For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

பாமக ராமதாஸ் Vs அன்புமணி மோதல் நாடகமா?

09:17 PM Dec 28, 2024 IST | admin
பாமக ராமதாஸ் vs  அன்புமணி மோதல் நாடகமா
Advertisement

தமிழக அரசியலில் சலசலப்ப்பை மட்டுமே ஏற்படுத்தி தன் இருப்பைக் காட்டி பிழைப்பு ஓட்டும் பாமக-வின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 28) புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில், சுங்கச்சாவடி அருகிலுள்ள சங்கமித்ரா திருமண அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டார்கள்.

Advertisement

இந்த கூட்டத்தில் 2024 ஆம் ஆண்டில் கட்சி மேற்கொண்ட பணிகள் ஆய்வு செய்யப்பட்டு, 2025 ஆம் ஆண்டில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, இளைஞரணி தலைவர் நியமனம் தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

அப்போது பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், தன் பேரன் முகுந்தன் பரசுராமனை மாநில இளைஞர் சங்கத் தலைவராக அறிவித்து, “அன்புமணிக்கு உதவியாக இருக்க வேண்டும்” என்றார். அப்போது குறுக்கிட்ட அன்புமணி ராமதாஸ், “யார்... எனக்கா?” என்றார். அதற்கு ராமதாஸ் “ஆமாம்” என்றார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

அப்போது அன்புமணி, “எனக்கெல்லாம் வேண்டாம். அவர் இப்போதுதான் கட்சிக்கு வந்து நான்கு மாதம் ஆகிறது. உடனடியாக அவருக்கு இளைஞர் சங்கத் தலைவர் பொறுப்பு என்றால், என்ன அனுபவம் இருக்கிறது அவருக்கு? நல்ல அனுபவசாலிக்கு அந்தப் பொறுப்பைக் கொடுங்கள். முகுந்தன் பரசுராமனுக்கு வேறு ஏதாவது பதவி கொடுங்கள். இப்போது பேசும்போது கூட நான் அதைத்தான் கூறினேன். களத்தில் நல்ல ஆட்கள், திறமையானவர்கள் வேண்டும் என்று பேசினேன். வந்த உடனே இளைஞர் சங்க பொறுப்பைக் கொடுத்துக்கிட்டு...” என்று ஆவேசமாக பேசினார்.

அதற்கு ராமதாஸ், “யாராக இருந்தாலும் நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். நான் சொல்வதைக் கேட்கவில்லையென்றால், யாரும் இந்தக் கட்சியில் இருக்க முடியாது. இது நான் உருவாக்கிய கட்சி. நான் சொல்வதைக் கேட்க முடியாவிட்டால், யாரும் இனி இந்தக் கட்சியில் இருக்க முடியாது,” என்றார். அப்போது அரங்கத்தில் இருந்தவர்கள் கரவொலி எழுப்பி, விசிலடித்து ஆரவாரம் செய்தனர். அதற்கு அன்புமணி, “அது சரி” என்றார். அப்போது ராமதாஸ், “என்ன சரி, சரி என்றால் போ அப்போ,” என்றார்.

பின்னர் ராமதாஸ், “முகுந்தன் பரசுராமனை பாமக மாநில இளைஞர் சங்கத் தலைவராக நியமிக்கப்படுகிறார்,” என்று அறிவித்தார். அதற்கு அன்புமணி, “குடும்பத்தில் இருந்து இன்னொருவரை தூக்கிப் போடுங்கள்,” என்று கூறி, கையில் இருந்த மைக்கை மேஜை மீது எறிந்தார். பின்னர் பேசிய அவர், “சென்னை பனையூரில், மூன்றாவது தெருவில் நான் புதிதாக அலுவலகம் ஒன்றை ஆரம்பித்துள்ளேன். அங்கு வந்து அனைவரும் என்னைப் பார்க்கலாம்” என்று கூறி தொலைப்பேசி எண்ணை அறிவித்து, “இந்த எண்ணை குறித்து கொள்ளுங்கள், என்னைத் தொடர்பு கொண்டு அனைவரும் வந்து எப்போது வேண்டும் என்றாலும், என்னை வந்து பார்க்கலாம்” என்றார்.

அதற்குள் ராமதாஸ், “மீண்டும் கூறுகிறேன்... உங்களுடைய இளைஞர் சங்கத் தலைவர் முகுந்தன் பரசுராமன். இன்னொரு அலுவலுவகம் கூட திறந்து நடத்திக்கொள். முகுந்தன் உனக்கு உதவியாக இருக்கப்போகிறார். இதை யாரும் மாற்ற முடியாது. உனக்கு விருப்பம் இல்லையென்றால், அதற்கு வேறு ஒன்றும் நான் சொல்ல முடியாது” என்றார். அப்போது கூட்டத்தில் இருந்தவர்கள் எழுந்து சலசலப்பில் ஈடுபட்டனர். அதற்கு ராமதாஸ், “நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். இது நான் ஆரம்பித்த கட்சி. நான் என்ன சொல்கிறேனோ அதைத்தான் அனைவரும் கேட்க வேண்டும். அப்படி விருப்பம் இல்லாதவர்கள் விலகிக்கொள்ளுங்கள். விருப்பம் இல்லாதவர்கள், என் பேச்சைக் கேட்காதவர்கள் கட்சியிலிருந்து விலகிக் கொள்ளலாம்,” என்றார்.

அடிசினல் ரிப்போர்ட்:

இதை அடுத்து பாமக தொண்டர் குரல் இதோ: 

சபாஷ் டாக்டர் ஐயா..👏

பிரமாதமாக உங்களது திட்டத்தை மகனுடன் சேர்ந்து நிறைவேற்றி விட்டீர்கள் டாக்டர் ஐயா..

உங்களது சாணக்கியத்தனத்தை நினைத்தால் புல்லரிக்கிறது.

கூட்டத்தில் பேசியபடி இது உங்கள் கட்சி.. நீங்கள் ஆரம்பித்த கட்சி.. நீங்கள் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் எந்த பொறுப்பிலும் நியமிக்கலாம். அதை யாரும் கேள்வி கேட்க முடியாது.

அதுதான் ஆரம்ப காலம் தொட்டு இன்று வரை நடந்து கொண்டிருக்கிறது. அப்படி இருக்க உங்கள் பேரனான முகுந்தனை ஒரு பொறுப்பில் நியமித்திருக்கிறேன் என்று போகிற போக்கில் அறிவித்து விட்டு போக வேண்டியது தானே? உங்களை யார் எதுவும் கேட்க முடியுமா என்ன?

ஏதோ கட்சி ஜனநாயக ரீதியில் செயல்படுவது போல உங்கள் மகனே அதை எதிர்க்கிறார்.. இல்லையில்லை.. எதிர்ப்பது போல நடிக்கிறார்.

பதிலுக்கு நீங்களும் மகனை மிஞ்சி யாராக இருந்தாலும் சரி நான் சொல்வதை கேட்டாக வேண்டும் இல்லை என்றால் அவர்கள் தாராளமாக வெளியேறலாம் என்று நடிப்பாலே பதிலடி கொடுக்கிறீர்கள்.

நாங்கள் மெய் மறந்து பார்த்து கேட்டுக் கொண்டிருக்கிறோம். கைதட்டுங்கப்பா என்று சொல்கிறீர்களே அப்போது தான் கண் விழித்தோம்.

அடேங்கப்பா அன்புமணி அப்பாவையே எதிர்த்து விட்டார் என்ன துணிச்சல்? என்று நாங்கள் புளகாங்கிதம் அடைய வேண்டும் என்பதுதான் உங்களது எதிர்பார்ப்பு. ஆனால் அப்படி நடக்கப் போவதில்லை காரணம் இது எங்களுக்கு பழகி (சலித்து) ப்போய்விட்டது.

உண்மையிலேயே கட்சியில் ஜனநாயகம் இருக்குமானால் அந்த மேடையிலேயே நீங்கள் அன்புமணியை கட்சியை விட்டு நீக்கி இருக்க வேண்டுமே. .. அப்படி நடக்கவில்லை. நடக்கவும் நடக்காது.

அப்படி செய்யவில்லை மாறாக உங்கள் மைந்தரோ நான் தனியா ஆபிஸ் போட்டு இருக்கேன் அங்க வாங்க என்கிறார். இதிலிருந்த இது திட்டமிட்ட நீங்கள் இருவரும் சேர்ந்து திட்டமிட்ட திரைக்கதை வசனம் எழுதி இயக்கிய நாடகம் என்பது எங்களுக்கு புரிந்து விட்டது.

கொஞ்ச நாளைக்கு பிறகு... கொஞ்ச நாள் என்ன கொஞ்ச நாள் கொஞ்ச நேரத்துக்கு பிறகு வீட்டில் நீங்கள் இருவரும் எங்களது முட்டாள்தனத்தை நினைத்து சிரித்து பேசிக்கொண்டு கொண்டுதான் இருக்கப் போகிறீர்கள்.

அப்புறம் எதற்கு டாக்டர் ஐயா இந்த நாடகம்? கொஞ்சம் அனுபமிக்கவராக இருந்தால்.. நல்லது என்று சொல்லும் அன்புமணிக்கு அப்படி அனுபவமிக்க தகுதி வாய்ந்த நிறைய பேர் கட்சியில் இருப்பது தெரியாதா? உங்களுக்கு தான் தெரியாதா? ரெண்டு பேருக்குமே தெரியும்..

ஆனால் வாரிசை களமிறக்க கச்சிதமாய் பொது மேடையில் நடித்திருக்கிறீர்கள்.. இன்னும் ரெண்டு மூன்று நாளைக்கு எல்லா மீடியாக்களிலும் இந்த செய்தி தான்.

கதை திரைக்கதை வசனம் நடிப்பு இயக்கம் எல்லாமே சூப்பர்...பாமகவின் தொண்டன் என்பதில் பெருமையாக இருக்கிறது. காலரை தூக்கி விட்டுக்கொள்கிறேன்..

✍️இப்படிக்கு

இதையெல்லாம் நேரில் சொல்ல முடியாத ஒரு உண்மை தொண்டன்😭

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
Advertisement