நோய் வருமுன் தடுத்தல் - கொஞ்சம் விளக்கமும் முன் எச்சரிக்கையும்!
நமது சமூகத்தில் நம் அனைவருக்குமே பொதுவாக இருக்கும் பிரச்சனை "அசட்டை செய்தல்". ஒவ்வொரு நோயும் அதன் அறிகுறிகளை அந்தந்த மனிதருக்குத் தான் முதலில் சமிக்ஞைகளாகக் காட்டும் . இன்னும் நோய் முற்றிய நிலையிலேயே பிறர் அதை கண்டு கொள்ளும் நிலை வரும் . எனினும் பரபரப்பான வாழ்க்கையில் தினமும் பொருள்தேடி நாம் அனைவருமே பறந்து கொண்டிருக்கிறோம். இந்நிலையில் நின்று நிதானித்து நமது உடலில் நிகழும் மாற்றங்கள் அவதானிப்பற்கு நாம் நேரம் வைத்திருப்பதில்லை. நோய் ஏற்பட்ட பின் காட்ட வேண்டிய அக்கறையிலேயே இத்தனை சுணக்கம் இருக்கும் போது ஒரு நோய் ஏற்படுவதற்கு முன்னமே அதைத் தடுப்பது குறித்து யாரும் அத்தனை சிரமப்பட்டு சிந்திப்பதில்லை. வந்தால் பார்த்துக் கொள்ளலாம் .எனக்கு வராது , என் பெற்றோருக்கு இல்லை .அதனால் எனக்கு வர வாய்ப்பில்லை -என்பது போன்ற மனநிலை தான் நம்மிடையே நிலவி வருகிறது. இதிலிருந்தும் நாம் வெளிவந்து நமது உடல் மற்றும் உடல் கொள்ளும் நோய்கள் குறித்து விழிப்புணர்வு பெற வேண்டியது அவசியமாகிறது.குடும்பத்தில் ஒருவர் இதுகுறித்த அவதானிப்புடன் இருந்தாலே அதுவே மிகப்பெரிய சாதகமான மாற்றங்களை அந்தக் குடும்பத்தில் உண்டாக்குவதைக் காண்கிறேன்.
வருமுன் காப்பதே சிறந்தது Prevention is better than cure =
ஆம்.. நோய் வருமுன் தடுத்தலில் இதில் நான்கு படிநிலைகள் உள்ளன
1. அடிமூலமான நோய் தடுத்தல் நடவடிக்கைகள் Primordial prevention
அதாவது ஒவ்வொரு நோய் ஏற்படுவதற்கும் குறிப்பிட்ட ஆபத்து காரணிகள் (Risk factors) இருக்கின்றன. உதாரணமாக சமூகத்தில் நீரிழிவின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதற்கு ,நம்மிடையே ஆபத்தான அளவு அதிகரித்திருக்கும் மாவுச்சத்து நுகர்தல் அதிலும் குறிப்பாக சுத்தீகரிக்கப்பட்ட மாவுச்சத்து, சுத்தீகரிக்கப்பட்ட இனிப்பு பண்டங்கள் பானங்கள் ஆகியன .கூடவே உடல் உழைப்புக்கு முக்கியத்துவம் தராத வாழ்வியல் - உறக்கம் தூரமாகிக் கொண்டிருப்பது - மது புகை உள்ளிட்ட போதை பழக்கங்கள்- உள உடல் அழுத்தம் - அன்றாட நாளில் அதிகரித்து வரும் டிஜிட்டல் ஆக்கிரமிப்பு ஆகியன ஆபத்துக் காரணிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன . இவையன்றி நமது உடலில் நீரிழிவிற்கு தோதான மரபணுக்களையும் கொண்டிருக்கிறோம். சரி இவையெல்லாம் நீரிழிவு உடல் பருமன் ,ரத்தக் கொதிப்பு ஆகிய அனைத்துக்குமே பொதுவான ஆபத்துக் காரணிகளாக உள்ளன. நமது குழந்தைகள் பிறந்ததில் இருந்தே இந்த ஆபத்துக் காரணிகள் அவர்களைச் சுற்றி நிலவிக் கொண்டிருக்கின்றன.
ஒரு வீட்டில் தாய் தந்தை என்ன சாப்பிடுகிறார்களோ அதையே தான் குழந்தைகள் சாப்பிடுகிறார்கள் . வீட்டில் உடல் உழைப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் கிடைக்கிறதோ அதையே குழந்தைகளும் பிரதிபலிக்கிறார்கள் . இதன் விளைவாக குழந்தைகளிடையே முன்னெப்போதும் இல்லாத அளவு உடல் பருமன் அதிகரித்து வருகிறது. ஒரு காலத்தில் சத்து போட சத்து டானிக் கேட்ட தாய்மார்கள் இருந்தார்கள் .இப்போது எனது பையனுக்கு பொனானுக்கு வெய்ட் குறைக்கணும் டயட் கொடுங்க என்று கேட்கும் காலம் வந்து விட்டது. குழந்தைகளிடையே அரிதினும் அரிதாக டைப் ஒன்று நீரிழிவு கண்டறியப்பட்ட காலம் உண்டு. ( டைப் ஒன்று என்பது இன்சுலின் முழுவதுமாக சுரக்காத நிலை. கட்டாயம் இன்சுலின் ஊசி போட வேண்டும்)
ஆனால் இப்போது பத்து வயது பதினைந்து வயதில் டைப் டூ நீரிழிவு ஏற்படும் குழந்தைகளைக் கண்டு வருகிறேன். இவையெல்லாம் காட்டுவது , நம்மிடையே அடிமூலமான நோய் தடுத்தல் முறைகள் அமலில் இல்லை.அதனால் குழந்தைகளிடையேவும் வளர் இளம் பருவத்தினரிடையேவும் தொற்றா நோய்கள் கண்டறியப்படுவது அதிகரித்து வருகிறது.
சரி இனி அடுத்த நிலை நோய் தடுப்புக்குச் செல்வோம்
2. முதல் நிலை நோய் தடுப்பு நடவடிக்கைகள் Primary Prevention
நோய் உண்டாக்கும் ஆபத்து காரணிகள் இருக்கும் சுற்றுப் புறத்தில் அந்த நோய்க் காரணிகளின் தாக்கத்தைக் குறைக்குமாறு நடவடிக்கைகளை எடுப்பது முதல் நிலை நோய் தடுப்பாகும். அதாவது இதுவரை நீரிழிவு, உடல் பருமன், ரத்தக் கொதிப்பு, பிசிஓடி போன்ற நோய்கள் ஏற்படாதவர்கள் தங்களுக்கு இந்த நோய்கள் ஏற்படாமல் இருக்க , மாவுச்சத்து குறைத்து உண்ணும் வாழ்வியல் இனிப்பு சுவை கொண்டவற்றை கட்டுப்படுத்துதல் , மது புகை இதர போதைக்கு அடிமையாகாமை, தினசரி உடல் பயிற்சி , மன அமைதிக்கு முக்கியத்துவம் வழங்குதல், சரியான நேரம் மற்றும் நல்ல தரமான உறக்கம்,தனது உடலின் ஆரோக்கியத்தை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்வது கொடுங்குற்றமன்று.
சில உயிர் கொல்லும் தொற்று நோய்களைப் பொருத்துவரை தடுப்பூசிகள் உயிர்காப்பவை. இவற்றைக் கடைபிடிப்பது தான் முதல் நிலை நோய் தடுத்தல் நடவடிக்கைகள். இதிலும் நம்மில் பெரும்பான்மை முக்கியத்துவம் தருவதில்லை .
இதற்கடுத்த தடுப்பு நடவடிக்கை
3. இரண்டாம் நிலை நோய் தடுப்பு நடவடிக்கை
மேற்கூறிய இரண்டையும் செய்யாமல் விடும் போது, ஒரு வயதில் மேற்கூறிய நோய்கள் வந்து விடுகின்றன. இப்போதும் கூட அதன் அறிகுறிகளை புறக்கணிப்பது நோயை விரைவில் கண்டறிவதில்லை. ஒரு சொலவடை உண்டு. "மேற்கத்திய நாடுகளில் மக்கள் நோய்களின் அறிகுறிகளை உடனே கண்டுகொள்வார்கள் ஆனால் அவர்களின் மருத்துவர்களை நேரில் காண காலம் எடுக்கும் நமது நாட்டில் மக்கள் நோய்களின் அறிகுறிகளை அசட்டை செய்து காலம் தாழ்த்துகிறார்கள் ஆனால் மருத்துவர்களை உடனடியாக நேரில் விரைவாக பார்த்து விடுகிறார்கள்"
நோயைக் கண்டறிந்து விட்டாலும் , அதற்குண்டான கண்காணிப்பு மற்றும் சிகிச்சை எடுப்பதில் சுணக்கம் பரவலாகத் தென்படுகிறது. இவ்வாறு தங்களுக்கு நீரிழிவு ரத்தக் கொதிப்பு உடல் பருமன் ஏற்பட்ட பிறகாவது அதற்குண்டான சிகிச்சை கண்காணிப்பு உணவு உடல் பயிற்சி உளநலன் உறக்கம் போன்ற மாற்றங்களைச் செய்தால் இந்த நோய்களால் ஏற்படும்.தாக்கங்கள் மற்றும் நீண்ட கால பாதிப்புகளான இதய மற்றும் மூளை ரத்த நாள அடைப்பு ,சிறுநீரக நோய் ,கல்லீரல் நோய் போன்ற பல பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம்.
இங்கிருந்து அடுத்த நிலை மூன்றாம் நிலை நோய் தடுப்பாகும்
4. மூன்றாம் நிலை நோய் தடுப்பு
மேற்கூறிய நோய்களின் விளைவால் , உறுப்புகள் பாதிப்புக்கு உள்ளானோருக்கு அவர்களது வாழ்நாள் முழுமைக்கும் வழங்கப்படும் பாதிப்பை மேலும் குறைக்க செய்யப்படும் டேமேஜ் கண்ட்ரோல் நடவடிக்கைகள் இவை.
இதய ரத்த நாள அடைப்பு ஏற்பட்டவர்கள் , பைபாஸ் சிகிச்சை செய்தவர்கள் ,ஸ்டெண்ட் வைத்தவர்கள் ,டயாலசிஸ் செய்து கொண்டிருப்பவர்கள் என இவ்வகையில பெரும்பான்மையினர்முதியோர்கள். இவர்களுக்கென பிரத்யேக உணவு முறை ,சிகிச்சை உடல் பயிற்சி போன்றவற்றை செய்து இனியும் பாதிப்பை தடுக்கும் முயற்சிகளே மூன்றாம் நிலை நோய் தடுப்பு நடவடிக்கைகளாகும் ஆனால் இதிலும் சுணக்கம் காட்டுவதால் நோய் நிலை இன்னும் முற்றுகிறது. இதைத் தடுக்கவாவது முறையான சிகிச்சை மற்றும் கண்காணிப்பு அவசியம் தானே?
-----
எனது ஆவல் யாதெனில் , நான் கூறிய இந்த நான்கு தடுப்புகளில் முதல் இரண்டு வகைத் தடுப்பு கட்டமைப்புகளை வலுவாக்கினால் நமக்கு நமது சந்ததிகளுக்கும் , சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன். "எனக்கு டயாபடீஸ் இல்லை. நான் ஏன் இந்த உணவு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று கேட்பவர்களுக்கு இந்தப் பதிவு பதிலாக இருக்கும்" என்று நம்புகிறேன்