For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

முடிந்தால் மறுவாசிப்புச் செய்யுங்கள்!

07:48 PM Dec 20, 2024 IST | admin
முடிந்தால் மறுவாசிப்புச் செய்யுங்கள்
Advertisement

‘நல்லது, இளவரசே, அப்படியானால் ஜினோவா, லூக்கா ஆகிய பிரதேசங்கள் போனபார்ட்டுகளின் குடும்பச் சொத்துகளாய் விட்டன. உம்மை ஒரு விஷயத்தில் எச்சரிக்க விரும்புகிறேன். அவன் இப்படிச் செய்ததற்கு அர்த்தம் யுத்தமேதான் என்று நீர் சொல்லாவிட்டால் அல்லது அந்த கிருஸ்து துரோகி இருக்கிறானே, அவன் செய்து வருகிற அக்கிரமங்களையும் கொடுமைகளையும் தாங்கிப் பேசுவதாய் இருந்தால், உமக்கும் எனக்கும் இனி ஒன்றும் இல்லை. நீர் எனக்கு இனி நண்பரும் இல்லை…’

Advertisement

- கிட்டத்தட்ட நாற்பதாண்டுகளுக்கு முன்பு, பத்தோடு பதினொன்றாகவும் இரவல் வாங்கியும் படித்திருந்த, லியோ டால்ஸ்டாயின் ‘போரும் வாழ்வும்’(War and Peace)  நாவலை, இன்று சொந்தமாக விலைக்கு வாங்கி, இரண்டாவது தடைவையாக வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். மேலுள்ளவை அதன் ஆரம்ப வரிகளே. அழகு தமிழில் ஆக்கம் செய்திருப்பவர்: டி.எஸ். சொக்கலிங்கம். ‘தினமணி’ நாளிதழின் முதல் ஆசிரியர். இவருடைய ஊக்கமின்றேல், தமிழிலக்கிய உலகத்திற்கு புதுமைப்பித்தன் கிடைத்திருப்பாரா என்பது ஐயத்திற்குரியதே. இந்நாவல் தமிழில் மொழிபெயர்க்கப் படவும், வெளிவரவும் காரணமாயிருந்தவர் யார்? சொக்கலிங்கமே சொல்கிறார்….!

Advertisement

’இந்தச் சிறந்த நாவலை அப்படியே மொழிபெயர்த்து, ஒருவர் வெளியிடுவது என்பது மிகவும் சிரமமான காரியம். ஏனெனில் அதற்கு ஏற்படும் பணச் செலவு அப்பேர்ப்பட்டது. சக்தி காரியாலயத்தின் உரிமையாளரான ஶ்ரீ கோவிந்தன் (‘சக்தி’ கோவிந்தன்) ஒருவருக்குத்தான் இம்மாதிரியான காரியங்களில் துணிவும் வேகமும் உண்டு. ஆகவே, அவர் இக்காரியத்தைச் செய்யும்படி நேர்ந்திருப்பதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த அரிய பெரிய காரியத்தைச் செய்து, தமிழ் இலக்கியத்திற்கு ஒரு மகத்தான சேவை புரிந்ததற்காக அவரை நான் பாராட்டுகிறேன். இந்த நாவலை மொழிபெயர்க்க வேண்டுமென்று முதலில் அவர் என்னிடம் கேட்டபொழுது, நான் மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுக் கொண்டேன். ஏனெனில், இவ்வளவு பிரசித்தி பெற்ற ஒரு நாவலை மொழிபெயர்க்கக் கூடிய சந்தர்ப்பம் கிடைத்ததற்காக நான் மகிழ்ச்சியுற்றேன். நாவலை மொழி பெய்ர்க்க ஆரம்பித்த பின்பு, அதனால் ஏற்பட்ட இன்பமானது எனது மகிழ்ச்சியை இன்னும் அதிகமாக்கியது’ என்கிறார் அவர்.

ஆக, மொழி பெயர்த்தவருக்கே அப்படியோர் இன்பமென்றால், வாசிப்போருக்கான இன்பம் பல மடங்கு பெருகத்தானே செய்யும். அந்த இன்பத்தை இந்த மறுவாசிப்பில்தான் நான் முழுமையாக அனுபவிக்கப் போகிறேன். இப்படிப்பட்ட உலகப்புகழ் பெற்ற நூல்களை, வாசிக்காதோர் வாசியுங்கள்; வாசித்தோர் முடிந்தால் மறுவாசிப்புச் செய்யுங்கள். இன்றைய வெளியுலக இரைச்சல் மாசுகளால் புழுதி படிந்து கிடக்கும் உள்ளத்தைப் புத்தாக்கம் செய்து கொள்ளுங்கள்

செ. இளங்கோவன்

Tags :
Advertisement