தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

போர்ட் பிளேர் பெயர் இனி ‘ஸ்ரீ விஜய புரம்’ என மாற்றம் - மத்திய அரசு அறிவிப்பு.

07:29 PM Sep 13, 2024 IST | admin
Advertisement

ங்கிலேயர் ஆட்சியின்போது கிழக்கிந்திய கம்பெனி கடற்படை அதிகாரி ஆர்க்கிபால்ட் பிளேயரின் மறைவுக்குப் பின்னர், அவரது நினைவாக அந்தமான் தலைநகருக்கு போர்ட் பிளேர் என பெயர் சூட்டப்பட்டது.இதை ‘ஸ்ரீ விஜய புரம்’ என மாற்றி மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.மோடி தலைமையிலான பாஜக ஆட்சி பொறுப்பு ஏற்ற பின்னர் ஏராளமான ஊர்கள், ரயில் நிலையங்களின் பெயர்கள் இந்துத்துவா அடையாளம் கொண்ட பெயராக மாற்றப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் அலிகார் எனும் ஊரின் பெயரை ஹரிகார் என்றும், அலகாபாத்-ஐ பிரயாக்ராஜ் என்றும், ஃபரிதாபாத்-ஐ அயோத்தி என்றும், முகல்சராய் ஜங்சனை, தீன்தயாள் உபாத்யாயா ஜங்சன் என்றும் பெயர் மாற்றப்பட்டிருந்தது.அந்தமான் தலைநகர் போர்ட் பிளேரின் பெயர் 'ஸ்ரீ விஜயபுரம்' என மாற்றப்பட்டிருப்பது விவாதங்களை கிளப்பியுள்ளது.

Advertisement

நம் இந்தியாவின் யூனியன் பிரதேசங்களில் ஒன்றான அந்தமான் நிக்கோபார் தீவுகள் உலக பிரபல சுற்றுலா தலங்களுள் ஒன்று. இங்கு மொத்தம் 571 தீவுகள் உள்ளன. அவற்றில் 37 தீவுகளில் மனிதர்கள் வசிக்கின்றனர்.ராஜேந்திர சோழனின் காலத்தில் இத்தீவுகள் ஒரு முக்கிய கடற்படை தளமாக திகழ்ந்தது. சோழர்கள் தீவை மா-நக்கவரம் என்று அழைத்தனர். இதுவே தற்போது நிக்கோபார் என்கிற பெயர் வரக் காரணமாக இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அந்தமானில் நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்களில் மற்றுமொரு தலம் தான் போர்ட் பிளேர்.இயற்கையின் வனப்பும், வரலாற்று முக்கியத்துவமும் ஒன்றிணைந்த போர்ட் பிளேர் பயணிகளுக்கு ஒரு புது வித அனுபவத்தை அளிக்கிறது.

Advertisement

மேலும் அந்தமான் என்றவுடன் முதலில் நமக்கு தோன்றுவது அங்கு அமைந்திருக்கும் செல்லுலார் சிறைச் சாலை தான். இதனை காலா பானி (கருப்பு தண்ணீர்) என்றும் அழைக்கின்றனர். பிரிட்டிஷ் காலத்தில் சுதந்திரத்துக்காக போராடிய தியாகிகளை, அரசியல் கைதிகளை இந்த சிறையில் தான் அடைத்து வைத்தனர். பல கைதிகளில் மரணப்பீடமாக இந்த சிறை திகழ்ந்தது என்றே சொல்லலாம்.1896ஆம் ஆண்டு இதன் கட்டுமானம் தொடங்கப்பட்டு, 1906ல் கட்டிமுடிக்கப்பட்டது. ஆறு வரிசைகளில் மூன்று தளங்கள் கொண்ட இச்சிறை, 1947ல் இந்திய சுதந்திரம் அடைந்த பின்னர் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது.போர்ட் பிலேரிலிருந்து சுமார் 15 நிமிடம் பயணித்தால் வருகிறது ராஸ் தீவு. இங்கு சிதைந்த பிரிட்டிஷ் கால கட்டிடங்கள் பல உள்ளன.

இதை தவிர ராஸ் தீவு பீனல் காலனியின் இடிபாடுகளுக்கு பிரபலமாக இருக்கிறது. பீனல் காலனி என்பது ஒரு சிறையாகும். கைதிகளை மனிதர்களிடமிருந்து தனித்து அடைத்துவைத்து, சித்திரவதைக்கு உள்ளாக்கும் இடமாக இருந்தது இந்த பீனல் காலனி.இந்தியாவில் 1857ல் நடந்த புரட்சியில் கைதுசெய்யப்பட்டவர்களை அடைத்து  வைக்க இந்த சிறை முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது.இப்பேர்பட்ட டூரிஸ்ட் ஸ்பாட்டின் பெயரை ஶ்ரீ விஜயபுரம் என்று மாற்றி விட்டதாக எக்ஸ் தளம் மூலம் தகவல் வெளியாகியுள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அனைத்து அடிமைச் சின்னங்களில் இருந்தும் நாட்டை விடுவிக்க வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தீர்மானத்தால் ஈர்க்கப்பட்டு, இன்று உள்துறை அமைச்சகம் போர்ட் பிளேருக்கு 'ஸ்ரீ விஜயபுரம்' என்று பெயரிட முடிவு செய்துள்ளது. ‘ஸ்ரீ விஜயபுரம்’ என்ற பெயர் நமது சுதந்திரப் போராட்டத்தையும், அதில் அந்தமான் நிக்கோபார் பங்களிப்பையும் பிரதிபலிக்கிறது.

இந்த தீவு நமது நாட்டின் சுதந்திரத்திலும் சரித்திரத்திலும் தனித்துவம் பெற்றுள்ளது. சோழப் பேரரசின் கடற்படைத் தளமாக விளங்கிய இந்தத் தீவு, இன்று நாட்டின் பாதுகாப்பையும் வளர்ச்சியையும் துரிதப்படுத்தத் தயாராக உள்ளது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் முதன்முறையாக மூவர்ணக் கொடியை ஏற்றிய இடமாகவும், வீர சாவர்க்கரும் பிற சுதந்திரப் போராட்ட வீரர்களும் செல்லுலார் சிறையில் இந்தியத் தாயின் சுதந்திரத்திற்காகப் போராடிய இடமாகவும் இந்த தீவு உள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
central govtName ChangedPort BlairSri Vijaya Puramபோர்ட் பிளேர்
Advertisement
Next Article