பிரதமர் மோடி தமிழ்நாட்டை மட்டும் ஓரவஞ்சனையுடன் நடத்தவில்லை!
'தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு வரவில்லை; சென்னை வெள்ளத்துக்கு வரவில்லை; நெல்லை வெள்ளத்துக்கும் வரவில்லை. ஒட்டுக் கேட்க மட்டும் வாரத்துக்கு மூன்று தடவை வருகிறார்.' -... என்று பிரதமர் மோடி குறித்து சிலர் எழுதி இருக்கிறார்கள். பிரதமர் மோடி பண மதிப்பிழப்பு நேரத்தில் யாரையும் சந்திக்கவில்லை. தில்லிக் கலவரத்துக்குப் போகவில்லை; மணிப்பூர் கலவரத்துக்குப் போகவில்லை; அங்கிருந்து அந்த வைரல் வீடியோ வெளியாகும் வரை அது பற்றிப் பேசக் கூட இல்லை; கோவிட் சமயத்தில் புலம் பெயர் தொழிலாளர் நடைப் பயணங்கள் மற்றும் அதில் நிகழ்ந்த கோரங்கள் குறித்துப் பேசவில்லை. அங்கே போய் யாரையும் பார்க்கவில்லை. கஷ்மீரில் நீண்ட நெடிய லாக்டவுன் போடப்பட்டு, இணையம் தொலைபேசிகள் எல்லாம் தடைக்குள்ளாகி மக்கள் சொல்லொணாத்துயரங்களை அனுபவித்த போது கூட அங்கே போகவில்லை. அவை பற்றிப் பேசவில்லை.
கோவிட் இரண்டாம் அலையில் கொத்துக் கொத்தாக வீழ்ந்த உயிர்கள் பற்றிப் பேசவில்லை. (யாரையும் சந்திக்க வேண்டும் என்று இந்தப் பிரச்சினையில் எதிர்பார்க்க முடியாதுதான்.) விவசாயிகள் போராட்டத்தில் பல மாதங்களாக தில்லிக் குளிரில் தெருவில் கிடந்த மக்களை யாரையும் சந்திக்கவில்லை. ஹத்ரஸ் கிராமத்தில் சாதி இந்துக்களால் வன்புணர்வு செய்யப்பட்டு, கொலையுண்டு போலீசாரால் இரவோடு இரவாக கொளுத்திப் போடப்பட்ட பெண்ணின் குடும்பத்தைக் கூட பார்க்கவில்லை. அது பற்றிப் பேசக் கூட இல்லை. கஷ்மீரில் பாஜகவினரால் கோயிலிலேயே வன்புணர்வு செய்யப்பட்டுக் கொலையுண்ட சிறுமிக்காகக் கூட எதுவும் பேசவில்லை. அதில் கைதானவர்களை விடுவிக்க வேண்டி பாஜகவினரே தேசியக் கொடியுடன் போராட்டம் நடத்தி தேசியக் கொடியை அவமதித்த தருணத்தில் கூட எதுவும் பேசவில்லை.
2017 முதல் 2021 வரை பொருளாதாரம் அதல பாதாளத்தில் இருந்த போது அது பற்றி ஒருமுறை கூட மூச்சு விடவில்லை. வேலையின்மை அறிக்கை மத்திய அரசால் வெளியிடப்படாமல் பதுக்கப்பட்டு, ஆனால் லீக் ஆகி வெளியே வந்த போது அதில் 45 ஆண்டு காலத் தாழ்வை எட்டி இருக்கிறது என்பது தெரிய வந்த போது கூட எந்தக் கவலையும் தெரிவிக்கவில்லை. எல்லாரையும் பக்கோடா விற்றுப் பிழைக்க சொன்னார்!
அதாவது சார், பிரதமர் தமிழ் நாட்டை மட்டும் ஓரவஞ்சனையுடன் நடத்தவில்லை. பூரா இந்தியாவையும் அப்படித்தான் நடத்திக் கொண்டு இருக்கிறார். இந்தியாவின் எந்தப் பகுதியானாலும் தேர்தல் பிரச்சாரத்துக்கு மட்டும்தான் போவார். பிரச்சார மேடைகளில் மட்டும்தான் பேசுவார். வேறு யாரிடமும் எதைப் பற்றியும் பேசுவதற்கு அவருக்கு எதுவும் இருக்காது.