முதிய சமுதாயத்தைப் பாதுகாப்பது அவசியம்!
இயற்கை மாதுளை முத்துக்களை அழகழகாக மாதுளம் பழத்தில் அடுக்கி வைத்திருக்கிறது. பலாப்பழச் சுளைகளைப் பாதுகாப்பாக பலாப்பழத்தின் உள்ளே அடுக்கி வைத்திருக்கிறது. அதுசரி, மனித சமுதாயத்தின் நாகரிகத்தையும் பண்பாட்டையும் அது எங்கே பத்திரமாக அடுக்கி வைத்திருக்கிறது? வேறு எங்கே? நம் இல்ல முதியோர்களின் மனத்தில் தான் எல்லா நாகரிகங்களையும் பண்பாட்டையும் அது சேமித்து வைத்திருக்கிறது.காலம்காலமாக அவற்றைத் தொலைந்து போகாமல் காப்பாற்றுபவர்கள் வழிவழியாக வரும் நம் தேச முதியோர்களே. அறிவுரை சொல்லவும் வாழ்ந்து வழிகாட்டவும் முதியோர் இல்லாத தேசத்தில் கொலையும் கொள்ளையும் பிற பாவச் செயல்களும் பெருகும்.நம் தேசத்தில் இப்போது முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்தாகப் புள்ளி விவரங்கள் சொல்கின்றன. அப்படியானால் நம் தேசம் தனிமனித ஒழுக்கத்திலும் சமுதாய ஒழுக்கத்திலும் தலைசிறந்தல்லவா விளங்க வேண்டும்?
கட்டாயம் விளங்கும். அப்படி விளங்குவதற்கு நாம் முதியோர்களை மரியாதை கொடுத்துப் போற்ற வேண்டும். பெரியவர் என்று மரியாதையுடன் அழைக்கவேண்டிய சான்றோர்களை `பெரிசு` என்று ஜடப்பொருளைக் குறிப்பிடுவதுபோல் சொல்வது தொடங்கி இன்று பெரியவர்களுக்குச் செய்யப்படும் அவமரியாதை கொஞ்ச நஞ்சமல்ல. பின் தேசம் எப்படி உருப்படும்?இளைஞர்கள் நல்ல வழிகாட்டிகளை இழந்துவிட்டால் அவர்கள் எப்படி உருப்படுவார்கள்?`சிவன் கோயிலுக்குச் சென்றால் ஆடையை உதறிவிட்டு வரவேண்டும், ஒரு தூசியைக் கூடத் தவறுதலாக வீட்டுக்கு எடுத்துவரக் கூடாது` என்று முன்பு பெரியவர்கள் சொல்லிச் சொல்லி வளர்த்தார்களே? அதை இப்போதும் நாம் கடைப்பிடித்திருந்தால், கோயில் சிலைகள் திருடுபோகுமா? அரசியலில் இத்தனை லஞ்ச லாவண்யங்கள் பெருகியிருக்குமா?
முதியவர்களின் சொல்கேட்டு நடக்காததே இன்றுள்ள தனிமனித, குடும்ப, சமூக வாழ்வின் ஏராளமான சிக்கல்களுக்குக் காரணம். அறிவு வேறு. ஞானம் வேறு. அறிவு, படிப்பதால் வருவது. ஞானம், அனுபவத்தால் வருவது. முதியவர்கள் படித்தவர்களாய் இருந்தாலும் படிக்காதவர்களாய் இருந்தாலும் அவர்கள் கட்டாயம் ஞானம் நிறைந்தவர்கள். காரணம் வயது கூடக் கூட அவர்கள் இளையவர்களை விட அதிகமாய் வாழ்க்கையைப் படிக்கிறார்கள். அதனால்தான் ஞானத்தை மதிக்கும் வகையில் முதியவர்களை மதிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.ஒருவர் முனைவர் பட்டம் பெற்ற மேதாவியாக இருந்தாலும் அவரின் தாய் தந்தையர் எழுத்தறிவற்ற பாமரர்களாய் இருந்தாலும் அந்தப் பெற்றோர் கூடுதலாக வாழ்க்கைப் பாடத்தைப் படித்து அனுபவ ஞானம் பெற்றவர்கள். ஞானத்தின் முன் அறிவு மிக அற்பமானதே.
பள்ளிக் கூடத்தில் பயிலாது வாழ்க்கைப் பாடத்தைப் பயின்று பெரும் ஆன்மிக அனுபவ ஞானத்தைப் பெற்ற ராமகிருஷ்ண பரமஹம்சரை அதனால்தான் மெத்தப் படித்தவரான விவேகானந்தர் தனது குருவாய் ஏற்றுப் போற்றினார். வாழ்க்கை என்ற பல்கலைக் கழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் மேலே மேலே படித்துக்கொண்டே இருக்கிறார்கள் முதியவர்கள்.நம் கலாசாரத்தில் நம்மை விட முதியவர்களான தாய் தந்தையரைப் போற்ற வேண்டும் என்ற மரபு சொல்லப்பட்டிருக்கிறது. `மாதா பிதா குரு தெய்வம்` என்ற சொற்றொடரின் சரியான பொருள் மாதாவும் பிதாவும் குருவும் தெய்வங்கள் என்பதே. சீதை ராமனிடம் தான் வளர்க்கும் பெட்டைக் கிளிக்குப் பெயர் வைக்கச் சொன்னபோது, தன் வளர்ப்புத் தாயான கைகேயி எனப் பெயரிட்டு அழைத்தான் ராமன் என்கிறது ராமாயணம்.பெற்ற தாய் கோசலைக்கு இணையாக வளர்ப்புத் தாயர்களான கைகேயி, சுமித்திரை இருவரையும் மதித்தது ராமன் மனம். கர்ணனைப் பெற்றவள் குந்திதேவி. வளர்த்தவள் தேரோட்டியின் மனைவியான ராதை. கர்ணன் இறந்தபோது அவனின் வளர்ப்புத் தாய் ராதை அவன் மேலேயே விழுந்து தானும் உயிர்நீத்தாள் என்கிறது மகாபாரதம். வளர்த்த பாசம் அப்படிப்பட்டது.
பெற்றவர்களும் சரி வளர்த்தவர்களும் சரி, அந்த மூத்த குடிமக்கள் தங்கள் வாரிசுகளின் மேல் கொண்டுள்ள பாசம் ஈடு இணையற்றது. அந்தப் பாசத்தைக் கெளரவிக்கும் முறை, பதிலுக்கு அவர்கள் மேல் பாசம் செலுத்துவதே.முதியவர்கள் எதிர்பார்ப்பது இனிய சொல்லைத்தான். தங்களை வயதான காலத்தில் நன்கு பரமாரிக்கக் கூடிய குழந்தைகளைப் பெற்றவர்கள் பாக்கியம் செய்தவர்கள். அந்தக் குழந்தைகள் தங்களுக்கும் எதிர்காலத்தில் முதுமை காத்திருக்கிறது என்ற உண்மையை உணர்ந்து முதியவர்களிடம் இன்சொல் பேச வேண்டும். வினை விதைத்தவன் வினையறுப்பான். தினை விதைத்தவன் தினையறுப்பான். நாம் இன்று கனியிருப்பக் காய் கவராமல் இன்சொல் சொன்னால் எதிர்காலத்தில் நமக்கு முதுமை வரும்போது நம் செவிகள் இன்சொற்களையே கேட்கும்.நாம் பிறருக்கு என்ன செய்தோமோ அதுவே நமக்குத் திரும்பி வரும் என்பது ஒரு வாழ்க்கை நியதி.
இன்றைய இளைய தலைமுறைதான் நாளைய முதிய தலைமுறை ஆகிறது. முதியவர்கள் வானத்திலிருந்து வந்து குதிக்கவில்லை. நம்மிடையே இளைஞர்களாக வாழ்ந்தவர்கள்தான் முதியவர்கள் ஆகியிருக்கிறார்கள்.முதுமைப் பருவம் நமக்கும் காத்திருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும். முதுமை கூடக் கடவுள் அருளிருந்தால் தான் வரும். இளம் வயதிலேயே உலகை விட்டுப் போவோர் எத்தனையோ பேர்.எல்லோருக்கும் இறைவன் முதுமை என்ற வரத்தைக் கொடுப்பதில்லை.தலை நரைப்பதும், வழுக்கை விழுவதும் முதுமை என்கிற வரத்தைத் தந்த இறைவன், தான் அந்த வரத்தைத் தந்ததன் அடையாளமாக இடும் முத்திரைகள். அந்த முத்திரைகளைப் பெருமிதத்துடன் எல்லோருக்கும் காண்பிப்பதில் நமக்கென்ன கூச்சம்? தலைநரைப்பதை மைபூசி மறைப்பது தோற்றத்தில் இளமையைக் காண்பிக்கலாம், ஆனால் வயதால் உடலில் விளைந்துள்ள முதுமையை எப்படி மாற்ற முடியும்?ஏன் மாற்ற வேண்டும்? முதுமை என்னும் அரிய பரிசை ஆனந்தமாய் அனுபவிக்கலாமே?முதுமை கொண்டாடத் தக்கது. இளம் வயதிலேயே முதுமையை வேண்டிப் பெற்றார் அவ்வையார்.
முதியவர்கள் பேச்சில் நியாயம் இருக்கும் என மக்கள் கருதியதைத் தெரிவிக்கிறது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான, மூன்றுறையரையனார் எழுதிய பழமொழி நானூறு என்ற நூலில் வரும் ஒரு வெண்பா:
`உரைமுடிவு காணான் இளமையோன் என்ற
நரைமுது மக்கள் உவப்ப - நரைமுடித்துச்
சொல்லால் முறைசெய்தான் சோழன் குலவித்தை
கல்லாமல் பாகம் படும்!- இளையவனான சோழமன்னன் தன் தீர்ப்பை நம்ப வேண்டும் என்பதற்காக நரைத்த வேடத்தோடு முதிய தோற்றம் தாங்கித் தீர்ப்பு வழங்கினான் என்கிற வரலாற்றுச் சம்பவத்தைப் பதிவு செய்திருக்கிறது இந்த வெண்பா.
முதியவர்கள் சொன்னால் சரியாக இருக்கும் என்று அன்று மக்கள் நம்பினார்கள். அப்படியானால் முதியவர்களை எவ்வளவு தூரம் அவர்கள் மதித்திருப்பார்கள்? முதியவர்களுக்குப் பெருமதிப்பிருந்த அந்தப் பழைய காலத்தை நாம் இன்று மீட்டெடுக்க வேண்டும். வயோதிகர்களைப் பராமரிப்பது, இந்தியா தவிர்த்த பல தேசங்களில் அரசாங்கத்திற்குப் பெரும் செலவுதரும் செயல்.அங்கெல்லாம் இந்தியாவைப் போன்ற குடும்ப அமைப்பு கிடையாது. முதியவர்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தினுடையதே. இந்தியாவில் அரசாங்கத்திற்கு அந்தச் செலவை வைப்பதில்லை. முதியவர்களைக் குடும்பத்தினரே பராமரிக்கும் கலாசாரத்தைத் தொன்று தொட்டு நாம் பெற்று வந்திருக்கிறோம். வழிவழியாய் இத்தகைய கலாசார இழை அறுபடாமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஆதிசங்கரரும் பட்டினத்தாரும் துறவியரே என்றாலும் தங்கள் தாயைப் போற்றியிருக்கிறார்கள். நம் இந்தியத் துறவு நெறி, எல்லோராலும் தொழப்பட வேண்டிய துறவி, தன் தாயை மட்டும் தொழலாம் என்று கோட்பாடு வகுத்துள்ளது.
தாய் ஆர்யாம்பிகை இறந்தபோது மாத்ரு பஞ்சகம் எனத் தாய்மையைப் போற்றிக் கவிதை பாடினார் சங்கரர். பட்டினத்தார் தன் தாய் காலமானபோது,
`முந்தித் தவம் கிடந்து முந்நூறு நாள்சுமந்தே
அந்தி பகலாய் என்னை ஆதரித்தே - தொந்தி
சரியச் சுமந்துபெற்ற தாயார் தமக்கோ
எரியத் தீமூட்டு வேன்!`-என்பதுபோன்ற உள்ளத்தை உருக்கும் வெண்பாக்களைப் பாடியிருக்கிறார். நமக்கும் ஒருநாள் முதுமை வரும் என்ற உண்மையை உணர்ந்து முதியவர்களைப் பொறுமையோடு அணுகி அவர்களுக்கு நிம்மதியான வாழ்வைத் தருவது இளைய தலைமுறையின் கடமை. இன்சொல், சேவை மனப்பான்மை ஆகியவற்றின் மூலம் நம் தேசத்தின் முதிய சமுதாயத்தைப் பாதுகாப்பது இன்றைய சூழலில் மிக மிக அவசியம்.