ஸ்டேட் வங்கி சேர்மனை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு போடுங்க மை லார்ட்!
“இந்திய நாட்டில் மிகப் பெரிய வங்கி சந்தேகத்துக்குரிய தனது பரிவர்த்தனைகளை மறைப்பதற்காக மோடி அரசு எதையோசொல்லி அல்லது காட்டி மிரட்டி பயன்படுத்துகிறது” என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை வெளியிட கூடுதல் அவகாசம் வேண்டி பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், பொது ஜனங்கள் விவரங்களை தாக்கல் செய்யும் வரை எஸ்பிஐ சேர்மனை அரெஸ்ட் செய்ய உத்தரவு போடுமாறு காட்டமாக தெரிவித்துள்ளது.
தேர்தல் நன்கொடை பத்திரங்கள் பற்றிய விவரங்களைத் தேர்தல் ஆணையத்திடம் நாளை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா சமர்ப்பிக்க வேண்டும். ஜூன் 30 ஆம் தேதி வரை அவகாசம் கேட்டு ஸ்டேட் வங்கி உச்ச நீதி மன்றத்தை அணுகி இருக்கிறது. இது எதிர்பார்த்த ஒன்றுதான்.தேதியைக் கவனியுங்கள் ஜூன் 30. அதற்குள் தேர்தல் முடிந்து விடும். இதற்கு ஸ்டேட் வங்கி கூறும் காரணங்கள்:
1. பத்திரங்கள் குறித்த விவரங்கள் ரகசிய மொழியில் எழுதப்பட்டு இரண்டு பாதுகாப்பான இடங்களில் தனித் தனியாக வைக்கப்பட்டிருக்கின்றன. நன்கொடையாளரின் விவரங்களை ரகசியமாக வைத்திருக்கும் பொருட்டு மையப்படுத்தப்பட்டப் புள்ளி விவரங்கள் இல்லை.
2. மொத்தம் 29 கிளைகளில் 44,434 ஆவணங்களைத் திரட்டி ஒப்பு நோக்கி மொழியாக்கம் செய்து விவரங்களை இறுதி செய்ய ஏராளமான உழைப்பும் அவகாசமும் தேவைப்படுகிறது.
எஸ்பிஐ-யின் இந்த நடவடிக்கை குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மோடி அரசின் மீது குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “தேர்தல் பத்திரங்களைப் பொறுத்தவரை அது வெளிப்படைத் தன்மை இல்லாதது. ஜனநாயக விரோதமானது என்பதே காங்கிரஸின் நிலைப்பாடு. மோடி அரசு, தேர்தல் பத்திரங்கள் மூலமாக செய்த தங்களின் சந்தேகத்துக்குரிய பரிவர்த்தனைகளை மறைப்பதற்காக நாட்டின் மிகப் பெரிய வங்கியை பயன்படுத்துகிறது.
மோடி அரசின் கருப்பு பணத்தை மாற்றும் திட்டமான தேர்தல் பத்திரம் திட்டம், அரசியல் சாசனத்துக்கு எதிரானது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மீறுவது, சட்டவிரோதமானது எனக் கூறியிருந்த உச்ச நீதிமன்றம் நன்கொடையாளர்களின் விவரங்களை மார்ச் 6-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
ஆனால், பாஜக அந்தத் தகவல்கள் ஜூன் 30-ம் தேதிக்கு பின்னர் வெளியிடப்படுவதையே விரும்புகிறது. தற்போது இருக்கும் மக்களவையின் பதவிக் காலம் ஜூன் 16-ம் தேதியுடன் நிறைவடைகிறது. எஸ்பிஐ வங்கி ஜூன் 30-ம் தேதி தகவல்கள் பறிமாறப்படுவதை விரும்புகிறது.
இந்தத் திட்டத்தின் மூலமாக பாஜகதான் அதிக பலனடைந்துள்ளது. இந்த மறைமுகமான தேர்தல் பத்திரங்களுக்கு பதிலாக பிரதமர் நரேந்திர மோடியின் கூட்டாளிகளுக்கு நெடுஞ்சாலை, துறைமுகங்கள், விமான நிலையங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் போன்ற ஒப்பந்தங்கள் வழங்கப்பட்ட பாஜகவின் நிழல் உறவை அரசு வசதியாக மறைக்கப் பார்க்கிறதா?
காங்கிரஸின் முக்கியத் தலைவரும் வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவொன்றில், "நன்கொடை வியாபாரம் குறித்த விவரத்தை மறைக்க நரேந்திர மோடி தனது மொத்தப் படையையும் திணித்துள்ளார். தேர்தல் பத்திரங்கள் குறித்து நாட்டு மக்கள் அறிந்து கொள்வது அவர்களின் உரிமை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பின்னர் எதற்காக எஸ்பிஐ வங்கி தேர்தலுக்கு முன்பாக இந்த விவரங்களை வெளியிட விரும்பவில்லை?” என்று தெரிவித்துள்ளார்.
நன்கொடை வழங்கியவர்களின் 44,434 தானியங்கித் தரவுகளை 24 மணி நேரத்தில் வெளியிட்டு, அதை பொருத்தியும் பார்க்க இயலும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், எஸ்பிஐ-க்கு ஏன் கூடுதலாக 4 மாதங்கள் தேவைப்படுகிறது?
தேர்தல் பத்திரம் திட்டம் வெளிப்படைத் தன்மை இல்லாதது, ஜனநாயக விரோதமானது, சமநிலையை சீர்குலைக்கிறது என்பதில் காங்கிரஸ் கட்சி தெளிவாக உள்ளது. ஆனால் மோடி அரசு, பிரதமர் அலுவலகம் மற்றும் நிதியமைச்சகமும் பாஜகவின் கஜானாவை நிரப்புவதற்காக இந்திய ரிசர்வ் வங்கி, தேர்தல் ஆணையம், நாடாளுமன்றம் மூலம் எதிர்க்கட்சிகளை எல்லா சூழ்நிலைகளிலும் அழிக்கவே நினைக்கிறது. பாஜக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அழிக்க எஸ்பிஐ வங்கியை பயன்படுத்த நினைக்கிறது" என்று கார்கே தெரிவித்துள்ளார்.
ஆனால் முழுக்கவும் கணினி மயமாக்கப்பட்ட வங்கித் துறையில் எந்தவொரு புள்ளி விவரமும் சில நிமிடங்களில் கிடைக்கும். ஸ்டேட் வங்கி நிர்வாகம் சொல்வது பொய். மையப்படுத்தப்பட்ட புள்ளி விவரங்கள் இல்லை என்றால், 44,434 என்கிற எண் எங்கிருந்து கிடைத்தது? உண்மையாக இருந்தாலும் கூட, முழு விவரங்களையும் திரட்ட இரண்டு நாட்களுக்கு மேல் ஆகாது
விவரங்களைத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கும் வரை ஸ்டேட் வங்கி சேர்மன் தினேஷ்குமார் கரா, நீதிமன்றக் காவலில் வைக்கப்படுவார் என்று சுப்ரீம் கோர்ட் ஆணை பிறப்பித்தால், ஒரே நாளில் விவரங்கள் கிடைக்கும். சுப்ரீம் கோர்ட் இதனைச் செய்ய வேண்டும் என்று பலரும் உரத்தக்குரலில் கோரிக்கை வைக்கிறார்கள்.
நிலவளம் ரெங்கராஜன்