செஸ் தினத்தில் விஸ்வநாதன் ஆனந்தின் அன்பளிப்பு!
உலக செஸ் தினத்தன்று தமிழ்நாட்டில் மாநில அளவிலான செஸ் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, தனது கையெழுத்திட்ட செஸ் போர்டுகளை அன்பளிப்பாக வழங்கினார் செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்.
இந்தியாவில் அதிக அளவில் கிராண்ட் மாஸ்டர்களைக் கொண்ட, உலக செஸ் போட்டிகளில் பெரிதளவில் பங்குபெறும் வீரர்களை உருவாக்கும் மாநிலமாக தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. தமிழக கிராண்ட் மாஸ்டர்களான பிரக்ஞானந்தா, அவரது சகோதரி வைஷாலி, குகேஷ் மற்றும் பல தமிழக வீரர்களின் சாதனைகள் இந்தியாவிற்கு தொடர்ந்து பெருமை சேர்த்து வருகின்றன.இந்தியாவில் இவர்கள் போன்ற பல சாதனையாளர்களை உருவாக்குவதிலும், தமிழ்நாட்டின் செஸ் விளையாட்டின் வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிப்பவர் ஐந்து முறை செஸ் உலக சாம்பியனும், மற்றும் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் (FIDE) துணைத் தலைவருமான கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்.
இதனை கொண்டாடும் விதமாகவும் மாணவர்களிடையே செஸ் ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதமாகவும், மாநில அளவிலான செஸ் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு விஸ்வநாதன் ஆனந்த் தனது சொந்த முயற்சியில் செஸ் போர்டுகளை ஆட்டோகிராஃபுடன், அன்பளிப்பாக வழங்கினார்.
மேலும், அன்பளிப்புடன் சேர்த்து “இந்த சர்வதேச செஸ் தினத்தில், உங்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இது முடிவற்ற சாத்தியங்கள், கற்றல் மற்றும் சுய-கண்டுபிடிப்பு ஆகியவற்றின் பயணம். நீங்கள் கொண்டாடும் இந்த நாளில், எனது சொந்த பயணத்தின் சில தருணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்” என்று தொடங்கி, செஸ் விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து கடிதம் ஒன்றையும் இணைத்து அனுப்பியுள்ளார்.
அதில் ''எனக்கு அப்போது ஏழு வயது இருக்கும். என்னுடைய குடும்பம் மணிலாவுக்கு குடி பெயர்ந்தது. அங்கு உயிர்ப்புடன் இருந்த செஸ் கலாசாரம் என்னையும் தொற்றிக் கொண்டது. என்னுடைய ஆர்வத்தைக் கண்ட எனது தாயார், விடாமுயற்சியுடன் எனக்கான செஸ் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தார். தொடக்க கால சவால்களைத் தொடர்ந்து அவருடைய முயற்சி பலனளிக்கத் தொடங்கியது. வார இறுதி நாட்களில் நடந்த போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினேன்.
என்னுடைய குழந்தைப் பருவத்தில் பல செஸ் போட்டிகளில் விளையாடியுள்ளேன். ஆனால் அனைத்துமே வெற்றிகரமாக இருந்ததில்லை. இருப்பினும், மீண்டும் முயற்சிக்க நான் தயங்கியது இல்லை. அனுபவமிக்க வீரர்களை எதிர்த்து விளையாடியது எனக்கு நல்ல அறிவையும், நம்பிக்கையையும் கொடுத்தது.
இந்த அனுபவங்கள் விடாமுயற்சியின் அருமையை எனக்கு உணர்த்தின. கடந்த போட்டிகளின் அனுபவங்களிலிருந்து கற்றுக் கொண்டு தொடர்ச்சியாக கற்றுக்கொள்ள முனைந்தேன். நீங்கள் முடிந்த அளவுக்கு நிறைய விளையாட்டுக்களில் பங்கேற்க வேண்டும். அதிலிருந்து விடா முயற்சியுடன் கற்றுக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு போட்டியும் புதிய கற்றலுக்கான வாய்ப்பு. புதிய உத்தியை கற்றுக் கொள்ளலாம், உங்கள் திறனை வளர்த்துக் கொள்ளலாம்.
நினைவில் கொள்ளுங்கள், அனைத்து சிறந்த வீரர்களும் ஒரு நாளில் தொடக்க நிலையில் தான் இருந்திருப்பார்கள் (Remember, every great player started as a beginner) சிறந்த நிலைக்கான வழி கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, விளையாட்டின் மீதான காதலின் மூலம் கிடைக்கிறது. ஒவ்வொரு சவாலையும் போற்றுங்கள், ஒவ்வொரு விளையாட்டிலிருந்தும் கற்றுக் கொள்ளுங்கள், சிறந்த நிலைக்கான தணியாத தாகத்துடன் இருங்கள்" என்று
செஸ் என்பது விளையாட்டு என்பதைத் தாண்டி அறிவாற்றல், கவனம், சிக்கலைத் தீர்க்கும் திறன், முடிவெடுக்கும் திறன் போன்றவற்றை மேம்படுத்துகிறது. விஸ்வநாதன் ஆனந்தின் அயராத உழைப்பும், இது போன்ற பல ஈடுபாடுகளும் மாணவர்களுக்கு செஸ் மீதான ஈடுபாட்டை அதிகரிக்கும். இதன் மூலம் நம் மண்ணில் இன்னும் பல கிராண்ட் மாஸ்டர்கள் உருவாகுவார்கள் என்பது நிச்சயம்.