சுப்ரீம்கோர்ட் நீதிபதிகளாக ஆர்.மகாதேவன், என்.கோட்டீஸ்வர் சிங் பதவியேற்பு!
ஜுலை 11-ம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட 5 பேர் அடங்கிய கொலீஜியம் நீதிபதிகள் கோட்டீஸ்வர் சிங் மற்றும் மகாதேவன் ஆகியோரின் பெயர்களை மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது. கொலீஜியத்தின் பரிந்துரையை ஜூலை 16-ம் தேதி மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. நீதிபதி மகாதேவனின் பெயருடன் கோட்டீஸ்வர் சிங்-ன் பெயரை பரிந்துரைத்தப்பின்னர் கொலீஜியம் கூறுகையில், “உச்ச நீதிமன்ற நீதிபதியாக அவர் (சிங்) நியமிக்கப்பட்டால், வடகிழக்கு மாநிலங்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கும், குறிப்பாக மணிப்பூர் மாநிலத்தில் இருந்து உச்ச நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட முதல் நீதிபதியாக அவர் இருப்பார்” என்று தெரிவித்திருந்ததை ஜனாதிபதி ஏற்றுக் கொண்ட நிலையில் இன்று, மகாதேவன், கோடிஸ்வர் சிங் ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இதன் மூலம் சுப்ரீம் கோர்ட்டில் காலியாக இருந்த 2 பணியிடங்களும் நிரப்பப்பட்டு விட்டன. தலைமை நீதிபதியையும் சேர்த்து சுப்ரீம் கோர்ட்டில் 34 நீதிபதிகள் பணியாற்றுகின்றனர். அதே போன்று சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியாக கிருஷ்ணகுமார் பொறுப்பேற்றுக் கொண்டார். சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக மகாதேவன் நியமனமானதை அடுத்து ஐகோர்ட் தலைமை நீதிபதி மாற்றம் செய்யப்பட்டார். ஐகோர்ட் தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் நியமிக்கப்படும் வரை கிருஷ்ணகுமார் பொறுப்பு வகிப்பார்.
வரும் செப்படம்பர் 1ம் தேதி நீதிபதி ஹிமா ஹோலி ஓய்வு பெறும் வரை உச்ச நீதிமன்றம் அதன் 34 நீதிபதிகளுடன் இயங்கும். அவரைத் தொடர்ந்து தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் நவம்பர் 10-ம் தேதி ஓய்வு பெறுகிறார். நீதிபதிகள் ஏ.எஸ் போபண்ணா மற்றும் அனிருத்தா போஸ் ஆகியோரின் ஓய்வுக்கு பின்னர் மேலும் இரண்டு இடங்கள் காலியாகும் என்பது குறிப்பிடத்தக்கது .