234 புதிய நகரங்களில் தனியார் எஃப்எம் ரேடியோ - அமைச்சரவை ஒப்புதல்!
தொலைக்காட்சி இணையம் என ஊடகம் பல்வேறு புதுமைகளுக்கு உட்பட்ட போதிலும் வானொலி என்பது பெரும்பான்மையான மக்கள் பயன்படுத்தும் ஊடகங்களில் ஒன்றாக இன்றுவரை உள்ளது. இந்தியாவின் அதிகப்படியான கிராமங்களில் இன்றளவும் வானொலியை பயன்படுத்திதான் அன்றாட தகவல்களை அறிந்து கொள்கின்றனர்.தற்போது இரைச்சலான வானொலிகள் அதிகமாகி விட்ட போதும் இரவு நேரங்களில் மனதைத் தாலாட்டும் இளையராஜாவின் பாடல்களை வானொலியில் கேட்டு விட்டு உறங்கச் செல்வது இன்னும் பலருக்கு வாடிக்கையான ஒன்று. அதனால்தான் பகலில் கத்தி சத்தம் போடும் எஃப்.எம்.கள் கூட இரவு நேரங்களில் இளையராஜாவுக்கு என்றே தனியாக ஒரு நேரத்தை ஒதுக்கி பாடல்களை ஒளிபரப்பி வருகின்றன. உடல் களைத்து மனம் உறங்கச் செல்லும் இரவு நேரங்களில் ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு பாடலைக் கேட்கும் போது வரும் உணர்வை வார்த்தைகளால் சொல்ல முடியாது. ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீதான் என ஏசுதாஸின் நெஞ்சை உருக செய்யும் குரலைக் கேட்டு விட்டு உறங்க சென்றால் அந்த இரவு இனிமையான இரவு தான். இன்னும் பல பெருமைகளை வானொலி குறித்து அடுக்கிக் கொண்டே போகலாம்.
இந்நிலையில் இந்தியாவில் 234 புதிய நகரங்களில் தனியார் FM ரேடியோ சேவைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதில், தமிழ்நாட்டில் குன்னூர், திண்டுக்கல், காரைக்குடி, கரூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 11 நகரங்களில் ஒப்புதல் அளிக்கப்பட்டள்ளது.
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இது பற்றி கூறுகையில், எஃப்எம் சேனலின் வருடாந்திர உரிமக் கட்டணத்தை (ஏஎல்எஃப்) ஜிஎஸ்டி தவிர்த்து மொத்த வருவாயில் நான்கு சதவீதமாக வசூலிக்கும் திட்டத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றார். இது 234 புதிய நகரங்களுக்கும் பொருந்தும்.பிரைவேட் எஃப்எம் ரேடியோ ஃபேஸ் ஐல் பாலிசியின் கீழ், 234 புதிய நகரங்களில் ரூ.784.87 கோடி கையிருப்பு விலையுடன் 730 சேனல்களுக்கான ஏறுவரிசை மின்-ஏலத்தின் 3-வது தொகுதியை நடத்துவதற்கான முன்மொழிவுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த திட்டம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், உள்ளூர் பேச்சுவழக்கு மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கும், ‘உள்ளூர்களுக்கான குரல்’ முயற்சிகளுக்கும் வழிவகுக்கும் என மத்திய அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.