For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

புத்தாண்டு அன்று திருப்பதி வர திட்டமா? - டிக்கெட் இல்லையென்றால் வராதீங்க - தேவஸ்தான அறிவிப்பு!

07:57 PM Dec 26, 2023 IST | admin
புத்தாண்டு அன்று திருப்பதி வர திட்டமா    டிக்கெட் இல்லையென்றால் வராதீங்க   தேவஸ்தான அறிவிப்பு
Advertisement

திருப்பதி ஏழுமலையான் கோயில் சொர்க்கவாசல் தரிசனத்திற்கான டோக்கன் முடிந்ததால், ஜனவரி ஒன்றாம் தேதி வரை டிக்கெட்கள் இல்லாத பக்தர்கள் தரிசனத்திற்கு வர வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

திருப்பதி - இந்தியா முழுவதும் உள்ள பெருமாள் பக்தர்களின் விருப்பமிக்க ஸ்தலம். ஆண்டுக்கு ஒருமுறையேனும் ஏழுமலையானை தரிசனம் செய்வதைத் தம் வாழ்நாள் கடமையாகக் கொண்டிருக்கும் பக்தர்கள் அநேகர். தினந்தோறும் திருமலையில் 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பேர்வரை தரிசனம் செய்து வருகின்றனர். வார இறுதி நாள்களில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும்.முன்பெல்லாம் தென்னிந்தியாவைச் சேர்ந்த பக்தர்களே அதிகமாக சுவாமி தரிசனம் செய்ய வந்து கொண்டிருந்தனர். காலப்போக்கில் திருப்பதி தேவஸ்தானம் டெல்லி, மும்பை என்று வட இந்தியாவின் மிக முக்கியமான நகரங்களில் தனது தேவஸ்தானக் கிளைகளைத் தொடங்கி, அவ்வப்போது திருமலை திருப்பதி பற்றிய செய்திகளை ஆன்லைன் மூலமாகவும் செய்தித்தாள்கள் மூலமாகவும் வெளியிட்டு வந்த நிலையில் வட இந்திய பக்தர்களின் வருகையும் தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

Advertisement

கடந்த ஐந்து ஆண்டுகளில் வட இந்திய பக்தர்களின் எண்ணிக்கை மொத்த பக்தர்களின் எண்ணிக்கையில் 50 சதவிகிதத்துக்கு இணையாக மாறியிருக்கிறது. திருப்பதியில் இருக்கும் கூட்டத்தைப் பார்த்து ஆந்திர, தமிழக மக்கள் தரிசனம் செய்யச் சற்று பயிற்சி அடைந்திருந்த நேரத்தில், வட இந்திய பக்தர்கள் எதற்கும் கவலைப்படாமல் ஏழை, பணக்காரர் வித்தியாசம் இல்லாமல் தொடர்ந்து திருமலைக்குப் படையெடுத்து வரத் தொடங்கிவிட்டனர். இதனால் சமீப காலமாக வெள்ளி, சனி, ஞாயிறு போன்ற வாரத்தின் இறுதி நாள்களில் கிட்டத்தட்ட முப்பது மணி நேரம் வரை, கொட்டும் மழையிலும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்கிறார்கள். இவர்களுக்கு ஓரளவு கூரை வேயப்பட்ட நிழற்குடைகள் இருந்தாலும், பல நேரங்களில் ஆறு கி.மீ தூரம்வரை வரிசை நீள்கிறது. இதில் குழந்தைகள், முதியோர்கள், உடல் நலம் பாதிப்பு உள்ளவர்கள் பெரிதும் அவதிப்படுகிறார்கள்.

இதனிடையே வைகுண்ட ஏகாதசி மற்றும் சொர்க்கவாசல் திறப்பை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு விடுமுறை தொடங்கியதன் காரணமாகவும், கிறிஸ்துமஸ் விடுமுறை காரணமாகவும் ஏராளமானோர் திருப்பதிக்கு சென்றுள்ளனர்.
இதனால் திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் நிலை காணப்படுகிறது. மேலும் 2024 ஜனவரி 1 ந்தேதி வரை சொர்க்கவாசல் பிரவேசம் செய்ய பக்தர்களுக்கு வழங்கப்படும் இலவச தரிசன டோக்கன்கள் மற்றும் 300 ரூபாய் தரிசன டிக்கெட்கள் விற்றுத்தீர்ந்துவிட்டன.

இதன் காரணமாக ஜனவரி 1ந்தேதி வரை தரிசன டிக்கெட் இல்லாத பக்தர்கள் திருப்பதிக்கு வரவேண்டாம் என்று தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. தொடர் விடுமுறையையொட்டி திருப்பதிக்கு வர ஆயத்தமாகும் பக்தர்கள், அதற்கு ஏற்ப தங்களின் பயணத்தை திட்டமிட்டுக்கொள்ளும்படியும் தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement