For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

ஆர்.எம்.வீரப்பன் காலமானார்!

07:11 PM Apr 09, 2024 IST | admin
ஆர் எம் வீரப்பன் காலமானார்
Advertisement

ஆர்.எம்.வீ. என அழைக்கப்படும் இராம.வீரப்பன் புதுக்கோட்டை மாவட்டத்தில் வல்லத்திராக்கோட்டை கிராமத்தில் பிறந்தவர். எம்.ஜி.ஆர் 1953ல் "எம்.ஜி.ஆர் நாடக மன்றம்" மற்றும் "எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்" என்ற பெயரில் சினிமா நிறுவனம் ஆரம்பித்தார். இந்த இரண்டு நிறுவனத்திற்கும் இராம. வீரப்பனை நிர்வாக பொறுப்பாளராக நியமித்தார். இராம. வீரப்பன் 1963ல் "சத்யா மூவிஸ்" என்ற பெயரில் தனியாக சினிமா பட நிறுவனம் ஆரம்பித்தார்.

Advertisement

முன்னதாக புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் பெரும்பாலான திரைப்படங்களுக்கு விநியோகஸ்தராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன். அவரது நேர்மையைப் பற்றி நன்றாக அறிந்தவர் ஏ.வி.எம் மெய்யப்ப செட்டியார். அவர் உதவி செய்ய ஆர்எம்வீரப்பன் தயாரிப்பாளர் ஆனார். அவர் மட்டும் உதவி செய்யலேன்னா என் வாழ்க்கையில நான் தயாரிப்பாளராகவே ஆகியிருக்க முடியாது என்று சொல்லி இருந்தார் ஆர்.எம்.வீரப்பன்.1963 அக்டோபர் மாதம் விஜயதசமி அன்று சத்யா மூவீஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். மக்கள் திலகம் எம்ஜிஆர் குத்துவிளக்கேற்றி அந்த நிறுவனத்தைத் தொடங்கி வைத்தார். அந்த நிறுவனத்திற்கு ஏன் சத்யா மூவீஸ் என்று பெயர் வைத்தார் என்று தெரியுமா? அதற்கு ஆர்எம்.வீரப்பன் சொன்ன பதில் இதுதான்…!

Advertisement

எம்ஜிஆரின் அன்னை பெயர் சத்யா. நான் எம்ஜிஆருக்கிட்ட வேலை செய்றதுக்கு சில நாள்களுக்கு முன்னர் தான் அந்த அம்மையார் தவறி இருந்தார். எம்ஜிஆர் போன்ற தவப்புதல்வனைத் தமிழகத்துக்குத் தந்தவர் அந்த அம்மையார் தான். அதனால அவரோட பேரையே என் படக்கம்பெனிக்கு வைக்கணும்னு நான் விரும்பினேன். அதனால தான் அந்தப் பெயரை நான் வைத்தேன் என்றார்.

அப்போது எம்ஜிஆர் ராஜா காலத்துப் படங்கள் தான் நடித்துக் கொண்டு இருந்தார். அவரைத் தன்னோட படங்கள்ல வித்தியாசமாகக் காட்ட வேண்டும் என்று நினைத்தார். தன்னோட முதல் படத்தையே எம்ஜிஆரை வைத்து வித்தியாசமாக எடுக்க வேண்டும் என்று நினைத்தார். அந்த சமயத்தில் தான் கேம்ப்லர் என்ற இந்திப் படத்தை சின்னப்பா தேவர் போட்டுப் பார்த்தார். தேவர் ஒரு படத்தைப் பார்த்தார்னா நிச்சயமா அதுல விஷயம் இல்லாம இருக்காதுன்னு நினைத்தார் ஆர்எம்.வீரப்பன்.
அதனால் அந்தக் கதையை வைத்தே எம்ஜிஆர் படத்தை எடுக்க நினைத்தார் ஆர்எம்.வீரப்பன். அந்தக் கதை பிடித்துவிடவே அந்தப் படத்தோட உரிமையை வாங்கினார் அவர். வாங்கிய பிறகு அவருக்குக் கொஞ்சம் சந்தேகம் வந்தது. இந்தப் படத்தைத் தயாரிக்கலாமா என்று. அதனால் அந்தப் படத்தை அப்போது பிரபல வசனகர்த்தாவாக இருந்த முரசொலி மாறனுக்குப் போட்டுக் காட்டினார்.

அப்போது முரசொலி மாறன் இந்தக் கதையைக் கொஞ்சம் மாற்றி எடுத்தா நிச்சயமா வெற்றி பெறும் என்றார். அதுதான் தெய்வத்தாய் படம். இந்தப்படத்திற்கு வசனம் எழுதியவர் கே.பாலசந்தர். இயக்குனராக பி.மாதவனை நியமித்தார். எம்எஸ்.விஸ்வநாதனை இசை அமைக்கவும், வாலியை பாடல் எழுதவும் வைத்தார். 18.7.1964 ல் இந்தப் படம் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் சக்கை போடு போட்டது. எம்ஜிஆருக்கு ஜோடியாக சரோஜா தேவி நடித்தார். நம்பியார், அசோகன், நாகேஷ், பண்டரிபாய் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்தில் தான் மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், இந்த புன்னகை என்ன விலை, வண்ணக்கிளி சொன்ன மொழி, ஒரு பெண்ணைப் பார்த்து என சூப்பர்ஹிட்டான பாடல்கள் இடம்பெற்றன.

எம்ஜிஆரிடம் வேலைக்கு சேர்ந்து பத்தே ஆண்டுகளில் அவரை வைத்தே படம் எடுக்கும் அளவுக்கு முன்னேறியவர் ஆர்.எம்.வீரப்பன் என்று சொல்லலாம். எம்ஜிஆரை வைத்து நான் ஆணையிட்டால், காவல்காரன், கண்ணன் என் காதலன், ரிக்ஷாக்காரன், இதயக்கனி ஆகிய சூப்பர்ஹிட் படங்களை எடுத்தது இந்த நிறுவனம் தான்.
எம்ஜிஆருக்குப் பின் ரஜினியின் தொடக்க காலக்கட்டத்தில் பல்வேறு படங்களை தயாரித்து வசூலை குவித்தது ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவீஸ் நிறுவனம். 1981-ல் வெளியான ரஜினியின் ‘ராணுவ வீரன்’ தொடங்கி, ‘மூன்று முகம்’, ‘தங்க மகன்’, ‘ஊர்க்காவலன்’, ‘பணக்காரன்’, ‘பாட்ஷா’ ஆகிய படங்களையும், கமலை வைத்து, ‘காக்கி சட்டை’, ‘காதல் பரிசு’ ஆகிய படங்களை தயாரித்தார். இதில் ‘பாட்ஷா’ படம் வெளியான சமயத்தில் தென்னிந்திய சினிமாவில் அதிகபட்ச வசூல் சாதனையை குவித்த படம் என்ற சாதனையை பெற்றது.

1977 - 1986 வரை மாநிலச் சட்ட மேலவை உறுப்பினராக இருந்த இவர், 1986 தமிழக சட்டப்பேரவை உறுப்பினராகவும் பணியாற்றினார். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் அமைச்சரவையில் பதவி வகித்தார். முதலில் ஜெயலலிதாவை எதிர்த்து ஒதுங்கி இருந்த இவர், அதன்பின்னர்தான் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் பணியாற்றினார். சிறி துகாலத்தில் அதிமுகவில் இருந்து விலகிய இவர் புது கட்சியைத் தொடங்கினார். அந்தக் கட்சிக்கு எம்.ஜி.ஆர் கழகம் என்று பெயரிட்டார். பின்னர் வயது மூப்பு காரணமாக முழுவதுமாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

இந்தநிலையில் இவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை மோசமான மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருந்தாலும் இரண்டு நாட்களாக அவரது உடல் மோசமான நிலையிலேயே இருந்து வந்தது. இதனையடுத்து வீரப்பன் இன்று காலை உயிரிழந்ததாக மதியம் அறிவிக்கப்பட்டது. இவருடைய இறப்புக்கு பல அரசியல் கட்சி தலைவர்களும் நிர்வாகிகளும் வேதனை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் இவருடைய மகன் வெளிநாட்டில் இருப்பதால் நாளை இறுதி ஊர்வலம் நடக்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

அடிசினல் ரிப்போர்ட்:

பெரியார், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர். என்று பல தலைவர்களோடு பழகியவர். தி.க., தி.மு.க., அண்ணா தி.மு.க. என்று திராவிட கட்சிகளிலேயே பயணித்தவர். அமைச்சராக இந்தியா முழுவதும் அறியப்ப்பட்டவர். ‘’இந்தப் புகழ் அனைத்தும் என்னுடைய காலத்திற்குப் பிறகு எத்தனை காலம் நிலைக்கும், எத்தனை பேரிடம் நிலைக்கும் என்பது ஒரு கேள்விக்குறியே. எனவே என் காலத்திற்குப் பிறகு என்னை யார் நினைக்கிறார்களோ இல்லையோ என் வல்லத்திரா கோட்டை கிராமத்து மக்கள் என்னை நினைக்க வேண்டும்’’ என நினைத்தார் ஆர்.எம்.வீ.

அதற்காக தன் சொந்தப் பொறுப்பில் சில காரியங்களைச் செய்தார். தாயார் தெய்வானை அம்மையாரின் அஸ்தியை வைத்து நினைவு மண்டபம் எழுப்பினார். ஒரு ஏக்கர் அளவு கொண்ட அந்த பகுதிக்கு அன்னை தெய்வானை அம்மாள் நினைவு மண்டப வளாகம் என்று பெயரிட்டார். அங்கே 'இராம.வீரப்பன் அறிவகம்' என்ற பெயரில் எம்.ஜி.ஆர். நூலகம் ஒன்றை அமைத்தார். அந்த நூலகம் தொடர்ந்து செயல்படவும் ஏற்பாடு செய்தார்.

புதுக்கோட்டை - அறந்தாங்கி பிரதான சாலையில் வல்லத்திரா கோட்டை கிராமத்தை அடைந்தவுடன் அனைவர் பார்வையிலும் படும்படி அந்த அறிவகமும் நூலகமும் அமைந்திருக்கிறது. அழகிய பூங்காவாக பராமரிக்கப்பட்டு வருகிறது. ‘‘என் தாயாரின் நினைவிடத்திற்கு அருகிலேயே என் நினைவிடமும் அமைய வேண்டும் என்ற விருப்பத்தில் அதற்கான இடத்தை ஒதுக்கி, என் குடும்பத்தாரிடமும் என் விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறேன்’’ என ஏற்கெனவே வீரப்பன் சொல்லியிருக்கிறார். அதன்படி அங்கேதான் வீரப்பனின் உடல் அடக்கம் செய்யப்படும்.

‘‘இப்போது நான் வாழ்க்கையின் அந்தி வேளைக்கு வந்து விட்டேன். இன்னும் எத்தனை காலம் எனக்கு விதிக்கப் பட்டிருக்கிறது என்பதை அறியேன். எனக்குக் கடன் இல்லை. என் குடும்பத்தினர் யாரையும் கடனாளியாக வைக்கவில்லை. இந்த மன நிறைவோடும், அமைதியோடும் இறுதிவரை உழைத்துக் கொண்டே வாழ வேண்டும். இதுவே என் விருப்பம்" என சொல்லியிருந்தார் வீரப்பன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement