மணிப்பூர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்!
மணிப்பூரில் கலவரம் தொடர்பாக அம்மாநில முதல்வர் பிரேன் சிங் பதவியை ராஜினாமா செய்திருந்த நிலையில் மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ள அரசு கெசட் வெளியாகி உள்ளது.
மணிப்பூரில் கடந்த 2023 ஆம் வருடம் இரண்டு சமூக மக்களிடையே ஏற்பட்ட மோதல் மாநிலம் முழுவதும் வன்முறையாக மாறியது. இந்த மோதல் போக்கிற்கு நாட்டின் பல்வேறு மாநிலத்தில் இருந்தும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. பொதுமக்கள், பெண்கள், சிறார்கள் என பலர் இந்த வன்முறையில் கொல்லப்பட்டனர். ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக மணிப்பூர் வன்முறை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் கடந்த ஒன்பதாம் தேதி மணிப்பூர் மாநில முதல்வர் பிரேன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
புதிய முதல்வரை பாஜக தேர்வு செய்வதற்கான அவகாசம் முடிந்தும் யாரும் தேர்வு செய்யப்படவில்லை. அரசியலமைப்பின் பிரிவு 174(1) மாநில சட்டமன்றங்கள் அவற்றின் கடைசி கூட்டத்திற்குப் பிறகு ஆறு மாதங்களுக்குள் கூட்டப்பட வேண்டும் என்று கட்டளையிடுகிறது. மணிப்பூரில், கடைசி சட்டமன்றக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12, 2024 அன்று நடைபெற்றது, இதனால் புதன்கிழமை அதன் அடுத்த கூட்டத்திற்கான காலக்கெடுவும் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் தற்போது மணிப்பூர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பாக வெளியிட்டுள்ளது.