தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

விஜயகாந்த் இறந்த நாளை ‘நல்ல நாள்’ என்ற பிரேமலதாவே - விலகிப் போய் விடுங்கள்!

12:39 PM Dec 30, 2023 IST | admin
Advertisement

கேப்டன் விஜயகாந்த் மறைந்து விட்டார்...

Advertisement

மறைந்தவர்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல... மறைந்தவர்களின் சரி, தவறுகளில் இருந்துதான் எதிர்காலத்தை கட்டமைக்க முடியும். விஜயகாந்த் ஒரு சினிமா நட்சத்திரத்திற்குரிய பலம், பலவீனங்கள் நிறைந்தவர்தான். அவர் தனிப்பட்ட வாழ்க்கை அப்படித்தான் இருந்தது. அரசியல் கட்சி ஆரம்பித்தபோது அந்த கட்சிக்கு தனியான கொள்கையோ, நீடித்த லட்சியமோ இருந்ததில்லை. சாதாரண ரைஸ் மில் உரிமையாளரான தனக்கு தமிழக மக்கள் மிகப்பெரிய வாழ்க்கையை கொடுத்திருக்கிறார்கள், அவர்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்கிற ஒரு எண்ணம் மட்டும்தான் அவர் அரசியல் கட்சி தொடங்க காரணம்.எல்லாவற்றையும் தாண்டி அவருக்கு இருந்தது மனிநேயமும், உதவும் குணமும்தான். அவர் சினிமா நட்சத்திரமாக வெற்றி பெற்றதற்கும், அரசியலில் குறுகிய காலத்தில் வளர்ச்சி அடைந்ததற்கும் முக்கிய காரணமும் அதுதான்.

Advertisement

ஆனால் எந்த ஊழலை எதிர்த்து அவர் அரசியலுக்கு வந்தாரோ... அதே ஊழல் கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது அவரது மிக முக்கிய முரண்பாடு.அவரது மறைவின் போது அவரைப் பற்றி அதிகம் பேசப்பட்டது. அவரது மனிநேயம்தானே தவிர, அவரது அரசியல் கொள்கையோ, லட்சியமோ, அவர் நடித்த திரைப்படங்களை பற்றியோ அல்ல. எப்படி இருந்தாலும் விஜயகாந்த் ஆகச் சிறந்த மனிதாபிமானி, பரமோபகாரி என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமே இல்லை. ஆனால் அவர் கட்சி...!

நல்ல உடல் நலத்துடன் அவர் கட்சி நடத்திய வரைக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. ரஜினி சொல்கிற மாதிரி தமிழக அரசியலில் அவர் சக்தி மிக்கவராக இருந்திருப்பார். ஆனால் உடல் நலம் தளர்ந்தபோது கட்சியின் நிர்வாகத்திற்குள் நேரடியாக வருகிறார் பிரேமலதா. கட்சி நிர்வாகம், பண வரவு செலவு அவரது கைக்குப் போகிறது. கட்சியின் வீழ்ச்சியும், விஜயகாந்தின் உடல்நல வீழ்ச்சியும் ஒரே நேரத்தில் தொடங்குகிறது. எப்போதுமே தனி நபரை நம்பி தொடங்கப்படும் கட்சிகள் அந்த மனிதரின் மறைவுக்கு பின்னால் மறைந்து போகும் என்பதுதான் வரலாறு.

அதனால் பிரேமலதா என்ன செய்திருக்க வேண்டும் கட்சி தொண்டர்களை, நிர்வாகிகளை அரவணைத்துச் சென்றிருக்க வேண்டும். அரசியல் பற்றிய நல்ல புரிதலை பெற்றிருக்க வேண்டும். பேச்சாற்றலை, கட்சி நிர்வாக திறனை வளர்த்திருக்க வேண்டும். கட்சி நிர்வாகிகளில் திறமையானவர்கள், நேர்மையானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உரிய நிர்வாக பங்கை தந்திருக்க வேண்டும். ஆனால் என்ன செய்தார்? கட்சியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சர்வாதிகார நிர்வாகம் செய்தார். பணம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு அவரது செயல்பாடுகள் அமைந்தது.

அரசியல் மேடைகளில் அவரது பேச்சு அறிவார்ந்ததாகவும் இல்லாமல், விஜயகாந்த் பாணியில் மனிதநேயமாகவும் இல்லாமல் சாதாரண மேடை பேச்சாளரின் குரலாக இருந்தது. அவர் எடுத்த அரசியல் கூட்டணி முடிவுகளும் அப்படித்தான் இருந்தது. இருக்கிற தொண்டர்கள், இருக்கிற கட்சியின் பலத்தைக் கொண்டு எப்படி தனது வசதிகளை பெருக்கி கொள்ளலாம் என்பதே பிரேமலதாவின் இப்போதைய திட்டமாக இருக்கிறது. அதனை விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் காண முடிந்தது. அமைதியாக சென்ற இறுதி ஊர்வலத்தில் அவர் ஒலிபெருக்கி பிடித்து கூட்டத்தை கட்டுப்படுத்தியது 'தான்தான் உத்தரவிடும் அதிகாரம்' படைத்தவர் என்பதை காட்டியது.

இறுதி சடங்கின் முடிவுக்கு பிறகு அவர் அளித்த பேட்டியில் இறுதி அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், உதவி செய்த அரசுக்கும் நன்றி தெரிவிப்பதாக மட்டுமே இருந்திருக்க வேண்டும். ஈரம் காயாத விஜயகாந்தின் சமாதி முன் நின்று கொண்டு அரசியல் முழக்கம் செய்தார். “இந்த நல்ல நாளில் உறுதி ஏற்போம்” என்ற சொற்றொடரை பயன்படுத்தி விஜயகாந்த் இறந்த நாளை ‘நல்ல நாள்’ என்றார்.

இனி என்ன நடக்கும்... வருகிற பாராளுமன்ற தேர்தலில் சக்தி வாய்ந்த ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்து ஒரு சில இடங்களையும், பல கோடிகளையும் வாங்குவார். அதற்கு பிறகு வருகிற தேர்தல்களிலும் இந்த பேரமும், சீட்டும் தொடரும். இதை தாண்டி கட்சி சாதிக்கப்போவது ஒன்றுமில்லை. பிரேமலதா முற்றிலுமாக விலகி... ஒரு நேர்மையாளரிடம், நல்ல நிர்வாகியிடம் கட்சியை ஒப்படைத்தால் இப்போதிருக்கும் பலம் குறையாமல் பார்த்துக் கொள்ளலாம்.

செய்வாரா... பிரேமலதா.

மீரான் முகமது

Tags :
dmdkPoliticsPremalatha Vijaykanthvijaykanth
Advertisement
Next Article