ஐபிஎல்2024 சீசனுக்கான வீரர்கள் ஏலம் துபாயில் நடக்க வாய்ப்பு!
கிரிக்கெட் மேட்சுக்கு இணையானது ஐபிஎல் ஏலம். .முதல் முறையாக இந்த ஏலம் 2008ல்தான் தொடக்கி வைக்கப்பட்டது. ஐபிஎல் ஏலத்தில் எட்டு அணிகளுக்கான வீரர்களை தேர்வு செய்யப்படுவார்கள். இந்த ஏலத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நடத்துகிறது. ஒரு அணியில் அதிகபட்சமாக 25 வீரர்கள் இருக்கலாம். அதில் 8 வெளிநாட்டு வீரர்கள் சேர்த்துக் கொள்ளப்படலாம்.ஒவ்வொரு வீரருக்கும் பேஸ் பிரைஸ் (Base Price)எனப்படும் அடிப்படை விலை உள்ளது. அந்த அடிப்படை விலையில் இருந்து தொடங்கும் ஏலத்தில் அதிக விலையைக் கோரும் எந்தவொரு அணிக்கும் அந்த வீரர் தேர்வாவார்.வீரர்களுக்கான அடிப்படை விலையை நிர்ணயிப்பது பிசிசிஐ. ஆனால், சில தருணத்தில் வீரர்களே கூட தங்களுக்கான அடிப்படை விலையை நிர்ணயிக்கலாம். அந்த தொகை ரூ. 10 லட்சத்துக்கு குறைவானதாகவும் ரூ. 2 கோடிக்கு அதிகமானதாகவும் இருக்கக்கூடாது. குறிப்பிட்ட வீரரை ஒன்றுக்கும் மேற்பட்ட அணிகள் வைத்திருக்க விரும்பும்போது ஏலம் தொடங்கி சூடுபிடிக்கிறது. அதிக ஏலத்தை எந்தவொரு அணி எடுக்கத் தவறுகிறதோ, அந்த வீரர் ஏலத்தை எடுக்கும் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்படுகிறார்.
அதுவே, ஒரு வீரரை யாருமே ஏலத்தில் கேட்காவிட்டால், அவர் ஏலமெடுக்காதவர் பட்டியலில் (Unsold)சேருகிறார். எல்லா வீரர்களும் ஏலத்தில் எடுத்து முடிக்கப்பட்டவுடன் ஏலம் எடுக்கப்படாத வீரர்களின் பெயர்கள் மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இரண்டாவது சுற்றில் அவர்கள் அணியில் சேரும் வாய்ப்பு உருவாகும்.எல்லாக் கழகங்களும் தமக்குரிய விளையாட்டு வீரர்களைப் பெற்றுக் கொள்ளும் வரை ஏலம் தொடரும். ஐபிஎல் ஆட்டத்தைப் பொறுத்துவரை, ஒரு அணியை உருவாக்க அதன் உரிமையாளர் ரூ. 80 கோடியை கொண்டிருக்க வேண்டும். இந்த ஒட்டுமொத்த பட்ஜெட்டையும் அந்த உரிமையாளர் அணிக்காக செலவிட வேண்டிய அவசியமில்லை. எனினும், 75 சதவீத தொகை அதாவது ரூ. 60 கோடி வரை அவர் செலவிட வேண்டும் என புதிய ஐபிஎல் விதிகள் கூறுகின்றன
இப்படியாக அடுத்த ஆண்டு ஐபிஎல் லீக் போட்டிகளுக்கான அப்டேட் வெளியாக தொடங்கியுள்ளது. 10 அணிகள் மோதும் இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் இந்த முறை இந்தியாவில் நடக்காது என முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு பின்னர் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
துபாயில் மிகப் பிரம்மாண்டமாக ஏலம் நடைபெற இருக்கிறது. அதிகபட்சமாக டிசம்பர் 18 அல்லது 19 ஆம் தேதி ஐபிஎல் 2024-க்கான ஏலம் நடைபெறும். இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த முறை ஐபிஎல் ஏலம் டிசம்பர் மாதம் கொச்சியில் நடைபெற்றது. இதில் மொத்தம் 80 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். அதிகபட்சமாக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரண் ரூ. 18.50 கோடிக்கு பஞ்சாப் அணிக்கு தேர்வானார். இதன் மூலம் ஐபிஎல் ஏலத்தில் அதிகத் தொகைக்குத் தேர்வான வீரர் என்கிற சாதனையை படைத்தார்.இதற்கான அறிவிப்போ அல்லது அணியின் உரிமையாளர்களுக்கு சுற்றறிக்கையோ இதுவரை வரவில்லை என்ற நிலையில் இன்னும் ஓரிரு வாரங்களில் இதுகுறித்து உறுதியாக தெரியவரும்
ஐபிஎல் ஏலம் வெளிநாட்டில் நடந்தாலும், ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் தான் நடைபெறும். அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதால் ஐபிஎல் போட்டிகள் வெளிநாட்டுக்கு மாற்றப்படலாம் என்ற பேச்சு எழுந்த நிலையில் அதற்கு பிசிசிஐ வட்டாரங்கள் மறுப்பு தெரிவித்தன. இது குறித்து ஐபிஎல் தலைவர் அருண் சிங் துமல் பேசும்போது, ஐபிஎல் தொடரை வெளிநாட்டுக்கு மாற்றும் பேச்சுக்கே இடமில்லை என தெரிவித்திருக்கிறார். வழக்கம்போல் இந்தியாவில் ஐபிஎல் 2024 கோலாகலமாக நடைபெறும் என தெரிவித்திக்கிறார்.