ராகுல் =நம் தேசத்தின் நம்பகத்தன்மையை, உண்மையை, உற்சாகத்தை, பண்பாட்டுக் கூறுகளை முன்நகர்த்தும் பெயர்!
அவர் சின்னஞ்சிறுவனாக இருந்தபோது வெடிவைத்துத் தகர்க்கப்பட்டு சுக்கு நூறாகச் சிதறிக்கிடந்த தந்தையைப் பார்த்தார், அவர் ஒரு சராசரி மனிதனாக இருந்திருந்தால் இந்த மண்ணின் மீது அவருக்கு கடும் வெறுப்பு இயல்பாகவே வந்திருக்கக்கூடும். என்ன காரணம் என்று இன்று வரை முழுமையாக அறியப்படாத வகையில் நம்முடைய அன்புக்குரிய தந்தை கண்காணாத நிலத்தில் படுகொலை செய்யப்பட்டிருந்தால் நாம் பொதுவாகவே அந்த நிலத்தின் மீதும் அங்கிருப்பவர்கள் மீதும் கடும் வெறுப்புறுவது இயல்பாக நிகழும். ஆனால், அவர் ஒருபோதும் அப்படி நடந்து கொள்ளவில்லை, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவராக அவர் வளர்ந்து கொண்டிருந்த காலத்தில் கூட அவர் இந்த நிலத்திற்கு பலமுறை வந்தார், இந்த நிலத்தின் மக்கள் மீது அன்பு கொண்டவராக இருந்தார்.
இந்தியாவில் மிக அதிகம் ட்ரோல் செய்யப்பட்ட மனிதர்களில் ராகுல் காந்தியும் ஒருவர், அவரை "பப்பு" என்று நிஜமான பப்புக்கள் அழைத்தார்கள். அவரது தாயாரின் மீதும், சகோதரியின் மீதும் தொடர்ந்து கீழ்த்தரமான பரப்புரைகளை இந்துத்துவ வலதுசாரி அமைப்புகள் முன்னெடுத்தது. கட்சியை வழிநடத்தும் அவரது திறனை உள்ளூர் நரிகளை வைத்தே கேள்விக்கு உள்ளாக்கினார்கள். ஆனால், ராகுல் தனது வழக்கமான ஆழ்ந்த நம்பிக்கையுடன் கூடிய புன்னகையை விட்டு விடவில்லை, சில நூறாண்டுகள் இந்த தேசத்தை தலைமையேற்று வழிநடத்திய தலைமைப் பண்பின் தொடர்ச்சியான, அடையாளமான உறுதியையும், சமநிலையையும் அவர் ஒருபோதும் கைவிடவில்லை. தனக்கு ஏற்பட்ட அவமானங்களை அவர் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொண்டு அதற்கு எதிர்வினை ஆற்றவில்லை. மாறாக, அரசியல் களத்தில் எளிய மக்களின் பக்கமாக நிற்கும் போது பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டு அதிகாரத்தை வளைக்கும் கிழட்டு நரிகளின் கொக்கரிப்பை தனது புன்சிரிப்பால் எதிர்கொண்டார்.
ஆனால், தான் போகிற பாதையை அவர் தெளிவாக வரைந்து கொண்டார். இந்த தேசத்தின் உண்மையான முகங்களான எளிய உழைக்கும் மக்களிடம் அவர் தன்னை இணைத்துக் கொண்டார். அழுக்கேறிய உடலோடு தேசமெங்கும் பெரிதாக எந்தக் குற்றச்சாட்டையும் யார் மீதும் வைக்காத வெள்ளந்தி மனிதர்களை அவர் அழுத்தமாக பெருகும் அன்போடு அரவணைத்துக் கொண்டார். 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தபிறகு, நம்பிக்கையோடு இருந்த மூத்த தலைவர்களே மனமுடைந்து சோர்வுற்றிருந்தார்கள், ஆனால், ராகுல் காந்தி கட்சியின் நம்பிக்கையை மீட்டெடுத்தார். வெற்றியின் போது தலைமைப் பொறுப்பேற்பதற்கும், தோல்விகளின் போது ஏற்றுக் கொள்வதற்கும் இடையிலான முதிர்ச்சியை அவர் வெளிப்படுத்தினார். தலைமைப்பண்பு என்பது வழிகாட்டுதல், பொறுப்பேற்றல் மற்றும் உறுதியோடு இருத்தல் என்பதற்கு சாட்சியாக அவர் காட்சியளித்தார்.
கட்சியை மட்டுமில்லாமல் நாட்டின் முன்னேற்றத்தின் மீதும், இறையாண்மையின் மீதும், மதச்சார்பற்ற தன்மையின் மீதும் இன்னும் நம்பிக்கை கொண்டிருக்கும் இளைஞர்களுக்கும் அவர் புதிய வெளிச்சம் பாய்ச்சினார். பாரதீய ஜனதாக் கட்சி மட்டுமில்லை, இந்தியாவின் சேவகர் என்று போலி முத்திரையுடன் நவீன மார்க்கெட்டிங் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தலைவரைப் போலத் தோற்றமளிக்கும் நரேந்திர மோடிக்கு கூட ராகுல் காந்தியை அவர் முன்வைக்கும் கருத்துக்களின் வழியாக எதிர்கொள்ளும் திறனில்லை. வலது சாரி இந்துத்துவக் கூடாரம் அவரைக் கண்டு அஞ்சியது, போலித்தனமில்லாத அவரது ஆவேசத் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வழிதெரியாமல் "பப்பு" "பப்பு" என்று நாடாளுமன்றத்தில் பேசுமளவுக்கு மாண்பை இழந்தார்கள்.
ராகுலுக்கு எதிராக இன்றுவரை அவர்கள் தடுப்பாட்டம் மட்டுமே ஆடுகிறார்கள். தொடர்புடைய யாரும் தொடுக்காத வழக்கொன்றை குஜராத் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் மூலமாக அவர்கள் தூசி தட்டினார்கள். மானுட மாண்பிழந்த இந்துத்துவ வாதிகளின் அவதூறுகளை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கணம் நீதிமன்றங்கள், ராகுலுக்கு எதிராக அதிகபட்ச தண்டனை வழங்குவதில் அதீத ஆர்வம் காட்டின. ஆனால், நாட்டு மக்கள் அவரை நெடுங்காலமாகப் பார்க்கிறார்கள், அவரது பாசாங்கில்லாத உண்மையான தேசத்தின் மீதான அக்கறையை மெல்ல மெல்ல அவர்கள் உணரத் துவங்குகிறார்கள். உணர்வுகளைத் தூண்டி மதவெறியாட்டம் போடும் போலி தேசபக்தர்களான பாரதீய ஜனதாக் கட்சியினரின் உண்மையான முகத்தை வலுவான ஆதாரங்களுடனான அவரது பேச்சும், அறிக்கைகளும், ஊடக நேர்காணல்களும் வெளிச்சம் போடத் துவங்கின.
2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஆளும் பாரதீய ஜனதாவுக்கு எதிரான அவரது அதிரடி ஆட்டத்தால் உள்ளுக்குள் நடுங்கினாலும், மீசையில் மண் ஒட்டாதவர்களைப் போல ஜாம்பவான்கள் என்று கருதப்பட்ட நரேந்திர மோடியும், அமீத் ஷாவும் கூட பாவனை செய்தார்கள். நாடாளுமன்றத்தில் நாட்டின் பிரதமரை ஒரு இளம் தலைவராக அவர் கட்டி அணைத்துக் கொள்ள முயற்சித்ததைக் கூட அவர்கள் அரசியல் என்று கள்ளாட்டம் ஆடினார்கள். பிரதமரே ராகுலின் அந்த நேர்மையான, பாசாங்கற்ற உண்மையான அணைப்பை விரும்பவில்லை. ராகுலின் அந்த உண்மைத்தன்மை கொண்ட அணைப்புக்கு நரேந்திர தாமோதரதாஸ் மோடி எந்தவகையிலும் தகுதியானவர் இல்லை. கடந்த காலத்தின் தவறுகளில் இருந்து அவர் எப்போதும் பாடங்களைக் கற்றுக் கொண்டு அதே தவறுகளை கட்சி திரும்பவும் செய்யாமல் சரியாக வழி நடத்தினார்.
எப்போதும் ஒரு வகுப்பறையில் இருக்கும் துடிப்புள்ள இளைஞனைப் போல பாடங்களைக் கற்றுக் கொள்பவராக அவர் இப்போதுமிருக்கிறார். பல்வேறு தரப்புகளுடனான உறவுகளை தொடர்ந்து மேம்படுத்துபவராக அவர் இயங்கினார், கடந்த 5 ஆண்டுகளில் காங்கிரஸ் தலைமையில் பல்வேறு மாநிலங்களில் புதிய கூட்டணிகள் உருவாகின, கூட்டணியின் மாண்பைக் காப்பவராக, பேரம் பேசுபவராக அவர் இல்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலின் பொது புதிய தலைமுறையின் நெறியாளர் "தொகுதிப் பங்கீடு குறித்து திமுகவுடன் என்ன பேசினீர்கள்?, எத்தனை சட்டமன்றத் தொகுதிகள் கேட்டீர்கள்?" என்று கேட்டபோது, "தொகுதிப் பங்கீடுகள் முடிவாகாமல் இருக்கும் சூழலில் ஊடகங்களில் இதுகுறித்துப் பேசுவது அநாகரீகமானது" என்று அந்த சேனலின் டீ.ஆர்.பி மோகத்தில் மண்ணள்ளிப் போட்டார் .பழைய, செயல்படாமல் முடங்கிப் போயிருக்கிற தலைவர்களை ஓய்வுக்கு அனுப்புவதிலும், புதிய செயல்படும் இளைஞர்களை கட்சிக்குள் உள்ளீடு செய்வதிலும் ராகுல் தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டார், இயலாது என்று நினைத்த சில விஷயங்களை அவர் நிகழ்த்திக் காட்டினார்.கட்சியின் தலைமைப் பொறுப்பில் காந்தி குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே இருக்க முடியும் என்று திடமாக நம்பிய பலரையும் தலைகீழாக விழ வைத்தார். நீண்ட காலமாக கட்சியில் நிலைத்து வழிகாட்டிய சாஹேப் மல்லிகார்ஜுன கார்கேயை நீண்ட பாரம்பரியமிக்க காங்கிரஸ் கட்சியின் தலைவராக கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் அடங்கிய தேர்வுக் குழுவின் மூலம் நாட்டு மக்களுக்கு அறிவித்தார்.
அடுத்த தலைமுறையின் சார்பில் சஷி தாரூர் போட்டியில் இருந்தார். அது ஒரு ஆரோக்கியமான வழிகாட்டும் விதத்திலான போட்டியாக இருந்தது. 2014 மற்றும் 2019 நாடாளுமன்றத் தேர்தல்களில் தோல்வியைத் தழுவிய போதும் பெரும்பான்மையான மக்கள் இனி காங்கிரஸ் கட்சி அழிந்துவிடும் என்று நினைத்த போது, அமைதியோடும், வலிமையோடும் நின்று அசைக்க முடியாது என்ற இருமாப்பில் இருந்த கர்நாடக பாரதீய ஜனதாவை அலற விட்டார். எத்தகைய சூழலிலும் நம்பிக்கை இழக்காமல் போராடும் ஆற்றலை அவர் பெற்றிருந்தார். கட்சியை மீட்டு நம்பகத்தன்மை கொண்ட ஒரு நவீன அரசியல் ஆற்றலாக மாற்றுவதில் ராகுல் ஏறத்தாழ வெற்றி பெற்றிருக்கிறார். சில கணக்கிடப்பட்ட சவால்களை பரீட்சார்த்த முறையில் மேற்கொள்ளவும் அவர் தயங்குவதில்லை, தோல்விகளின் போது புகார் பட்டியல்களைத் தயாரிக்காமல், துணிவோடு பொறுப்பேற்கப் பழக வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அவரே தலைமைப் பொறுப்பில் இருந்து விலகிக் காட்டினார்.
அவர் தேசத்தின் மீது ஆழமான அக்கறை கொண்டவராக இருக்கிறார் என்பதை அவரது அந்த முதிர்ச்சியான செயல்பாடு உணர்த்தியது. தோல்வி குறித்த அச்சத்தை நீக்கி புதிய உற்சாகத்தை அவர் கட்சிக்கு வழங்கி இருக்கிறார். பழம்பெரும் நம்பிக்கைகள், மந்தமான செயல்பாடுகள் போன்றவற்றைக் கடந்து புதிய வழிமுறைகளையும், செயல்திட்டங்களையும் அவர் தீட்டத் துவங்கினார், "பாரத் ஜோடோ" அவரது விடாமுயற்சி மற்றும் நேர்மறை அலைகளை நாடெங்கும் பரப்பும் புதிய திட்டமாக இருந்தது. எதிர் முகாம்களில் இருந்தவர்கள் காங்கிரசின் இந்த புதிய எழுச்சியைக் கண்டு பொருமினார்கள், வழக்கமான தனிநபர் அவதூறுகளை அள்ளி அவர் மீது வீசினார்கள். அவற்றை அவர் வழக்கம் போல இடது கையால் சிக்சர் அடித்து அதிரடி ஆட்டம் ஆடினார். அதே வேளையில் நிதானமிழக்கவில்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக ராகுல் காந்தி, பல்வேறு தளங்களில் ஏமாற்றப்படும் எளிமையான இந்த தேசத்தின் மக்களுக்காக எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாத ஒரு மேன்மையான இதயம் கொண்டவராக இருக்கிறார். அவரது கண்களில், அவரது உடல் மொழியில், அவரது குரலில் உண்மையும், நம்பகத்தன்மையும் இருக்கிறது, அதுதான் இன்றைய இந்தியாவின் தேவை. இத்தனைக்கும் அவர் இல்லாத தேநீர்க்கடைகளில் இருந்து வரும் சொற்பமான மக்கள் வரிப்பணத்தில் "ரேபான்" கண்ணாடி அணிந்து வந்தவரில்லை, 200 ஆண்டுகளாக இந்த தேசத்தின் மக்களோடு நெருக்கமாக வாழ்ந்த தலைவர்களின் வழித்தோன்றல்.
பாரதீய ஜனதா கட்சி நினைப்பது போல அத்தனை எளிதாக அவரை வீழ்த்திவிட முடியாது, அவர் இந்த தேசத்தின் மக்களோடு நிற்கிறார், தீரத்தோடு மக்களின் குரலை, மக்களுக்கான குரலை அவர் நாடாளுமன்றத்தில் ஒரு சிங்கத்தைப் போல் நின்று கர்ஜித்தார். தோல்வியின் பிடியில் மெல்ல மெல்ல வீழத்துவங்கி இருக்கும் பிரிவினைவாத மதப் பிற்போக்குவாதிகள், இனி என்றாவது ஒரு நாள் "ராகுல்" என்கிற பெயரை மாண்புமிகு பிரதமர் அவர்களே என்று அழைக்க வேண்டியிருக்கும் என்பதை உணரத் துவங்கி இருக்கிறார்கள். அதற்கு அவர் முழுமையான தகுதியுடையவரும் கூட.
ராகுல் தேசத்தின் நம்பகத்தன்மையை, தேசத்தின் உண்மையை, தேசத்தின் உற்சாகத்தை, தேசத்தின் பண்பாட்டுக் கூறுகளை முன்நகர்த்தும் பெயர், நமது நிலத்தில் அவரது தந்தையை சிதறடித்து அவருக்கு வழங்கப்பட்ட அநீதியை நாமே முன்னின்று துடைப்போம் என்று ஏனோ எனது ஆழ்மனம் சொல்கிறது. அப்படியே ஆகட்டும்.