தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணிகளுக்கு அனுமதி- ஐகோர்ட்!
விஜயதசமி தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் நாடு முழுவதும் பேரணி நடத்துவது வழக்கம். வரும் அக்.12இல் வர இருக்கும் விஜயதசமியை ஒட்டி இந்த ஆர்எஸ்எஸ் பேரணி தமிழ்நாட்டில் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.இதற்காக , தமிழ்நாட்டில் 58 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அங்கு ஆர்எஸ்எஸ் பேரணி நடத்துவதற்கு அனுமதி கேட்டு தமிழக காவல்துறையினரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், காவல்துறையினர் 42 இடங்களில் அனுமதி அளித்து, 16 இடங்களில் பல்வேறு காரணங்களை குறிப்பிட்டு அனுமதி மறுத்துள்ளனர்.
இதனை அடுத்து ஆர்எஸ்எஸ் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கானது நீதிபதி ஜெயசந்திரன் முன்னிலையில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில், நீதிபதி கூறுகையில், ” சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியும் அனுமதி மறுக்கப்பட்டு இருப்பது நீதிமன்ற அவமதிப்பு போன்ற செயலாகும். ஆர்எஸ்எஸ் பேரணிக்கு இனி எதிர்காலத்திலும் அனுமதி மறுக்க கூடாது. அவ்வாறு அனுமதி மறுக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கோர்ட்டி ல் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். ” என்று கடுமையாக கருத்துக்களை கூறினார்.
இதனை தொடர்ந்து, அரசு தரப்பில் கூறுகையில், அனுமதி மறுக்கப்பட்ட 16 இடங்களில் 10 இடங்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும், 6 இடங்களில் குறிப்பிட்ட சில காரணங்களால் அனுமதி அளிக்கப்படவில்லை என்று கூறப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தமிழ்நாட்டில் 52 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும் மீதம் உள்ள 6 இடங்களில் உரிய பாதுகாப்பு , குறிப்பிட்ட நிபந்தனைகள் விதித்து பேரணி நடத்த தமிழக காவல்துறை அனுமதி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜெயசந்திரன் உத்தரவிட்டார்.