அதானிக்கு பிரதமர் மோடி வெற்று காசோலை (Blank cheque) கொடுத்து இருக்கிறார்!- ராகுல் குற்றச்சாட்டு!
அதானி நிலக்கரி நிறுவனங்கள் சந்தை விலையை விடப் பல மடங்கு அதிகமாக வெளிநாடுகளிலிருந்து நிலக்கரியை இறக்குமதி செய்துள்ளனர். இதனால் 2 ஆண்டுகளில் ரூ.12 ஆயிரம் கோடி அளவிற்கு லாபம் ஈட்டி இருப்பது தெரியவந்துள்ளது. இதை சுட்டிக் காட்டி இன்று மீடியாக்களிடம் பேசிய ராகுல் காந்தி `` அதானிக்கு பிரதமர் நரேந்திர மோடி வெற்று காசோலை (Blank cheque) கொடுத்து இருக்கிறார். மோடி அதானிக்கு பாதுகாப்பு வழங்கி வருகிறார். நாட்டில் உள்ள அனைத்து துறைகளில் இருந்தும், ஒவ்வொரு இந்திய குடிமக்களின் வருமானத்தில் இருந்தும் அதானிக்கு பங்கு சென்று வருகிறது`''` என்று குற்றம் சாட்டினார்.
Financial Times என்ற பிரபலமான ஆங்கில நாளிதழ் அதானி நிறுவனம் நிலகரி இறக்குமதியில் முறைகேடு செய்துள்ளது என்பது குறித்து ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து இன்று ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”அதானி குழுமம் இந்தோனேசியாவில் நிலக்கரியை வாங்குகிறது. ஆனால் அந்த நிலக்கரி இந்தியாவுக்கு வருவதற்குள் அதன் விலை இரட்டிப்பாகிறது. இதன் காரணமாக மின்சார கட்டணம் உயர்கிறது. அதானி குழுமம் இதன் மூலம் ஏழை எளிய மக்களிடம் இருந்து பணம் வசூளிக்கிறது. இது நேரடியான திருட்டு வேலை. இந்த நாளிதழில் வெளியான செய்தி எந்த ஒரு அரசாங்கத்தையும் கவிழ்க்கும் தன்மை கொண்டது” என குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பில், அதானியின் மர்மான நிலக்கரி இறக்குமதி குறித்து ஃபைனான்சியல் டைம்ஸ்-ல் வந்த கட்டுரையை மேற்கோள் காட்டி நாட்டில் அதானியால் மின்சார கட்டணம் அதிகரித்து விட்டதாக குற்றம்சாட்டினார். இதுகுறித்து ராகுல் காந்தி கூறுகையில், "அதானி இந்தோனேசியாவில் இருந்து நிலக்கரியை வாங்குகிறார். அது இந்தியாவுக்கு வரும் போது அதன் விலை இரண்டு மடங்காக அதிகரித்துவிடுகிறது. இதனால் மின்கட்டணம் அதிகரித்துள்ளது. அதானி நேரடியாக எளிய மக்களின் பைகளில் இருந்து பணத்தை எடுக்கிறார். இது ஒரு நேரடியான திருட்டு.
இந்த முறை பொதுமக்களின் பைகளில் இருந்து பணம் திருடப்படுகிறது. நீங்கள் உங்கள் வீட்டில் மின்விசிறி அல்லது மின்விளக்கு பயன்படுத்தும் எல்லா நேரமும் நேரடியாக அதானியின் பைக்கு பணம் செல்கிறது. அதாவது அதானி குழுமம் நிலக்கரி இறக்குமதிக்கு அதிக விலைப்பட்டியலை வழங்குவதால், தங்கள் மின் கட்டணம் உயர்ந்துள்ளது என்பதை குடிமக்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஏற்கனவே கணக்கில் வராத ரூபாய் 20,000 கோடி என்று தெரிவித்துள்ளோம் ஆனால் தற்போது மேலும் ரூபாய் 12,000 கோடி உயர்ந்து மொத்தம் ரூபாய் 32,000 கோடியாக உயர்ந்துள்ளது,. இதனால் ஒவ்வொரு முறையும் நீங்கள் கூடுதல் கட்டணம் செலுத்துகிறீர்கள். பிரதமர் மோடியின் பாதுகாப்பு இல்லாமல் இது சாத்தியம் இல்லை.
அதானிக்கு பிரதமர் நரேந்திர மோடி வெற்று காசோலை (Blank cheque) கொடுத்து இருக்கிறார் என்பது தெளிவாகிறது. ஆனால் இது குறித்து எந்தவிதமான விசாரணையும் இல்லை.. பைனான்சியல் டைம்ஸ் லண்டன் அனைத்து ஆவணங்களையும் அணுகும் போது, அதானி குழுமத்திற்கு எதிரான ஆவணங்களை இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் அதானிக்கு உயர் மட்டத்தில் பாதுகாப்பு உள்ளது என்பது இதன் மூலம் தெளிவாகிறது" என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக சமீபத்தில் குஜாரத்தில் நடந்த ஒரு திட்டத் தொடக்க விழாவில் சரத் பவார் அதானியைச் சந்தித்து பேசினார். அதானியுடனான பவாரின் நெருக்கம் இண்டியா கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இது குறித்து - அதாவது சரத் பவார் அதானியை சந்தித்தது குறித்து கேள்வி கேட்டீர்களா என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, "இல்லை. நான் சரத் பவாரிடம் அந்தக் கேள்வியைக் கேட்கவில்லை. சரத் பவார் இந்தியாவின் பிரதமர் இல்லை. அவர் அதானியைப் பாதுகாக்கவில்லை. அதனால் நான் அதானி குறித்து சரத் பாவரிடம் கேட்காமல், மோடியிடம் கேட்கிறேன். ஒருவேளை சரத் பவார் இந்தியாவின் பிரதமர் பதவியில் இருந்து, அவர் அதானியை பாதுகாத்தார் என்றால் நான் பவாரிடமும் கேள்வி கேட்பேன்" என்றார்.