ராகுல் காந்தி அசாமை தொடர்ந்து மணிப்பூர் மக்களை சந்திக்கவுள்ளார்.
அசாமில் வெளுத்து வாங்கிய கனமழையால் மாநிலத்தில் 28 மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் 24 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர். மழைக்கு 58 பேர் பலியாகி உள்ளனர். 68,769 ஹெக்டேர் விவசாய நிலங்கள் நீரில் முழ்கி உள்ளன. 269 நிவாரண முகாம்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர். பிரம்மபுத்ரா நதியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அபாய அளவை தாண்டி நீர் ஓடுவதால் கரையோர மக்களுக்கு மீண்டும் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மற்ற நதிகளிலும் வெள்ளப்பெருக்கால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், அசாம் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திப்பதற்காக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று விமானம் மூலம் சில்சார் விமான நிலையம் வந்தடைந்தார். அவரை காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் லத்திபூர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் மக்களை ராகுல் காந்தி நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது அடிப்படை வசதிகள் அனைத்தும் சரியாக கிடைக்கிறதா? என மக்களிடம் ராகுல் கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து, அம்மாநில அரசியல் தலைவர்களை சந்தித்துப் பேசிய ராகுல் காந்தி, மாநில கவர்னர் பூபன் குமார் போராவை சந்தித்து நிவாரண பணிகளை விரைந்து முடிக்க மனு கொடுத்தார்.
மணிப்பூரில் துப்பாக்கிச்சூடு
அசாமை தொடர்ந்து வன்முறையால் பாதிக்கப்பட்டிருக்கும் மணிப்பூர் மக்களை ராகுல் காந்தி சந்திக்கவுள்ளார். கலவரம் வெடித்த ஜிரிபாம் பகுதிக்கு சென்று அவர் பார்வையிடவுள்ளார். அதன்பின் நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்துப் பேசவுள்ள அவர், அம்மாநில அரசியல் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார்.
இதனிடையே அதிகாலையில் ஜிரிபாம் மாவட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு குக்கி-ஸோ மற்றும் மைதேயி ஆகிய இரு சமூகங்களைச் சேர்ந்த உறுப்பினர்களின் சில வீடுகளுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அதிகாலை 3 மணியளவில், அப்பகுதியில் இருந்த புறக்காவல் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், ஆயுதங்களுடன் இருந்த இருவரை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து அவர்கள் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
ராகுல் காந்தி 3வது முறையாக மணிப்பூர் செல்ல உள்ளார். பிரதமர் மோடி ஒருமுறைகூட மணிப்பூருக்கு பயணிக்கவில்லை என்று காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்ற பின் ராகுல் காந்தி இன்று முதல்முறையாக மணிப்பூருக்கு பயணம் மேற்கொள்ளும்போது அங்கு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.