பிரதமர் நரேந்திர மோடி இமாச்சல பிரதேசத்தில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார்!.
ஆண்டு தோறும்ம் தீபாவளி பண்டிகையின் போது, காஷ்மீர் மற்றும் சீனா, பாகிஸ்தான் எல்லைகளுக்கு சென்று அங்குள்ள ராணுவ வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தீபாவளி பண்டிகை கொண்டாடி வருகிறார். ஆட்சி பொறுப்பு ஏற்றது முதல் அவர் ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்வை கடைப்பிடித்து வருகிறார். அந்த வகையில் 10ஆவதாக இவ்வாண்டு தீபாவளியை ராணுவ வீரர்களுடன் கொண்டாடும் வகையில் ஹிமாச்சல் பிரதேசம் மாநிலத்திற்கு அவர் சென்றுள்ளார்.லெப்சா பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவத்தினருடன் அவர் தீபாவளியை கொண்டாடினார். ஹிமாச்சல் வருகை தந்த பிரதமரை, ராணுவ மேஜர், கமாண்டர்கள் ஆகியோர் வரவேற்றனர். அப்போது ராணுவ வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.
இந்த கொண்டாட்டம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, "இமாச்சலப் பிரதேசத்தின் லெப்சா எல்லைப் பகுதியில் உள்ள நமது ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடியது மிகவும் உணர்வுப்பூர்வமானது; பெருமிதமானது. வீரர்கள் தங்கள் குடும்பத்தினரிடம் இருந்து தொலைவில் இருக்கிறார்கள். அவர்களது அர்ப்பணிப்பு காரணமாகவே நாட்டு மக்களின் வாழ்க்கை ஜொலிக்கிறது. நமது ராணுவ வீரர்களின் துணிச்சல் அசாத்தியமானது. மிகக் கடினமான சூழலில், குடும்பத்தினரை விட்டு விலகி, மிகப் பெரிய தியாகங்களை அவர்கள் செய்து வருகிறார்கள். அதன் மூலம் நாட்டு மக்களின் பாதுகாப்பை அவர்கள் உறுதி செய்கிறார்கள். இத்தகைய கதாநாயகர்களுக்கு நாடு என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறது. நமது ராணுவத்தில் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 500க்கும் மேற்பட்ட பெண் ராணுவ அலுவலர்களின் பணி நிரந்தரப்படுத்தப்பட்டுள்ளது. ரஃபேல் உள்ளிட்ட போர் விமானங்களை இயக்குபவர்களாகவும் பெண் ராணுவ அதிகாரிகள் திகழ்கிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் நான் நமது ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடி வருகிறேன். ராமர் இருக்கும் இடம்தான் அயோத்தி என சொல்லப்படுவது உண்டு. ஆனால், என்னைப் பொறுத்தவரை பண்டிகை என்பது நமது வீரர்கள் இருக்கும் இடம்தான். கடந்த 30-35 ஆண்டுகளாக ராணுவ வீரர்கள் இல்லாமல் நான் தீபாவளியைக் கொண்டாடியது கிடையாது. பிரதமராக இருக்கும்போதும், முதல்வராக இருக்கும்போதும் ஏதேனும் ஒரு எல்லைக்கு வந்து ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடி வருகிறேன்" என தெரிவித்தார்.