For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

தமிழ்நாடு முழுவதும் மார்ச் 3 ந்தேதி ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து முகாம்!

08:04 PM Feb 21, 2024 IST | admin
தமிழ்நாடு முழுவதும் மார்ச் 3 ந்தேதி ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து முகாம்
Advertisement

ரும் மார்ச் 3 ந்தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு முழுவதும் 43,051 இடங்களில் நடைபெறும் போலியோ சொட்டு மருந்து முகாம்களில், பெற்றோர்கள் தங்களது 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொள்ளும்படி சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Advertisement

இது குறித்து சுகாதாரத்துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாத நோயை அறவே ஒழிக்க ஒன்றிய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி , பிறந்தது முதல் ஐந்து வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், போலியோ சொட்டு மருந்து முகாம்கள் ஒவ்வொரு ஆண்டும் பொது சுகாதாரத்துறை மூலம் நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும் மீண்டும் ஒரு முறை இந்த சொட்டு மருந்து வழங்கலாம். ஆண்டுக்கு 2 தவணைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது. இதன் தீவிர முயற்சியின் பலனாக போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது.

Advertisement

இதனை கடைப்பிடிக்கும் வகையில் தற்போது கடந்த 4 ஆண்டுகளாக, ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் நடப்பாண்டில் தமிழ்நாடு முழுவதும் மார்ச் 3ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 43,051 இடங்களில் 57 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகளில் மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இது தவிர பயணம் மேற்கொள்பவர்களின் வசதிக்காக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், சோதனைச்சாவடிகளில் நடமாடும் வாகனம் மூலம், காலை 7 மணி முதல் மாலை, 5 மணி வரை சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணியில் சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் என 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட இருப்பதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement