For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

ராஜீவ் காந்தி நினைவு தினம்...சோனியா, ராகுல், கார்கே அஞ்சலி!

01:04 PM May 21, 2024 IST | admin
ராஜீவ் காந்தி நினைவு தினம்   சோனியா  ராகுல்  கார்கே அஞ்சலி
Advertisement

1991 இதே மே 21ஆம் தேதி இரவு சரியாக 10:21 மணிக்கு தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார், அவரை கொன்றவரும் பலியானான். தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த இடத்தில் முப்பது வயதான ஒரு பெண், சந்தன மாலையை அணிவிப்பதற்காக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு அருகில் சென்றார். அவர் கால்களைத் தொடுவதற்காக அந்த பெண் கீழே குனிந்தார், அப்போது காதுகளை செவிடாக்கும் பெரும் சப்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது.ஸ்ரீபெரும்புதூரில் குண்டுவெடித்ததும், அந்த இடத்தில் இருந்த தமிழ்நாடு காங்கிரசின் ஜி.கே.மூப்பனார், ஜெயந்தி நடராஜன், வாழப்பாடி ராமமூர்த்தி ஆகியோர் ராஜீவ் காந்தியை தேடி அலைந்தார்கள். புகை சற்று அடங்கிய பிறகு ராஜீவ் காந்தியின் உடல் தெரிந்தது. பூமியை நோக்கி அவருடைய உடல் குப்புறக் கவிழ்ந்து கிடந்தது. அவரது மண்டை பிளந்து கிடந்தது. சிதறிக்கிடந்த ராஜீவின் மூளை, மரணத்தின் இறுதி கணங்களை நெருங்கிக் கொண்டிருந்த ராஜீவின் பாதுகாப்பு அதிகாரி பி.கே. குப்தாவின் காலடியில் கிடந்தது.

Advertisement

இந்த துயர நிகழ்வுக்கு பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் ஜி.கே மூப்பனார் இவ்வாறு கூறினார், "வெடிப்பு சப்தம் கேட்டவுடனே அனைவரும் ஓடத் தொடங்கினார்கள். காயமடைந்து கீழே விழுந்தவர்களும், இறந்து போனவர்களும் என சிதைந்த உடல்களே என் முன்னால் இருந்தன. அப்போது ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு அதிகாரி பிரதீப் குப்தா உயிருடன் இருந்தார். அவர் என்னை பார்த்து ஏதோ சொல்ல முயன்றார், ஆனால் வாயிலிருந்து வார்த்தைகள் குழப்பமாக வெளிப்பட்ட நிலையிலேயே, என் கண் முன்னரே அவரது உயிர் பிரிந்தது. ராஜீவ் காந்தியை யாரிடமாவது ஒப்படைக்க வேண்டும் என்று விரும்பினார் என்று தோன்றியது. அவரது தலையை தூக்க முயன்றேன், ஆனால் கையில் சதையும், ரத்தமுமாக கொழகொழவென்று வந்தது, உடனே துண்டை எடுத்து மூடினேன்" என்று அந்த கொடுமையான சம்பவத்தை மூப்பனார் நினைவு கூர்ந்திருந்தார்.

Advertisement

மூப்பனார் இருந்த இடத்திற்கு சற்றுத் தொலைவில் நின்றிருந்த ஜெயந்தி நடராஜன் திகைத்துப் போய் அதிர்ச்சியில் சிலையாக உறைந்து நின்றார். அந்த கணத்தைப் பற்றி பிறகு ஒரு நேர்காணலில் ஜெயந்தி நடராஜன் இவ்வாறு கூறினார்: "போலிஸ் விலகி ஓடியது, முதலில் திகைத்து நின்ற நான், அந்த சடலங்களுக்கு இடையில் ராஜீவ் காந்தி இருக்கமாட்டார் என்ற நம்பிக்கையுடன் சுற்றும் முற்றும் பார்த்தேன். முதலில் என் கண்ணில்பட்டது பிரதீப் குப்தா. அவரது முழங்கால் அருகே தரையில் கிடந்த ஒரு தலையை பார்த்தேன்., இருந்தது... "ஓ மை காட், திஸ் லுக்ஸ் ராஜீவ்" என்ற வார்த்தைகள் என்னையறிமால் வாயில் இருந்து வெளிவந்தன. அந்த படுகொலை சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இதை அடுத்து ஸ்ரீபெரும்புதூரில் அவர் உயிரிழந்த இடத்தில் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

இதே போல் டெல்லியில் அவரது தாத்தா ஜவஹர்லால் நேரு, தாய் இந்திரா காந்தி, சகோதரர் சஞ்சய் காந்தி, ஆகியோர் அடக்கம் செய்யப்பட்டுள்ள ’வீர் பூமி’ என்ற இடத்தில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இன்று அவரது 33வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, வீர் பூமியில் உள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

மேலும் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”அப்பா, உங்கள் கனவுகள், என் கனவுகள்.. உங்களது அபிலாஷைகளே எனது பொறுப்புகள். உங்களது நினைவுகள், இன்றும் என்றும், எப்போதும் என் இதயத்தில் இருக்கிறது” என பதிவிட்டுள்ளார். அதோடு, குழந்தை பருவத்தில் விமான நிலையத்தில் தனது தந்தையுடன் இருந்தபோது, எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் வைக்கப்பட்டுள்ள ராஜீவ் காந்தி புகைப்படத்திற்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூரில் உள்ள உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்திலும் காங்கிரஸ் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட தினமான, மே 21 தீவிரவாத எதிர்ப்பு தினமாக ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement