புனே: கார் ஓட்டி 2 பேர் உயிரை பறித்த சிறுவனுக்கு கட்டுரை எழுதும் தண்டனை!
போன ஞாயிறு அன்று புனேவில் 17 வயது மைனர் சிறுவன் கார் ஓட்டி விபத்து ஏற்பட்டதில் இருவர் உயிரிழந்த நிலையில், அச்சிறுவனுக்கு வெறும் 15 மணி நேரத்தில் ஜாமீன் வழங்கியுள்ள சம்பவம் பெரும் விமர்சனங்களை பெற்று வந்த சூழலில் இன்று (செவ்வாய்க்கிழமை) அந்த சிறுவனின் தந்தையை போலீஸார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் மாவட்டத்தில் அவரை போலீஸார் கைது செய்ததாக புனே காவல் துறை ஆணையர் அமிதேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம், புனேவில், கல்யாண் நகர் பகுதியில் 19 ஆம் தேதி அதிகாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இப்பகுதியில், 12 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன், மதுபோதையில் அதிவேகமாக Porsche என்ற காரை இயக்கி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், காரின் முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தில் பயணித்த ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றும் அனிஸ் துனியா, அஸ்வினி கோஸ்டா என தம்பதியின் மீது மோதி 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனே அந்த சிறுவனை பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதனயடுத்து, போலீசில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், சம்பந்தபட்ட சிறுவன், அவரின் தந்தை, அவருக்கு மதுபானம் வழங்கிய பார் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஒரு சில நிபந்தனைகளுடன் அச்சிறுவனுக்கு 15 மணி நேரத்திலேயே ஜாமீன் வழங்கியுள்ளார்.
நீதிபதி கொடுத்த நிபந்தனைகள் என்னவென்றால்,”ஏர்வாடா போக்குவரத்து காவலர்களுடன் 15 நாட்கள் போக்குவரத்து பணி செய்ய வேண்டும், சாலை விபத்தின் விளைவுகள் மற்றும் அதற்கான விளைவுகள் என்ற தலைப்பில் 300 வார்த்தையில் கட்டுரை எழுத வேண்டும். குடிப்பழக்கத்தை கைவிட மனநல ஆலோசனையுடன் கூடிய சிகிச்சை அளிக்க வேண்டும்.” என்பதுதான்.
இந்தவகையில், 2 உயிரிகளை பரித்த பிறகும் வெறும் 300 வார்த்தைகளின் கட்டுரை எழுதுவது எந்த வகையில் தண்டணையாக அமையும் என்று பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.இந்த சூழலில்தான் விபத்தை ஏற்படுத்திய அந்த சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், சிறுவனுக்கு மது வழங்கிய மதுபானக் கூடத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை வட்டாரங்கள் உறுதிபட தெரிவித்துள்ளன. அந்த வகையில் சிறுவனின் தந்தை மற்றும் மதுபானக் கூடத்தின் மீது சிறார் நீதிச் சட்டப்பிரிவு 75 மற்றும் 77-ன் கீழ் போலீஸார் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளனர்.