இராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவு தினம்!
மனித உருவில் வந்து, வாழ்வாங்கு வாழும் வழிதனை தம் வாழ்க்கை மூலம் வாழ்ந்து காட்டிய அருளாளர்கள் பாரதப் பண்பாட்டின் நெடுகிலும் இருக்கின்றனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவரே ஸ்ரீ ராமகிருஷ்ணர். அனைத்து மதங்களின் வழிபாட்டு முறைகளையும் ஆழ்ந்து அனுபவித்து, உணர்ந்து மதம் கூறும் நல்வழிகளை வாழ்க்கை நடைமுறையில் கொண்டு வந்தவர் அவர். கடவுள் வழிபாட்டின் அத்தனை பாவனைகளும் மனித வாழ்வை மேம்படுத்தி இறைவனை அடையும் வழி என்று அனுபவித்து உணர்ந்தவர் ராமகிருஷ்ணர்.
1836 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ஆம் தேதியன்று மேற்கு வங்காளத்தில் உள்ள குமார்பூர் என்ற கிராமத்தில் குடிராம் - சந்திராமணி என்ற தம்பதியருக்கு ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் மகனாக பிறந்தார் . குழந்தைப் பருவத்தில் அவர் கதாதர் என்ற பெயரால் அழைக்கப்பட்டார் . கதாதர் தக்ஷினேஸ்வரில் தஞ்சமடைந்த போது ராமகிருஷ்ணர் என்ற பெயரைப் பெற்றார் . படிப்பில் நாட்டமில்லாத ராமகிருஷ்ணர் பஜனைகள் , புராணக் கதைகள் , ஓவியம் ஆகியவற்றில் ஆர்வத்தைக் காட்டினார் . ஆறாவது வயதில் கருமேகங்களுக்கிடையே சிவபெருமான் அவருடைய கண்களுக்கு காட்சி கொடுத்ததால் அன்றிலிருந்து இறைவனை நேரில் காணவேண்டுமென்ற ஆர்வத்தால் கடுந்தவம் செய்தார் . 1843 ஆம் ஆண்டில் ராமகிருஷ்ணர் தந்தையை இழந்து மூத்த சகோதரனுடன் தக்ஷினேஸ்வரில் தஞ்சம் அடைந்தார் . அங்குள்ள பிரபலமான காளி கோயிலின் பொறுப்பை மகாராணி ரசமணி ராமகிருஷ்ணரின் மூத்த சகோதரனிடம் ஒப்படைத்தார் .
ராமகிருஷ்ணரும் சகோதரனுடன் இணைந்து உதவி செய்தார் . ஒருநாள் அந்தக் கோயிலில் உள்ள கிருஷ்ணர் சிலையை வேறிடத்தில் வைப்பதற்கு தூக்கி எடுக்கும்போது கைதவறி விழுந்ததால் சிலையின் கால்கள் தனியாக பிரிந்தன . ராமகிருஷ்ணர் உடைந்த கால்களை சிலையோடு ஓட்ட வைத்து, அதே சிலையை மீண்டும் சன்னிதியில் வைத்து தானும் பூஜித்து , மக்களையும் பூஜிக்க வைத்தார் . சில காலங்களுக்கு பிறகு அவருடைய மூத்த சகோதரனும் உயிர் நீத்தார் . அதன் பிறகு கோயில் பொறுப்புகளை மகாராணியின் மருமகன் ராமகிருஷ்ணரிடம் ஒப்படைத்தார் . காளிதேவியை நேரில் காணவேண்டுமென்று எண்ணம் கொண்ட துடிப்பில் ராமகிருஷ்ணர் ஆறு வருட காலமாக தன்னைப் பற்றி சிந்திக்காமல் எப்போதும் காளிதேவியையே ஸ்மரணம் செய்து கொண்டிருந்தார் . ஒருநாள் கோபம் கொண்டு ராமகிருஷ்ணர் தன்னுடைய உயிரை நீத்துக் கொள்வதற்கு முயற்சித்த போது காளிதேவி அவர் எதிரே தோன்றினாள். இந்த காட்சிக்குப் பிறகு ராமகிருஷ்ணரின் நடவடிக்கைகள் அசாதாரணமாக இருந்தது.
இதைக்கண்ட அவர் தாயார் அவருக்கு பித்தம் பிடித்து விட்டது என்றெண்ணி, அவருக்கு திருமணம் செய்து வைத்தால் சரியாகிவிடும் என நினைத்தார். ராமகிருஷ்ணரோ, இதற்கு மறுப்பளிக்கவில்லை. மாறாக, கமார்புகூரின் அருகில் இருந்த ஜெயராம்பாடி என்ற ஊரில் சாரதாமணி என்ற ஐந்து வயது பெண் இருப்பதாகவும், அப்பெண்ணே, தன்னை மணம் புரிய பிறந்தவள் என்று கூறினார். அதன்படியே அவர் திருமணம் நடந்தது. அனைத்துப் பெண்களையும் காளியின் வடிவங்களாக நோக்கும் ராமகிருஷ்ணருக்கு, அவர் மனைவியும் விதிவிலக்கில்லை. ஒருநாள் அவர் மனைவியை காளியாக நினைத்து அலங்கரித்து, பூசை செய்து, அவர் கால்களில் வீழ்ந்து வணங்கினார்.
பிறகு ஒருநாள் பைரவி பிராம்மணி என்ற தாந்தரிக பெண்மணி தட்சினேஸ்வரத்திற்கு வந்தார். ராமகிருஷ்ணர் அவரிடம் தாந்தரிக சாதனைகள் கற்றுத் தேர்ந்தார். பின்னர் தோதா புரி என்பவரிடம் அத்வைத வேதாந்தம் கற்ற ராமகிருஷ்ணர், ஆறு மாதங்கள் நிர்விகல்ப சமாதியில் திளைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு ராமர், கிருஷ்ணர், ஆகியோரைக் குறித்து பிரார்த்தித்து சீதை, ராதை ஆகியோரைக் கண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், கிறித்தவ, மற்றும் இஸ்லாமிய மார்க்கங்களிலும் சாதனை புரிந்து இயேசு, நபிகள் ஆகியோரின் காட்சிகளையும் ராமகிருஷ்ணர் கண்டதாக அவரே பின்னர் குறிப்பிட்டுள்ளார்.
ராமகிருஷ்ணரின் இந்த சாதனைகள் பற்றி கேள்விப்பட்டு அப்போது கல்கத்தாவில் இருந்த பலர் அவரைப் பார்க்க வந்தனர். இவர்களுள் நரேந்திரநாத் தத்தா எனப்பட்ட சுவாமி விவேகானந்தர் குறிப்பிடத்தக்கவர். நாட்கள் செல்லச் செல்ல, அவரைப் பார்க்க வருவோரின் கூட்டம் அதிகரித்துக்கொண்டே சென்றது. அவர் நாள் முழுவதும் அவர் சீடர்களுடன் ஆன்மீகம் பற்றிய விவாதங்கள் புரிவது சர்வசாதாரணமானது. அப்போது அவரை வந்து அடிக்கடி சந்தித்த மகேந்திரநாத் குப்தா, தினமும் அவர் கூறுபவற்றையும், அவர் புரிந்த விவாதங்களைப் பற்றியும் வீட்டுக்குச் சென்றவுடன் தன் டயரியில் குறிப்பெடுத்துக் கொண்டார். இந்த குறிப்புகளே, பின்னாட்களில் The Gospel of Sri Ramakrishna என்ற பெயரில் தொகுக்கப்பட்டது. இது தமிழில் ராமகிருஷ்ணரின் அமுத மொழிகள் என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.ராமகிருஷ்ணரின் கடைசி நாட்களில் தொண்டைப் புற்றுநோய் அவரைத் தாக்கியது. அவருடைய சீடர்கள் அவரை கல்கத்தாவின் அருகில் உள்ள காசிப்பூர் என்ற இடத்தில் வைத்து வைத்தியம் செய்தனர். ராமகிருஷ்ணரின் உயிர், 1886 இதே ஆகஸ்ட் 16 அன்று அவர் உடலை விட்டு பிரிந்தது.
ராமகிருஷ்ணர் பொன்மொழிகள்
"மனம்தான் ஒருவரை ஞானியாகவோ அல்லது அறியாமையாகவோ, கட்டுண்டவராகவோ அல்லது விடுதலையாக்கவோ செய்கிறது."
மனித வாழ்க்கையின் குறிக்கோள், 'இறுதி யதார்த்தத்தை' உணர்ந்துகொள்வதாகும், அது மட்டுமே மனிதனுக்கு உயர்ந்த நிறைவையும் நித்திய அமைதியையும் கொடுக்க முடியும். இதுவே அனைத்து மதங்களின் சாரம்.
* கடின முயற்சி உள்ளவனுக்கு எல்லாம் உண்டாகும். அது இல்லாதவனுக்கோ ஒன்றும் கிடைக்காது.
* மனதை தூய்மையாக்கும் ஞானம் தான் உண்மையானது. மற்றதெல்லாம் வெறும் ஆரவாரமே.
* கனிதரும் மரங்களைப் போல இருங்கள். பழங்களின் கனத்தால் அவை வளைவுடன் தாழ்ந்து கிடக்கும். அதுபோல, பெருமை வேண்டுமானால் பணிவுடன் நடக்கப் பழகுங்கள்.
* மனிதப்பிறவி மகத்தானது. அரிய இந்த வாய்ப்பை பயன்படுத்தி கடவுளை அறிய முற்படுங்கள்.
* பணம் எவனுக்கு அடிமையோ, அவனே உண்மையான மனிதன்.
* எல்லா மனிதர்களிடமும் கடவுள் இருக்கிறார். ஆனால், கடவுளிடத்தில் எல்லா மனிதர்களும் இல்லை. இதுதான் மனிதன் துன்பப்படுவதற்குக் காரணம்.
* பிறருடைய குற்றங்களைக் காண்பதில் நேரத்தைப் போக்குபவன் வாழ்நாளை வீணாகக் கழிக்கிறான்.
* நான் செய்கிறேன் என்ற அகங்காரத்தை விடுத்து செயலாற்றுங்கள். அத்தகைய நிலையை அடைந்து விட்டால் கடவுள் அருள் கிடைப்பது உறுதி.
* முதலில் கடவுளைத் தேடுங்கள். பின்னர் உலகப் பொருள்களைத் தேடுங்கள். இதற்கு மாறாக ஒருபோதும் நடக்காதீர்கள்.
* கடவுள் எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்ற உணர்வு வந்து விட்டால் பாவம் செய்யும் எண்ணம் மறைந்து போகும்.
இரண்டு வகையான மக்கள் மட்டுமே சுய அறிவை அடைய முடியும்: கற்றலில் சிறிதும் சிக்காதவர்கள், மற்றொருவர் அனைத்து சாஸ்திரங்களையும் படித்துவிட்டு, தங்களுக்கு எதுவும் தெரியாது என்பதை உணர்ந்தவர்கள்.
உங்கள் நம்பிக்கை மட்டுமே உண்மையானது, மற்றவர்களின் நம்பிக்கை பொய்யானது என்று ஒருபோதும் நம்பாதீர்கள். உருவம் இல்லாத கடவுள் உண்மையானவர் என்பதையும், உருவம் கொண்ட கடவுளும் உண்மையானவர் என்பதையும் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். பின்னர் எந்த நம்பிக்கை உங்களை ஈர்க்கிறதோ அதை பின்பற்றுங்கள்.
மனத் தூய்மை என்பது ‘இறுதி யதார்த்தத்தை’ அடைவதற்கு இன்றியமையாத நிபந்தனையாகும்; உண்மையான தூய்மை என்பது காமம் மற்றும் பேராசையிலிருந்து விடுபடுவது. வெளிப்புற அனுசரிப்புகள் அத்தனையும் இரண்டாம் நிலை முக்கியத்துவம் வாய்ந்தவை.
புனித நூல்களில் பல நல்ல வாசகங்கள் காணப்படுகின்றன, ஆனால் அவற்றைப் படிப்பதால் ஒரு மதம் மாறாது.