பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் ஒத்திவைப்பு!
பாகிஸ்தானில் வரும் பிப்டவரி 8 ஆம் தேதி அன்று பொதுத்தேர்தல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் பாகிஸ்தானில் தற்போது நிலவி வரும் குளிர்காலம் காரணமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடும் குளிர் வாட்டி எடுத்து வருகிறது.
எனவே கடுமையான வானிலை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக, அடுத்த மாதம் நடைபெற உள்ள பொதுத்தேர்தலை ஒத்திவைக்க பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தகவல் தொடர்பு துறை மந்திரி முர்தாஸா சோலங்கி, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் உள்ளிட்டோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
முன்னதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சிக்கு கிரிக்கெட் மட்டை சின்னத்தை இரத்து செய்து தேர்தல் ஆணையம் வழங்கிய உத்தரவை நீதிமன்றம் உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனாலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதியில் பொதுத்தேர்தலை நடத்தி முடிக்க அந்நாட்டின் தேர்தல் ஆணையத்திற்கு பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. தற்போது இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் பாகிஸ்தான் அரசியல் களத்தில் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.