பள்ளி பாட புத்தக சமூக அறிவியலில் ராமாயணம், மகாபாரதம்.!
சமூக அறிவியல் பாடத்திட்டத்தில் (Social Science Textbooks) மாணவர்களுக்கு ராமாயணம், மகாபாரதம் (Ramayana and Mahabharata) போன்ற இதிகாசங்களை கற்பிக்க 7 பேர் கொண்ட கமிட்டி வலியுறுத்தியுள்ளது. வரலாற்று பாடத்திட்டத்தை நான்கு வெவ்வேறு காலகட்டங்களாகப் பிரிக்க வேண்டும். கிளாசிக்கல், இடைக்காலம், பிரிட்டிஷ் மற்றும் நவீன இந்தியா. இந்த மறுசீரமைப்பு வரலாற்று காலவரிசை பற்றிய விரிவான புரிதலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கூடுதலாக, சுபாஷ் சந்திர போஸ் போன்ற தேசிய தலைவர்கள், வேதங்கள் மற்றும் ஆயுர்வேதம் தொடர்பான இலக்கியங்கள் போன்ற நூல்களை சேர்க்கவும் பரிந்துரைக்கப்படுகிறது.
பொதுப்பட்டியலில் இருக்கும் கல்விக்கு , இந்தியா முழுக்க ஒரே மாதிரியான பள்ளி கல்வி முறை கொண்டுவரும்படியாக தேசிய கல்வி கொள்கை 2020 கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் ஒவ்வொரு பாடத்திட்டத்திற்கும் தனித்தனி குழு அமைத்து அதன் மூலம் பல்வேறு பாடத்திட்ட சீர்திருத்தங்கள் கோரப்பட்டுள்ளது.
இந்திய புதிய தேசிய கல்வி கொள்கை 2020ஆனது அடுத்த ஆண்டு இந்தியா முழுக்க அமலுக்கு வரும் என கூறப்படுகிறது. 2024 ஜூலையில் தேசிய கல்வி கொள்கை வெளியிடப்பட உள்ளது. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சிலின் (NCERT) உயர்நிலைக் குழு பாடத்திட்ட பரிந்துரைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த குழுவின் சமூக அறிவியல் பிரிவானது சி.ஐ.ஐசக் தலைமையிலான 7 பேர் கொண்ட குழு ஆய்வு செய்து அறிக்கையை பரிந்துரை செய்துள்ளது.
இதனை கருத்தில் கொண்டு மகாபாரதம் மற்றும் ராமாயணம் ஆகியவை பள்ளிபாடபுத்தகத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்றும், 3 முதல் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இந்து மன்னர்கள் பற்றிய வரலாறும் கற்பிக்கப்பட வேண்டும் என்றும் சமூக அறிவியல் குழு NCERT குழுவுக்கு பரிந்துரை செய்துள்ளது.தற்போதுள்ள மாணவர்கள் படித்து முடித்து வெளிநாடு செல்கிறார்கள். அவர்களுக்கு போதிய தேசப்பற்று இல்லை. நமது பண்பாடு வரலாறு தெரிவதில்லை. அதனால் .பள்ளிகளில் வகுப்பறைச் சுவர்களில் அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை எழுதி வைக்க வேண்டும் என்றும் குழு பரிந்துரைத்துள்ளது. இத்தகவலை கமிட்டி தலைவர் சிஐ ஐசக் இன்று (நவம்பர் 21, செவ்வாய்க்கிழமை) தெரிவித்தார். அதாவது 7 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ராமாயணம் மற்றும் மகாபாரதம் கற்பிப்பது மிக முக்கியம் என்று சிஐ ஐசக் (CI Isaac) வலியுறுத்தி உள்ளார்.