ராகுல்: இந்திய யாத்திரை இரண்டாம் கட்ட பயண லோகோ வெளியீடு!
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான ராகுல் காந்தி மணிப்பூர் மாநிலம் இம்பால் நகரில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பை வரை நடைபயணம் மேற்கொள்வார் என காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த மாதம் 27-ந்தேதி (டிசம்பர்) சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தகவல் தொடர்பு பொதுச்செயலாளர் (பொறுப்பு) ஜெய்ராம் ரமேஷ் மற்றும் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் ஆகியோர் நேற்று நடைபயணத்திற்கான லோகோ மற்றும் முழக்கம்,அதன் டேக்லைன் மற்றும் குறிக்கோளை வெளியிட்டார்கள்.
.காங்கிரஸ் கட்சியை மக்களிடம் மீண்டும் கொண்டு சேர்க்கும் வகையில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தலைமை தாங்கி நடத்தினார். இதில், பல தரப்பட்ட மக்களிடம் உரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார் ராகுல் காந்தி. எதிர்கட்சி தலைவர்கள், முன்னாள் அரசு அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினர் இந்த நடைபயணத்தில் கலந்து கொண்டனர். ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், சமூக ஆர்வலர் ஹர்ஷ் மந்தர், எழுத்தாளரும் காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி, மனித உரிமை ஆர்வலர் மேதா பட்கர் உள்ளிட்ட பலர் நடைபயணத்தில் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட நடைபயணம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், ஹரியானா, டெல்லி, இமாச்சல பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களை கடந்து இறுதியில் காஷ்மீரில் நிறைவடைந்தது. நடுவில் இடைவெளியுடன் மொத்தம் 146 நாட்களுக்கு நடந்த இந்திய ஒற்றுமை பயணம் கடந்தாண்டு ஜனவரி 30ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த ஒற்றுமை பயணத்தால் மக்கள் மத்தியில் ராகுல் காந்திக்கு நல்ல பெயர் கிடைத்திருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
இதை அடுத்து இரண்டாவது கட்ட பாத யாத்திரையை நாட்டின் கிழக்கு பகுதியில் இருந்து மேற்கு பகுதி வரையில் நடத்த ராகுல் திட்டமிட்டுள்ளார். அதன்படி, மணிப்பூர் முதல் மும்பை வரையிலான இந்த பாத யாத்திரையை வரும் 14-ம் தேதி ராகுல் காந்தி தொடங்க உள்ளார். இந்த யாத்திரைக்கு ‘பாரத் ஜோடோ நியாய யாத்திரை’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் இந்த யாத்திரை மணிப்பூரின் இம்பாலில் தொடங்கி நாட்டின் 15 மாநிலங்கள் வழியாக சென்று மும்பையில் நிறைவடைகிறது. மொத்தம் 6,713 கி.மீ. தூரம் கொண்ட இந்த யாத்திரை பேருந்துகளிலும், நடைபயணத்திலும் மேற்கொள்ளப்படும்.இந்த சூழலில், ராகுல் மீண்டும் தொடங்கவுள்ள நடைபயணத்தின் (பாரத் ஜோடோ நியாய யாத்ரா) லோகோ மற்றும் “நியாய கா ஹக் மில்னே தக்” என்ற டேக்லைனையும் கார்கே வெளியிட்டார்.
இதன் பின் பேசிய கார்கே , ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ நாட்டின் அடிப்படை சமூக, அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினைகளில் கவனம் செலுத்தும். நாடாளுமன்றத்தில் பிரச்சனைகளை எழுப்புவதற்கு அரசு வாய்ப்பளிக்காததால், இந்த யாத்திரையை நடத்துவதாகவும் தெரிவித்தார். மேலும் மணிப்பூரில் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றது. அங்கு செல்ல பிரதமர் மோடிக்கு நேரம் இல்லை, ஆனால், மோடி எங்க சென்றாலும் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார். காலை விழித்தவுடன் கடவுளை தரிசிப்பது போல் எங்கு பார்த்தாலும் மோடியின் புகைப்படம் தான் இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர்களை அச்சுறுத்துவதற்காக அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற அமைப்புகளை பிரதமர் மோடி தவறுதலாக பயன்படுத்துகிறார் என்றும் சொன்னார்