திருச்சி முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான் மகன் பிரித்வி ராஜ் தொண்டைமான் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி!
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடப்பாண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் வருகிற ஜூலை 26ம் தேதி துவங்கி ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி உலகம் முழுவதும் இந்த போட்டிகளில் பங்கேற்பதற்காக வீரர்களை தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியா சார்பில் ஒலிம்பிக் போட்டிகளில் பல்வேறு பிரிவுகளில் வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
அந்த வகையில் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் 5 பேர் கொண்ட இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திருச்சி முன்னாள் மேயர் சாருபலா தொண்டைமான் மகன் புதுக்கோட்டையைச் சேர்ந்த துப்பாக்கிச் சுடுதல் வீரர் பிரித்விராஜ் தொண்டைமான் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதாக தேசிய துப்பாக்கிச் சுடும் சங்கம் அறிவித்துள்ளது. ஷார்ட்கன் பிரிவில் அவர் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பிரிதிவிராஜ் தொண்டைமான் ஏற்கனவே உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள நிலையில், நடப்பு ஒலிம்பிக் போட்டியில் சிறப்பான பங்களிப்பை வழங்கி பதக்கம் வெல்வார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதே போல் ராஜேஸ்வரி குமாரி, அனஞ்சித் சிங் நருகா, ரைசா டில்லன், மகேஸ்வரி சவுகான் ஆகியோரும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளதாக தேசிய துப்பாக்கிச் சுடும் கழகம் அறிவித்துள்ளது.