தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

பிரதமர் மோடியின் செல்லப்பிள்ளை & தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் - பின்னணி ரிப்போர்ட்!

07:47 PM Jun 13, 2024 IST | admin
Advertisement

தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் 3வது முறையாக நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கு நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் வழங்கி உள்ளது.

Advertisement

கடந்த 2014ம் ஆண்டு மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு, அஜித் தோவல், நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். 2019ம் ஆண்டு மோடி மீண்டும் பதவியேற்ற பிறகு, அஜித் தோவலின் பதவிக்காலம் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டது. மேலும், அவரது பதவி கேபினட் அமைச்சர் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டு பல குற்றச்சாட்டுகளும் அஜித் தோவலுக்கு எதிராக முன்வைக்கப்படுகின்றன என்றாலும், அவர் பிரதமர் மோடியின் செல்லப்பிள்ளையானதால் மறுபடியும் அதே பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

ஆக்ரா யுனிவர்சிட்டியில் எக்கனாமிக்ஸ் டிகிரி படித்த அஜித் தோவல், 1968-ம் வருட கேரள கேடர் ஐபிஎஸ் அதிகாரி. ஐபிஎஸ் பயிற்சிக்குப் பின்னர் இன்டலிஜென்ஸ் பீரோ ( ஐபி) எனப்படும் இந்திய உளவுத்துறையிலும், வெளிநாட்டு உளவுப் பிரிவான `ரா'-விலும் (Research and Analysis Wing- RAW) இர்க் செய்தவர். பஞ்சாப் மற்றும் மிஸோராம் மாநிலங்களில் தீவிரவாதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளைத் திறம்படக் கையாண்டு, அதன் இயக்குநராக ஆகும் அளவுக்குத் தனது பணித்திறனை வெளிப்படுத்தியவர்.

1980-களில் மிஸோராம் தேசிய முன்னணி இயக்கத்தால் பல்வேறு தீவிரவாத அச்சுறுத்தல்களை இந்தியா எதிர்கொண்டிருந்தது. தோவல், அப்போது தனக்கே உரித்தான உளவாளி சாமர்த்தியத்துடன் மிஸோராம் தேசிய ஏஜென்சிக்குள் ஊடுருவி, அதன் முக்கிய கமாண்டர்களின் நம்பிக்கையைப் பெற்று, மிஸோராம் தேசிய முன்னணி இயக்கத்தைக் கூண்டோடு காலி செய்தார். மேலும், சீனப் பகுதிக்குள் இயங்கிய மிஸோ தேசிய ராணுவத்தில் ரகசியமாகச் சேர்ந்து, இந்திய ராணுவத்துக்கு ரகசியமாகத் தகவல்களை அனுப்பி வந்தார். 1970, 1980, 1990களில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட 10-க்கும் மேற்பட்ட விமான கடத்தல் சம்பவங்களை லாவகமாக கையாண்டவர். குறிப்பாக 1999 கந்தகார் விமானக் கடத்தலில் பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய இந்திய அரசு குழுவுக்கு தலைமை வகித்தவர் அஜித் தோவல். பின்னர் இந்திய உளவுத் துறையான ஐபியின் இயக்குநரானார். 2014-ம் ஆண்டு முதல் முறையாக மோடி, பிரதமரான போது நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டு மோடியின் செல்லபிள்ளையாகி இன்றும் அப்பதவியில் தொடர்கிறார்

இந்த அஜித் தோவலின் அக்சீவ்மெண்ட் மற்றும் பாசிட்டிவ் பக்கங்கள் எக்கச்சம் என்றாலும், தன் பணி வரம்பை மீறி சிபிஐ உட்பட மத்திய அரசின் பல துறைகளில் மூக்கை நுழைக்கிறார் என்பது போன்ற குற்றச்சாட்டுகளும், ரஃபேல் விமானங்களை கொள்முதல் செய்த விவகாரத்திலும் அஜித் தோவலின் மகன் சவுரியா தோவல் நடத்தும் `இந்தியா பவுண்டேஷன்' நிறுவனம் மீதான சர்ச்சைகளும் நெகட்டிவ் பக்கங்களாக உள்ளன. ஆனாலும் தோவலின் அசாத்திய திறமை மற்றும் புத்திசாலித்தனத்தை மிஞ்ச இன்று வரை யாருமில்லை.

சாம்பிளாக சொல்வதானால் 1999-ம் ஆண்டு நடந்த கந்தகார் விமானக் கடத்தல் சம்பவத்தில் தீவிரவாதிகளுடன் இந்தியாவின் தலைமை பேச்சுவார்த்தையாளராகப் பணியாற்ற வைத்தது. 1971 முதல் 1999-ம் ஆண்டு வரை நடந்த 15 விமானக் கடத்தல் சம்பவங்களை முடிவுக்குக் கொண்டுவந்ததின் பின்னணியில் இவரது பங்களிப்பு முக்கியமாக இருந்தது.

மேலும் அஜித் தோவலின் வாழ்க்கையில், நிஜ ஜேம்ஸ்பாண்ட் ஸ்டைலிலான திகில் நிறைந்த சாஃப்டர் என்றால், அது அவர் பாகிஸ்தானில் `ரா' உளவாளியாகப் பணியாற்றிய 7 வருட சர்வீஸ்தான். அதுதான் அவரை `இந்திய 007’ என்று சொல்லும் அளவுக்கு இந்திய அரசு வட்டாரங்களில் அடையாளம் காட்டியது. `ரா'வின் அண்டர்கவர் ஏஜென்டாக பாகிஸ்தானுக்குச் சென்ற தோவலுக்கு உருதுமொழியில் பேசவும் எழுதவும் நல்ல தேர்ச்சி உண்டு. அதனால்தான், அந்த சீக்ரெட் ஆபரேஷனுக்கு அவரை அனுப்பியது `ரா'. லாகூரில் வாழ்ந்த தோவலுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியப் பணி, பாகிஸ்தான் உளவுத் துறையான ஐஎஸ்ஐ-யின் செயல்பாடுகளையும் நடவடிக்கைகளையும் உளவுபார்ப்பதுதான். மேலும், அந்தக் காலகட்டத்தில் அவர், பாகிஸ்தான் தீவிரவாதிகளின் பல்வேறு தாக்குதல் திட்டங்கள், பயன்படுத்தும் ஆயுதங்கள் மற்றும் அவர்களின் மறைவிடங்கள் குறித்தும் ஏராளமான தகவல்களை இந்திய உளவுத் துறைக்கு அனுப்பி வைத்தார்.

ஒரு முறை லாகூரில் உள்ள மசூதி ஒன்றிலிருந்து அஜித் தோவல் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது நீண்ட வெண் தாடியுடன் எதிரே வந்த ஓர் இஸ்லாமிய முதியவர், தோவலைத் தடுத்து நிறுத்தி, கேள்வி ஒன்றைக் கேட்டார். அது அஜித் தோவலின் முதுகுத்தண்டை அப்படியே அதிர்ச்சியில் ஜில்லிட வைத்தது. அந்த முதியவர் கேட்ட கேள்வி, ``நீ ஒரு இந்துதானே..?" உள்ளுக்குள் அதிர்ந்தாலும், தோவல் ஒரு தேர்ந்த உளவாளி அல்லவா? அதற்கு முன்னர் எத்தனை `அண்டர் கவர் ஆபரேஷன்'களை நடத்தியிருப்பார்? இதுபோன்ற சிக்கலான சூழல்களை எப்படிச் சமாளிக்க வேண்டும் என்பதை அவரது முந்தைய பணி அனுபவங்கள் அவருக்குக் கற்றுக் கொடுத்திருக்கும்தானே..? முகத்தில் எந்த ஓர் உணர்ச்சியையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல், தான் இந்து அல்ல என்று உடனடியாக மறுத்தார். ஆனால், அந்த முதியவர் விடவில்லை. "இல்லை... நீ ஒரு இந்துதான்!" எனத் தொடர்ந்து கூறினார்.

``மாட்டிக்கொண்டோமோ... இந்த முதியவர் கத்தி ஊரைக் கூட்டிவிடுவாரோ... எப்படித் தப்பிப்பது?" என்றெல்லாம் உள்ளுக்குள் ஸ்கெட்ச் போட்டபடியே, அதே சமயம் கேசுவலாக, ``எது என்னை ஒரு இந்துவாக உங்களை உணரவைத்தது?" என்ற கேள்வியை அந்த முதியவரிடம் கேட்டார் தோவல். அதைக் கேட்ட அந்த முதியவர் புன்னகைத்தபடியே தன்னைப் பின் தொடருமாறு சைகை செய்தார். தோவலும் அவர் பின்னாலேயே நடந்து சென்றார். ஒரு பழைய வீட்டுக்கு முன் சென்றதும் நின்ற அந்த முதியவர், வீட்டுக்குள் வருமாறு கூப்பிட்டார். உள்ளே சென்றதும் அலமாரி ஒன்றைத் திறந்த அந்த முதியவர், உள்ளுக்குள் இருந்த சிவன், துர்கா போன்ற கடவுளர்கள் படங்களைக் காண்பித்தார். தோவல் சற்று அதிர்ச்சியடைந்தாலும், அதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. ஆனாலும், ``தனது கேள்விக்கு இது பதில் அல்லவே..." என்று நினைத்த தோவல், அதே கேள்வியை மீண்டும் கேட்டார்.

அப்போது அந்த முதியவர் தோவலிடம், ``உனது காதில் துளை இருக்கிறது. அது இந்துக்களின் வழக்கம். அதனால்தான் அவ்வளவு உறுதியாகச் சொன்னேன்!" எனக் கூறியுள்ளார். ஆனால், தோவல் அசரவில்லை. ``ஆமாம்... நானும் முன்னர் இந்துவாகத்தான் இருந்தேன். ஆனால், பின்னர் இஸ்லாமுக்கு மாறிவிட்டேன்" எனச் சொன்னார். இருப்பினும் அந்தக் கதையை அந்த முதியவர் நம்பவில்லை. கூடவே, ``நானும் ஒரு இந்துதான். இங்குள்ளவர்கள் எனது குடும்பத்தினரைக் கொன்றுவிட்டார்கள். எனவேதான் உயிர் பிழைப்பதற்காக நானும் ஒரு முஸ்லிம் என்ற போர்வையில் வாழ்கிறேன்" என்று சொல்லியுள்ளார். அப்போதுதான் தோவலுக்குச் சற்று நிம்மதியே ஏற்பட்டது. ஆனாலும், தோவல் உணர்ச்சிவசப்பட்டு தன்னைப்பற்றிய எந்த ஒரு விவரத்தையும் கூறிவிடவில்லை. இதுவெல்லாம் உளவுப் பயிற்சியின் பாலபாடம் அல்லவா? " அப்படியா...?" என்பதுபோல் முகத்தை வைத்துக்கொண்டார். அந்த முதியவர் என்ன நினைத்தாரோ... " உனது காதில் உள்ள துவாரத்தை ஆபரேஷன் மூலம் மறைத்துவிடு. இல்லாவிட்டால் என்னைப் போல் வேறு யாரிடமாவது மாட்டிக்கொண்டு அது உனது உயிருக்கே உலை வைத்து விடும்" என்று அறிவுறுத்தியுள்ளார்.

இப்படி 7 ஆண்டுக்காலம் பாகிஸ்தானில் வெற்றிகரமாகத் தனது உளவுப் பணியை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய தோவலுக்கு, காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷன் கொடுக்கப்பட்டது. எதிராளிகளிடம் மிகத் தந்திரமாகப் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை ஒரு குறிப்பிட்ட விஷயத்துக்கு ஒப்புக்கொள்ள வைப்பதில் படு சமர்த்தர் அஜித் தோவல். அதனால்தான், அவரால் பல காஷ்மீர் குழுக்களுக்குள் ரகசியமாக ஊடுருவி, அவர்களில் பலரை மூளைச் சலவை செய்து, அந்த இயக்கங்களிலேயே தனக்கு ஆதரவான கறுப்பு ஆடுகளை உருவாக்க முடிந்தது. அப்படி, மூளைச் சலவை செய்யும் தீவிரவாதிகளிடம் தொடர்ந்து பேசி, அவர்களை இந்தியாவுக்கு ஆதரவான மன நிலைக்கு மாற்றி, பின்னர் அவர்கள் மூலமாகவே தீவிரவாத குழுக்களின் ரகசிய தாக்குதல் திட்டங்களை முன்கூட்டியே அறிந்து, அதை முறியடிக்க வைத்துள்ளார்.

பணியில் சேர்ந்த ஆறே ஆண்டுகளில் போலீஸ் பதக்கம் பெற்ற முதல் அதிகாரியாகத் திகழ்ந்த அஜித், தேசத்துக்கு ஆற்றிய பல சிறப்பான சேவைகளுக்காக ஜனாதிபதியிடமிருந்து `கீர்த்தி சக்ரா’ விருது மற்றும் போலீஸ் விருது பெற்றவர். இன்டலிஜென்ஸ் பீரோவில் (ஐபி) 10 ஆண்டுகள் வரை பணியாற்றிய தோவல், 2004-05-ம் ஆண்டுகளில் அதன் இயக்குநராகவும் பதவி வகித்தார். மிக நுணுக்கமாகத் திட்டமிடுவதிலும் பகுப்பாய்வு செய்வதிலும் வல்லவர்.

இந்த சர்வீஸ் ரிக்கார்ட்டைப் பார்த்தே 2014-ல் மே மாதம் மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற சில தினங்களிலேயே, அஜித் தோவல் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக (என்எஸ்ஏ - National Security advisor) நியமிக்கப்பட்டார். அப்போதிருந்தே அஜித் தோவல், தனது அதிரடிகளை அரங்கேற்றத் தொடங்கி இன்றும் தொடர்கிறார்.

வாத்தீ அகஸ்தீஸ்வரன்

Tags :
Ajit DovalNational Security AdviserPM Modi's Pet
Advertisement
Next Article