சமாதானமாகி கைகுலுக்கிக் கொண்ட போலீஸ் & போக்குவரத்து!
போன 22ம் தேதி, நாகர்கோவிலில் இருந்து நாங்குநேரி வழியாக தூத்துக்குடி செல்லும் அரசு பஸ்ஸில், நாங்குநேரி நீதிமன்ற பஸ் ஸ்டாப்பிற்கு அடுத்த ஸ்டாப்பில் போலீஸ் யூனிபார்முடன் ஒருவர் ஏறினார். அவரிடம் கண்டக்டர் டிக்கெட் கேட்ட பொழுது எடுக்க மறுத்து தான் அரசு ஊழியர் அரசு பணிக்காக செல்கிறேன் என கூறியுள்ளார். ஆனால் போலீஸ் வாரண்ட் இருந்தால் மட்டுமே இலவசமாக பயணிக்க முடியும் என கண்டக்டர் அவரிடம் கூறியுள்ளார் இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சில நிமிடங்கள் பஸ் நிறுத்தப்பட்டு பின்னர் ஒரு காவலர் சமாதானம் செய்து, காவலருக்கு டிக்கெட் எடுக்கப்பட்டு மீண்டும் பேருந்து இயக்கப்பட்டது.
அப்போது போலீஸூக்கும், கண்டக்டருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் வீடியோவாக வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதை அடுத்து அரசுப் பேருந்துகளில், போலீசார் கட்டணமின்றி பயணிக்க அனுமதி இல்லை. வாரண்ட் இருந்தால் மட்டுமே காவல் துறையினர் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்க முடியும். மற்ற அனைத்து நேரத்திலும் போலீசார் டிக்கெட் எடுத்துதான் பயணிக்க வேண்டும்" என்று போக்குவரத்துத் துறை அறிக்கை வெளியிட்டு தெளிவுப்படுத்த முயன்றது.
ஆனால் அதனால், போலீஸ் டிப்பார்மெண்டுக்கும், போக்குவரத்துதுறைக்கும் மோதல் வெடித்தது. அதாவது இந்த சம்பவத்தை அடுத்து, அரசு பேருந்துகள் மீது போக்குவரத்து காவலர்களின் நடவடிக்கை சற்று கடுமையானது. அரசு பேருந்து எல்லை கோட்டை தாண்டி நிற்பது, நோ பார்க்கிங்கில் அரசு பேருந்து நிற்பது, ஓட்டுனர்கள் சீட் பெல்ட் அணிவதில்லை, அதிகளவு பயணிகள் ஏற்றி செல்கின்றனர் என பல்வேறு வழக்குகள் அரசு பேருந்துகள் மற்றும் ஓட்டுனர்கள் மீது பதியப்பட்டன.
இப்படியாக தாம்பரம், சென்னை, நெல்லை என பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து ஊழியர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையேயான பனிப்போர் தொடர்ந்து வந்தது. இதனை அடுத்து , இந்த மோதல் போக்கை தடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி, டிடிவி. தினகரன், அண்ணாமலை, அன்புமணி ராமதாஸ் உட்பட அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். அது மட்டுமின்றி "சட்ட விதிமீறல்களை காரணம் காண்பித்து அபராதம் விதிப்பதால் போக்குவரத்து ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து வருவதால், தமிழக முதல்வர் இதற்கு சரியான தீர்வு அளிக்க வேண்டும்" என்று தமிழக முதல்வருக்கு ஊழியர்கள் சங்கம் சார்பில் கடிதம் எழுதினர். இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கும் சென்றது.
இதையடுத்து, இன்று தலைமை செயலகத்தில், உள்துறை செயலாளர் அமுதா, போக்குவரத்துத் துறை செயலாளர் பணீந்திர ரெட்டியுன் ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது, போக்குவரத்துதுறையினர், காவல்துறையினர் இடையே கடந்த சில நாட்களாக நடந்து வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டது. இன்று சம்பந்தப்பட்ட இரு அரசு ஊழியர்களும் ஒருவரை ஒருவர் சந்தித்து பேசி அதனை வீடியோவாக வெளியிட்டு இனி போக்குவரத்து துறையும், காவல்துறையும் சமாதானமாக செல்வோம் என கூறி இந்த இரு அரசு துறைகளுக்கு இடையேயான பிரச்னையை சரி செய்துள்ளனர்.