வாரணாசியில் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்- முழு விபரம்!
பார்லிமெண்ட் தேர்தல் 7 கட்டமாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்றுடன் நான்கு கட்ட வாக்குப்பதிவு நிறைவு அடைந்துள்ளது. இதுவரை 379 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் 3-வது முறையாகப் போட்டியிடுகிறார். ஏற்கனவே 2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் மோடி 3-வது முறையாக அத்தொகுதியில் களம் இறங்கி உள்ளார்.
வாரணாசி தொகுதிக்கான வாக்குப்பதிவு 7-வது மற்றும் கடைசி கட்ட தேர்தலில் நடக்கிறது. இதில் மொத்தம் 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கடைசி கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். நேற்றே வாரணாசிக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு சுமார் 6 கிலோமீட்டர் தூரம் ரோடு ஷோ நடத்தி ஆதரவு திரட்டினார். இதில் ஆயிரக்கணக்கா னோர் கலந்துகொண்டனர். பிரதமர் மோடி இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்வதையொட்டி வாரணாசி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். மோடி மனுத்தாக்கல் செய்யும் இடத்தை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டனர்.
கங்கையில் சிறப்பு பூஜையை முடித்த பிறகு பிரதமர் மோடி கப்பலில் பயணம் செய்து கால பைரவர் கோவிலுக்கு சென்றார். அங்கு அவரை உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யாநாத் வரவேற்றார். கால பைரவர் கோவிலில் மோடி சாமி தரிசனம் செய்தார். பின்னர் காலை 10.45 மணிக்கு பிரதமர் மோடி தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதில் தேர்தல் பிரசாரம் வியூகங்கள் குறித்து விவாதித்தார்.
இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு பிரதமர் மோடி தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய புறப்பட்டார். அவர் ரோடு ஷோ நடத்தியபடி ஊர்வலமாக சென்றார். அவருடன் பா.ஜனதா முக்கிய தலைவர்களும் உடன் சென்றனர். இதில் ஏராளமான பா.ஜனதா தொண்டர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். வழிநெடுகிலும் பிரதமர் மோடியை உற்சாகமாக மக்கள் வரவேற்றனர். சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் ரோடு ஷோவை பிரதமர் மோடி நடத்தினார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் இன்று காலை 11.40 மணிக்கு தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்பு மனுத்தாக்கல் செய்ய வேட்பாளருடன் குறிப்பிட்ட அளவு நபர்களே செல்ல வேண்டும் என்பதால் ரோடு ஷோ, மனுத்தாக்கல் செய்யும் அலுவலகத்துக்கு சிறிது தூரத்துக்கு முன்பாக முடிக்கப்பட்டது.
பிரதமர் மோடியின் பிரமாணப் பத்திரத்தின்படி, அவர் ரூ.3.02 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துக்களையும், ரூ.52,920 ரொக்கத்தையும் வைத்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு சொந்தமாக நிலம், வீடு அல்லது கார் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் வரிக்கு உட்பட்ட வருமானம் 2018-19 நிதியாண்டில் ரூ.11 லட்சத்தில் இருந்து 2022-23ல் ரூ.23.5 லட்சமாக இரு மடங்காக உயர்ந்துள்ளது என்று பிரமாணப் பத்திரத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பாரத ஸ்டேட் வங்கியில் பிரதமர் மோடிக்கு இரண்டு கணக்குகள் உள்ளன. எஸ்பிஐ-யின் காந்தி நகர் கிளையில் ரூ.73,304 டெபாசிட் செய்யப்பட்டுள்ள நிலையில், எஸ்பிஐ-யின் வாரணாசி கிளையில் ரூ.7,000 மட்டுமே உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் 2.51 கோடியாக இருந்த சொத்து மதிப்பு தற்போது ரூ.3.02 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் ரூ.2.67 லட்சம் மதிப்புள்ள 4 தங்க மோதிரங்கள் வைத்திருப்பதாகவும் வேட்பு மனுவில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.அத்துடன் 1978 ல் டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.ஏபடிப்பும், 1983இல் குஜராத் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. படிப்பும் முடித்துள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாரணாசி தொகுதியில் பிரதமரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அஜய் ராய், பகுஜன் சமாஜ் சார்பில் ஏ.ஜமால் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். வாரணாசி தொகுதி தற்போது பா.ஜனதாவின் கோட்டையாக திகழ்ந்து வருகிறது. 5 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட வாரணாசி பாராளுமன்ற தொகுதி பல ஆண்டுகளாக பா.ஜ.க-காங்கிரஸ் இடையே பெரிய போட்டி களமாக இருந்துவருகிறது. அத்தொகுதியில் பா.ஜ.க. 7 தடவையும், காங்கிரஸ் 6 தடவையும் வெற்றி பெற்றுள்ளன. வாரணாசி தொகுதியில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் இதுவரை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.