சைவ உணவின் விலை ஏப்ரலில் 8%வரை அதிகரித்து விட்டது!
இந்தியாவில் பண்டைய காலம் முதல் சைவ உணவு பழக்கம் பெரிதும் போற்றப்படுகிறது. இந்திய கலாச்சாரம் போர், உயிர் கொலை, மிருக வதை உட்பட பிற உயிரினங்களுக்கு தீங்கு விளைவித்து அதனால் பெறப்படும் எந்த வெற்றியையும் இன்பத்தையும் ஆதரிப்பதில்லை.அசைவத்தை அறவே ஒதுக்குமாறு கூறாவிட்டாலும் இந்திய கலாச்சாரத்திலும், இந்து மத நூல்களிலும் சைவ உணவு மிகவும் உயர்வாக பேசப்படுகிறது.இந்து மத புனித நூல்களில் ஒன்றான ஸ்ரீபகவத் கீதையில் உணவு பழக்கத்திற்கும் மனதில் தோன்றும் எண்ணங்களுக்கும் நேரடி தொடர்பு இருப்பது விளக்கப்படுகிறது.உடலாரோக்கியத்தில் செரிமானமே முக்கிய பங்கு வகிக்கிறது என அனைத்து மருத்துவ முறைகளும் ஏற்கின்றன. நல்ல செரிமானத்திற்கு சைவ உணவு உதவுவதை ஆங்கிலேய மருத்துவர்களே ஒப்பு கொள்கின்றனர்.குழந்தைகள், மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், திருமணமானவர்கள், கர்ப்பிணிகள், நோய்வாய்பட்டவர்கள், நோயிலிருந்து மீண்டவர்கள் மற்றும் வயோதிகர்கள் உட்பட அனைவருக்கும் அன்றாட வாழ்வியலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் சைவ உணவிலேயே தேவைக்கு அதிகமாக உள்ளன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில்கடந்த மார்ச்சில் 7சதவீதம் அதிகரித்த நிலையில் ஏப்ரல் மாதத்தில் நம் வீடுகளில் சைவ உணவு தயாரிக்க ஆகும் செலவு சுமார் 8 சதவீதம் உயர்ந்துள்ளதாக கிரிஸில் சந்தை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டின் ஏப்ரல் மாத ஒப்பீட்டின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரிஸில் வெளியிட்டுள்ள ‘ரொட்டி ரைஸ் ரேட்’ என்ற ஏப்ரல் மாதத்துக்கான ஆய்வறிக்கையில் இந்த விவரம் இடம்பெற்றுள்ளது. வெங்காயம், தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலை கடந்த மாதம் கணிசமாக ஏற்றத்தை கண்டுள்ளது. அரிசி, பருப்பு போன்ற மளிகை சாமான்களின் விலையும் அதிகரித்து இருந்தது. பணவீக்கம் மற்றும் பயிர் வரத்து குறைவு முதலியவை இதற்குக் காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக வெங்காய சாகுபடி ரபி பருவத்தில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியை கண்டதும், மேற்கு வங்கத்தில் உருளைக்கிழங்கு பயிர் சாகுபடி சேதம் போன்றவை இந்த விலை உயர்வில் முக்கிய பங்காற்றி உள்ளது. அதே நேரத்தில் சீரகம், மிளகாய் மற்றும் வெஜிடபிள் ஆயில் போன்றவற்றின் விலை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது சரிவை கண்டது. அதனால் சைவ சாப்பாட்டுக்கான விலை ஏற்றத்தின் விகிதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த மாதம் அசைவ உணவு தயாரிக்க ஆகும் செலவு ரூ.56.3 என இருந்துள்ளது. கடந்த நான்கு மாத காலத்தில் இது அதிகபட்சம் என தெரிவித்துள்ளது. அதே சமயம் ஏப்ரல் மாதத்தில் அசைவ சாப்பாட்டின் விலை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 4 சதவீதம் குறைந்துள்ளது. கறிக்கோழியின் விலை கடந்த ஆண்டை காட்டிலும் சுமார் 12 சதவீதம் குறைந்துள்ளது இதற்கு காரணம். இருப்பினும் கடந்த மார்ச் மாதத்தில் அசைவ சாப்பாடு தயாரிக்க ஆகும் செலவு ரூ.54.9 என இருந்தது. இது ஏப்ரலில் 3 சதவீதம் என உயர்ந்துள்ளது என இந்த அறிக்கையில் கிரிஸில் தெரிவித்துள்ளது.