தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

புத்தர் வைக்கும் குட்டு!

04:25 PM Oct 13, 2023 IST | admin
Advertisement

வ்வொருவருக்கும் அவரவர் தாய்மொழி பற்றிய பெருமை உண்டு. உலகிலேயே அவரவர் மொழிதான் உயர்ந்தது என்கிற பெருமிதமும் உண்டு.ஆனால் புத்தரோ ‘மொழிகள் வறுமையானவை’ என்று மொழிப் பெருமை பேசுவோரின் தலையில் பலமாக ஒரு குட்டு வைக்கிறார்.

Advertisement

புத்தர் ஏன் அப்படிச் சொன்னார்? புத்தரின் பகுத்தறிவு உபதேசத்தைக் கேட்டுக் கொண்டிருந்த ஒருவனுக்கு அவர்மேல் மிகுந்த கோபம் வந்து விட்டது. அதனால் புத்தரின்மேல் காறித் துப்பிவிட்டுச் சென்றான். இதைக் கண்ட புத்தரின் அணுக்கச் சீடனான ஆனந்தனுக்கும் ஏக கோபம். அதனால் துப்பிய மனிதனை அடிக்க எழுந்தான்.

புத்தரோ, ‘ஆனந்தா, பொறு. அந்த மனிதருக்கு, என்மீதான கோபத்தை முழுமையாக வெளிக்காட்டுவதற்கு நமது மொழியில் வார்த்தைகள் கிடைக்க வில்லை. அதனால்தான் காரித் துப்பி விட்டுச் செல்கிறார். வார்த்தைகள் கிடைத்திருந்தால் வார்த்தைகளால்தான் பேசியிருப்பார். இப்படிச் செய்திருக்க மாட்டார். ஆக, மொழிகள்தான் வறுமையானவை’ என்றார்.

Advertisement

காரித் துப்பிய அந்த மனிதர் மறுநாளும் புத்தரைப் பார்க்க வந்தார். வந்தவர், புத்தரின் கால்களில் விழுந்து, முதல் நாள் தான் செய்த தவறுக்காக மன்னிக்கும்படி கண்ணீர் மல்க வேண்டினார். ‘தவறு செய்தவர் நேற்றைய மனிதர். அவர் நேற்றோடு போய்விட்டார். இன்று புதிய மனிதராக வந்திருக்கும் - தவறே செய்யாத உன்னை எப்படி நான் மன்னிக்க முடியும்?’ என்ற புத்தர், ஆனந்தனைப் பார்த்தார்.

‘ஆனந்தா, பார்த்தாயா…நேற்றும் இவருக்கு வார்த்தைகள் கிடைக்க வில்லை. அதனால் காரித் துப்பினார். இன்றும் வார்த்தைகள் முழுமையாகக் கிடைக்க வில்லை. அதனால்தான் என் காலில் விழுந்து கண்ணீர் விட்டார். ஆக, மொழிகள்தான் எத்தனை வறுமையானவை’ என்றார் புத்தர்.

யோசித்துப் பாருங்கள்…. உலகில் கோபத்தில் காரித் துப்பாத மனிதன் எவனாவது இருக்கின்றானா? ஆக, எல்லா மொழிகளும் வறுமையானவைதானே. கோபத்தில் மட்டும்தானா? காதலில்கூட கண்கள் பேசுகிற வார்த்தைகள் எந்த மொழியிலும் இருப்பதில்லை. அதனால்தான் வள்ளுவனும் ‘கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல’ என்றான்.

வள்ளுவனுக்கு மட்டுமா? எழுத உட்கார்ந்தால் வார்த்தைகளெல்லாம் வந்து மொய்க்கிற கம்பனுக்கும் அதே கதிதான். சீதையோடும் இலக்குவனோடும் கானகம் நோக்கிச் சென்ற இராமனின் அழகைச் சொல்ல சொற்கள் கிடைக்காமல் எப்படியெல்லாம் தவிக்கிறான் பாருங்கள்...

‘வெய்யோன் ஒளி தன் மேனியின் விரி சோதியின் மறைய
பொய்யோ எனும் இடையாளொடும் இளையானொடும் போனான்
மையோ மரகதமோ மறி கடலோ மழை முகிலோ
ஐயோ இவன் வடிவென்பது ஓர் அழியா அழகுடையான்’
வார்த்தைப் பஞ்சத்தில் கம்பனே “ஐயோ” என்று அலறுகிறானென்றால், புத்தர் சொன்னதுபோல, மொழிகள் வறுமையானவைதானே!

செ. இளங்கோவன்

Tags :
AngryBuddharKambanlanguagemother language
Advertisement
Next Article