2024ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்ற அணிகள்!!
ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு அடுத்து மூன்றாவது வடிவமாக இடம் பிடித்த இந்த டி20 போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்ததை அடுத்து தற்போது டி20 போட்டிகள் நிறைவே நடைபெற்று வருகின்றன. அது தவிர்த்து உலகெங்கிலும் டி20 லீக் தொடர்களும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சர்வதேச அணிகள் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை மோதும் வகையில் டி20 உலக கோப்பை தொடரானது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இதுவரை நடைபெற்று முடிந்த 8 டி20 உலககோப்பை தொடர்களில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தலா இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளன. அதை தவிர்த்து இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தலா ஒரு முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. இந்நிலையில் ஐசிசியின் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடரில் 20 அணிகள் பங்கேற்க உள்ளன. அதில் ஐசிசி டி20 தரவரிசையில் முதல் 10 இடங்களில் உள்ள அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன.
அந்த வகையில் ஏற்கனவே போட்டியை நடத்தும் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நேரடியாக அந்த தொடருக்கு தகுதி ஆகியுள்ளது. அதேபோன்று கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் முதல் எட்டு இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் தரவரிசை அடிப்படையில் தகுதி பெற்றன.
இந்நிலையில் மீதமுள்ள 8 இடங்களுக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் ஆசிய அணிகளுக்கு இடையேயான தகுதி சுற்று போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய ஓமன் மற்றும் நேபாள் ஆகிய இரண்டு அணிகளும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றுள்ளன. மேலும் ஆப்பிரிக்க பிராந்திய அணிகளுக்கு இடையிலான தகுதிச் சுற்று ஆட்டத்தில் ஏற்கனவே நமீபியா அணி தகுதி பெற்ற நிலையில் தற்போது உகாண்டா அணியும் தகுதி பெற்றுள்ளது.மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் குறித்த எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து இந்த தொடரில் விளையாடவுள்ள அணிகளின் விவரம் :
மேற்கிந்திய தீவுகள், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, கனடா, நேபாளம், ஓமன், நமீபியா மற்றும் உகாண்டா
ஆகிய மொத்தம் 20 அணிகள் மோதவுள்ளன, நான்கு குழுக்களாக பிரிக்கப்படும் இந்த அணிகளில் புள்ளிபட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெறும்.
சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெறும் 8 அணிகளும் மீண்டும் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு மோதவுள்ள நிலையில் குழுவில் முதல் இரண்டு இடத்தைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதி ஆட்டத்தில் விளையாடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.