கூட்டத்தில் ஒருவரான எதிர்கட்சித் தலைவர்!
டெல்லியில் இன்று நடந்த சுதந்திர தினவிழாவில் எதிர்கட்சி தலைவரான ராகுல்காந்தி பங்கேற்றார். இதை அடுத்து 10 ஆண்டுகளுக்கு பிறகு சுதந்திர தினவிழாவில் கலந்து கொண்ட முதல் எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி என்ற அடையாளத்தையும் அடைந்தார் . 2014 முதல் 2024 வரை எதிர்கட்சி தலைவர் பதவியை யாரும் வகிக்க வில்லை. ஏனென்றால் எதிர்கட்சிகள் யாருக்கும் தேவையான அளவு எம்.பி.க்கள் இல்லை.
அண்மையில் ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்று எம்.பி.க்களின் எண்ணிக்கையை உயர்த்தியது. இதனால் ராகுல்காந்தி கடந்த ஜூன் 25-ந்தேதி எதிர்க்கட்சி தலைவராக தேர்வு பெற்றார். எதிர்க்கட்சி அந்தஸ்துடன் செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்றார்.
ஆனால் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர்களுக்கு நிகரான மரியாதை வழங்கப்படவில்லை என கண்டனம் எழுந்துள்ளது. நிகழ்வில் கூட்டத்தில் கடைசியில் இருந்து 2வது வரிசையில் ஒருவராக அமர்ந்திருந்த ராகுல் காந்தியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
முன்னதாக நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளை எக்ஸ் தளத்தில் காணொலி ஒன்றை பகிர்ந்த ராகுல் காந்தி கூறியிருப்பதாவது:–
“நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள். சுதந்திரம் என்பது நமக்கு வெறும் வார்த்தை அல்ல, மிகப்பெரிய பாதுகாப்புக் கவசமாகும். இது அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது. உண்மை பேசும் திறன், கனவுகளை நிறைவேற்றும் நம்பிக்கையை வெளிப்படுத்தும் சக்திதான் சுதந்திரம், ஜெய் ஹிந்த்” எனத் தெரிவித்துள்ளார்.
செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றும் நிகழ்வில் பங்கேற்ற பின், காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்விலும் ராகுல் காந்தி பங்கேற்றார்.