தமிழகத்தில் குவாண்டம் கம்ப்யூட்டிங் மையம்?
இந்த மார்கழி விசித்திரமானது. திருப்பாவை, குவாண்டம் கம்ப்யூட்டிங், இவ்விரண்டின் மேலும் ஒரே நேரத்தில் எனக்கு ஆர்வத்தை தூண்டியிருக்கிறது.! குவாண்டம் கம்ப்யூட்டிங் பற்றிய நுனிப்புல் ஆர்வத்துக்கு காரணம் பி.டி.ஆர். நேற்று உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிடிஆர் குவாண்டம் கம்ப்யூட்டிங் பற்றி பேசியிருந்தார். அதாவது சென்னை வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர் மாநாட்டின் ஒரு பகுதியாக செயற்கை நுண்ணறிவு மற்றும் டீப் ஃபேக் தொடர்பான தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசிய போது ,``செயற்கை நுண்ணறிவு மூலம் பல புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகும் அதே சமயம் வேலை வாய்ப்புகளை அழிக்கும். டீப் பேக் ( deep fake) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தற்போது பல போலியான செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. இது ஜனநாயகத்திற்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும். செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட சில கொள்கைகளை தமிழக அரசு கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்திய அரசு இரண்டு குவாண்டம் கணினியியல் மையங்களுக்கு நிதியுதவி அளிக்கிறது. வடகிழக்குக்கு ஏற்கனவே ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளது. மற்றொன்றை தமிழ்நாட்டுக்கு ஒதுக்குவதற்கு ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகிறோம்``என்று பேசி இருந்தார்.
எனவே புதுப்பிக்கப்பட்ட ஆர்வத்துடன் சாட்-ஜிபிடியை அணுகி எனக்கு புரிய வை என்றேன்.சாட்-ஜிபிடி என்னை பத்தாங்கிளாஸ் மாணவனாகக் கருதி எளிமையான விளக்கங்களைக் கொடுத்தது.
தற்போதைய கம்ப்யூட்டிங் என்பது பைனரியாக பூஜ்யம் (அ) ஒன்று என்பதை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது - Bits. குவாண்டம் கம்ப்யூட்டிங் என்பது 0 (அ) 1 (அ) இரண்டும் கலந்தது என மூன்று நிலைகளிலும் இயங்கவல்லது - Cubits.
அதாவது Cubit என்பது சக்தி (அ) சிவன் (அ) அர்த்தநாரீஸ்வரம் என்று திருவிளையாடல் பாணியில் நான் குறித்துவைத்துக் கொண்டிருக்கிறேன். சுண்டிவிடப்பட்ட நாணயம் நிற்கும் வரையில் பூவா தலையா என தீர்மானிக்க முடியாது. நிற்கும் வரையில் அது இரண்டுமாகத்தான் இருக்கும். இரண்டுமாக இருக்கும்போது அதில் ஒரு ஆற்றல் இருக்கும். கியூபிட் இந்த ஆற்றலை உடையது. கியூபிட்டின் ஆற்றலில் இயங்கும் குவாண்டம் கம்யூட்டிங்கின் வேகம் அசுரத்தனமானது.
நம் கையில் உள்ள ஒரு பிடி மணலை தற்போதைய கம்ப்யூட்டர்கள் அடையாளம் காண்பதற்குள், குவாண்டம் கம்யூட்டர்கள் ஒவ்வொரு துகளாக அலசி ஆராய்ந்துவிடும். மூலக்கூறுகளை அதி வேகத்தில் குலுக்கிப்போட்டு புதுப்புது காம்பினேஷனில் மருந்துகள், புதிய பொருட்கள், புதிய துரித கணக்கிடும் முறைகளை உருவாக்கலாம். ஆனால் சக்தி வாய்ந்த குவாண்டம் கம்ப்யூட்டிங்கை கையாள்வது மிகச் சிரமம். சூறைக்காற்றில் பனித்துகள்களை கையாள்வது போல மிகக் கடினம் என்கிறது கூகுள் பார்ட் (Google Bard).
ஆக நம்ம தமிழ்நாடு ”குவாண்டம் கம்ப்யூட்டிங் மையம்” ஒன்றை ஆவலுடன்/ விரைவில் எதிர்பார்க்கிறேன்.