ரேபரேலியிலும் ராகுல் போட்டியிட மனு தாக்கல்!- பிரியங்கா ஏன் போட்டியில்லை தெரியுமா?
நடப்பு பார்லிமெண்ட் தேர்தலில் 2019ஆம் ஆண்டு போல இந்த முறையும் ராகுல் காந்தி 2 தொகுதிகளில் போட்டியிடுவார் என கூறப்பட்டு வந்தது. அதன்படி, கேரளா வயநாட்டில் போட்டியிட்டு அங்கு தேர்தலும் முடிந்துவிட்டது.
ஏழு கட்டங்களாக நடைபெறும் பொதுத் தேர்தலின் ஐந்தாம் கட்ட தேர்தல் நடைபெறும் பாராளுமன்ற தொகுதிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்று (மே 20 ஆம் தேதி) கடைசி நாளாகும்.இந்நிலையில், 2004ஆம் ஆண்டு முதல் 2024 வரையில் சோனியா காந்தி வெற்றி பெற்று இருந்த உத்தரபிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் இந்த முறை யார் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று காலை ரேபரேலி தொகுதியில் தனது தாய் சோனியா காந்திக்கு பதில் மகன் ராகுல் காந்தி போட்டியிடுகிறார் என காங்கிரஸ் தலைமை அறிவித்தது.
இதனை தொடர்ந்து தற்பொழுது உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். வேட்புமனு தாக்கல் செய்யும் பொழுது, கட்சித் தலைவருடன் அவரது சகோதரியும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி மற்றும் ரேபரேலி தொகுதி எம்பியான சோனியா காந்தி ஆகியோர் உடன் இருந்தனர். வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்வில் , காங்கிரஸ் தொண்டர்களோடு I.N.D.I.A கூட்டணியில் அங்கம் வகிக்கும் சமாஜ்வாடி கட்சியினரும் கலந்து கொண்டனர்.
ஆனால் பலருக்கும் அமேதியிலிருந்து ரேபரேலிக்கு ராகுல் மாறியதை விட, பிரியங்கா காந்திக்கு ஏன் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதே யோசனையாக இருந்தது. இதற்கு காங்கிரஸ் கட்சி ஒரு வித்தியாசமான பதிலை அளித்துள்ளது. அதாவது, பிரியங்கா காந்தியின் பங்கு ஒரு தொகுதியோடு, முடிந்துவிடக் கூடாது என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'பிரியங்கா தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். பிரதமர் மோடியின் பொய்களை தனி ஆளாய் மவுனமாக்கி வருகிறார். 1985 மார்ச்சில் எஸ்டேட் வரி ஒழிப்பு குறித்து பிரதமர் பரப்பி வந்த வதந்திகளுக்கு அவர் கடும் பதிலடி கொடுத்தார். அதனால்தான் பிரியங்கா ஒரு தொகுதியோடு நின்றுவிடக் கூடாது என்பது முக்கியமானது. அவர் நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார்.' என குறிப்பிடப்பட்டுள்ளது.