின்றன. காவல் நிலையத்தில் குற்றச் செயலுக்கான கிரைம் ஸ்டோரி எழுதுபவரும், குற்றவாளிகளை உருவங்களை ஸ்கெட்ச் செய்பவருமான வைபவ் விசாரணைக்கு உதவ வருகிறார். அவரின் முயற்சியில் கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்கள் வெவ்வேறு நபர்களுடையது என தெரிய வருகிறது. அதேசமயம் இந்த வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டரும் காணாமல் போகிறார். இதனால் வழக்கு தான்யா ஹோப் கைக்கு வருகிறது. இவரும் வைபவ் இருவரும் இணைந்து வழக்கின் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முயல்கிறார்கள். ஒவ்வொரு முறையும் குற்றவாளிகளை நெருங்கும்போது அடுத்தடுத்து அதிர்ச்சியான சம்பவங்கள் காத்திருக்கின்றன. இறுதியாக உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்தார்களா? இந்த கொலைகளுக்கு எல்லாம் காரணம் என்ன? என்பதை இறுதியாக ரணம் அறம் தவறேல் படத்தின் கதையாகும்.
ஹீரோவாக நடித்திருக்கும் வைபவ்வுக்கு 25ஆவது படமாம். , கொஞ்சம் வித்தியாசமான வேடத்தில் அளவான நடிப்பு மூலம் தான் கமிட் ஆன ரோலுக்கு பலம் சேர்த்திருக்கிறார். விபத்தில் மனைவியை இழந்து விரக்தியில் வாழும் அவர், குழப்பம் நிறைந்த கொலை வழக்கின் பின்னணியை கண்டுபிடிக்கும் விதம் மற்றும் அதில் அவர் வெளிப்படுத்திய அப்பாவித்தமான நடிப்பு ரசிக்க வைக்கிறது. ஜாலியாக நடித்துவிட்டு போக கூடிய வைபவ், ஆக்ஷன் சாயல் நிறைந்த ஒரு கதாபாத்திரத்தில் அழுத்தமாக நடித்து, தன்னால் இப்படியும் நடிக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார். நாயகி தான்யா ஹோப் இன்ஸ்பெக்டர் என்பதால், மிடுக்கு காட்டி கவனம் ஈர்க்க முயற்சித்திருந்தாலும், அடுத்தடுத்து நடந்த குற்றங்கள் அதுகுறித்து வைபவிடம் விசாரித்து உதவி கேட்பதையே வேலையாக வைத்திருப்பதால், அவரது ரோல் எடுபடவில்லை. நந்திதா ஸ்வேதா, இளம் விதவையாக 10 வயது பெண்ணுக்கு அம்மாவாக நடித்திருப்பது ஆச்சரியம் . பாசம், பழிவாங்கல் என இது வரை நாம் பார்க்காத நந்திதாவை பார்க்கலாம்.சுரேஷ் சக்ரவர்த்தி, 'விலங்கு' கிச்சா இருவரும் ச்கோர் செய்கிறார்கள்.
கேமராமேன் பாலாஜி கே.ராஜா, நைட் எஃபெக்ட் சீன்களை சரியான ஒளியில் நேர்த்தியாக படமாக்கி, காட்சிகளோடு ரசிகர்களை பயணிக்க வைப்பதோடு, காதல் பாடலை கலர்புல்லாக படமாக்கி ரசிக்க வைத்திருக்கிறார். மியூசிக் டைரக்டர் அரோல் கொரோலியின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை க்ரைம் கதைக்கு போதுமானதாக இல்லை.
ஆரம்ப பேரவில் சொன்ன சப்ஜெக்டை வைத்து ஒரு மாறுபட்ட விழிப்புணர்வு தரும் உளவியல் திரில்லர் படத்தை வழங்க திட்டமிட்டவ்ர்கள் இடைவேளைக்கு பிறகு தேவையில்லாமல அடுத்தடுத்த க்ரைம்களை கொடுத்து கொஞ்சம் சலிப்பேற்றி விட்டார்கள்..
ஆனாலும் இந்த ரணம் - எடுபடுகிறது
மார்க் 3.25/5