புதிய தலைமுறை தொலைக்காட்சி, புதிய பரிமாணத்தில், புதுப்பொலிவுடன் பீடுநடை போடுகிறது!
புதிய தலைமுறை நேயர்களுக்கு வணக்கம்.
11 ஆண்டுகளாக நெருக்கமாக, இறுக்கமாக... உங்கள் கரம்பிடித்து நடந்து வரும் புதிய தலைமுறை தொலைக்காட்சி, இன்று முதல், புதிய பரிமாணத்தில் கால் பதிக்கிறது. புதிய பயணத்திலும் உங்களோடு, உங்கள் ஆதரவோடு நடைபோடக் காத்திருக்கிறது.
தமிழ் செய்தித் தொலைக்காட்சி உலகில் 2011ஆம் ஆண்டு புதிய பாதையைத் தொடங்கிய புதிய தலைமுறை, தற்போதைய ஊடக உலகின் மாற்றத்திலும் தன்னை புதுப்பித்துக் கொள்ளும் வகையில் புதுமை படைக்க இருக்கிறது. ஆம். செய்தி ஒளிபரப்பில் இன்று தன்னை மறுநிர்மாணம் செய்து கொள்கிறது, புதிய தலைமுறை. கண்ணையும் கருத்தையும் கவரும் கலைநயமிக்க புத்தம் புதிய அரங்கம், வெளிப்படைத்தன்மை, தொழில்நுட்ப புதுமைப்படைப்பு மற்றும் நேயர்களின் பங்களிப்பை பறைசாற்றப் போகிறது. தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒளிபரப்பில் 11 ஆண்டு இடைவெளியில் மீண்டுமொரு சகாப்தம் தொடங்குகிறது. புதிய, வெளிப்படையான, கவரக்கூடிய அரங்கமைப்பின் மூலம் ஊடக ஒருங்கிணைப்பு மற்றும் சமரசமற்ற, ஒருசார்பற்ற செய்திப் படைப்பு, தெளிவான ஆய்வுகளை வழங்கும் ஆர்வம் மீண்டுமொரு முறை வெளிப்பட இருக்கிறது. திறந்தவெளி செய்தியரங்கின் வாயிலாக, செய்தியறையின் நேர்மறை சூழல், ஒருங்கிணைப்பு மற்றும் குழுமனப்பான்மையை வெளிப்படச் செய்வதாக இருக்கும். அதன்மூலம் செய்தியைப் பார்க்கும் நேயர்களுக்கு புத்துணர்வான அனுபவம் கிடைக்கும்.
தமிழ் செய்தித் தொலைக்காட்சிகளிலேயே மிக நீண்ட மின்னணு திரையின் மூலம், நேயர்களை வியக்கச் செய்யும் அனுபவத்தை புதிய தலைமுறை அளிக்கவுள்ளது. நவீன தொழில்நுட்ப ஒளிபரப்புகளான AR, VR மூலம் சிக்கலான யோசனைகளைகூட எளிமையானதாக்கி செய்திப் படைப்பில் புதிய தரத்தை நிர்ணயிக்கப் போகிறது புதிய தலைமுறை. துல்லிய பரிமாணங்களில் இடம்பெற்றுள்ள கேமராக்கள் மூலம் எண்ணற்ற கோணங்கள் மற்றும் கருத்தைக் கவரும் நடைபேட்டிகள்... இவை எல்லாவற்றுடன் புத்தம் புதிய லோகோவும் அறிமுகமாகிறது.
நவீன தொழில்நுட்பத்துடன் நேயர்களுக்கு செய்திகளை வழங்குவதை ஒரு நிறுவனமாக எப்போதும் தாம் விரும்புவதாக புதிய தலைமுறையின் நிறுவனத் தலைவர் P சத்தியநாராயணன் பெருமிதமாகத் குறிப்பிட்டார். இந்த புதிய மாற்றங்களை நேயர்கள் பாராட்டி வரவேற்பதோடு தொடர்ந்து இதேபோல் ஆதரவளிப்பார்கள் என்றும் சத்தியநாராயணன் நம்பிக்கை தெரிவித்தார்
தலைமைச் செயல் அதிகாரி N.C. ராஜாமணி கூறுகையில், வெளிப்படைத்தன்மையை பிரதிபலிப்பதாக புதிய அரங்கு இருப்பதாகவும் காட்சிகளை கதையாக சொல்வதற்கு வாய்ப்பளிப்பதன் மூலம் செய்தியை வழங்குவதில் புரட்சியை புதிய தலைமுறை ஏற்படுத்தும் என்றார்
புதிய தலைமுறையின் செய்தி இயக்குநர் S ஸ்ரீனிவாசன் கூறுகையில், பயனாளர் விரும்பும் வடிவங்களில் செய்தியை வழங்குவது மட்டுமின்றி, ஊழியர்களுடன் கலந்துரையாடும் வகையில் செய்தியறையை உருவாக்குவதும் இந்த மாற்றத்தின் முக்கிய நோக்கம் என்றார்.