தமிழக மக்களால் புரட்சித் தலைவர், இதயக்கனி, வாத்தியார் என்றழைக்கப்படும் எம்.ஜி.ஆர்!
இலங்கையில் உள்ள கண்டியில் பிறந்தாலும் எம்.ஜி.ஆர், இலங்கையைச் சேர்ந்தவர் அல்ல; அவரது தந்தை கோபாலமேனனின் (மேனன் அல்ல; மேன்மைக்குரியவர் என்ற அர்த்தத்தில் அழைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.) பூர்வீகம் கோவை அடுத்த காங்கேயம் எனச் சொல்லப்படுகிறது. அங்கு மன்றாடியார் வகுப்பைச் சேர்ந்தவர் என பின்னாளில் எம்.ஜி.ஆர் பிறப்பு குறித்து ஆய்ந்து எழுதப்பட்ட ’செந்தமிழ்வேளிர் எம்.ஜி.ஆர்’ என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. அதெல்லாம் உண்மையல்ல என்போருமுண்டு
அதே சமயம் நீதித்துறையில் மாஜிஸ்திரேட்டாக பணியாற்றிய கோபாலன் கேரளாவைச் சேர்ந்த வடவனுரில் பணிநிமித்தமாக நீண்ட காலம் வசித்தார். அப்போதுதான் மருதூரைச் சேர்ந்த சத்யபாமாவைச் சந்தித்திருக்கிறார். இருவருக்குள்ளும் காதல் உருவாகி திருமணம் செய்துகொண்டார்களாம். அந்தத் திருமணத்தில் சத்யபாமா குடும்பத்தினருக்கு விருப்பம் இல்லாத நிலையில், தனியே வசித்தார்கள் தம்பதியினர். தொடர்ந்து பணி நிமித்தமாக சத்யபாமா குடும்பம் அரூர் கரூர், திருச்சூர் மற்றும் கேரளாவின் பாலக்காடு உள்ளிட்ட இடங்களில் வசித்திருக்கிறது.
கோபாலன் நேர்மையான மனிதர்; மனிதநேயம் கொண்டவர்; எதற்காகவும் தன் பணியில் சமரசம் செய்துகொள்ளாதவர் என பெயரெடுத்தவர். இறைநம்பிக்கையில் அதீத பற்றுக் கொண்ட அவர், தீவிர விஷ்ணு பக்தர். பக்தர் என்றால் சாதாரண பக்தர் அல்ல; புராண காலத்தைப்போன்று இறைவன் மேல் தீராத காதல்கொண்டவர். வைணவத்தின் மீது வெறித்தனமாக பக்தி கொண்டிருந்தவர். தன் பிள்ளைகளில் ஒருவர் சக்கரபாணி பிறந்தபோது அவர் கேரளாவில் உள்ள நீதிமன்றத்தில் பணியாற்றிவந்தார். அவர் வசித்த இடத்தின் அருகே சிவன் கோயில்தான் புகழ்பெற்றிருந்தது. அதனால் சத்யபாமா, குழந்தைக்கு அந்தக் கோயிலில் முறையான வழிபாடு நடத்தி, நீலகண்டன் என பெயர் சூட்டி மகிழ்ந்தார்;
கொதித்துப்போனார் கோபால மேனன். சில மாதங்கள்வரை மனைவி பிள்ளைகளுடன் அவர் பேசவில்லை. அடுத்த சில மாதங்களில் மற்றோர் இடத்துக்கு மாற்றலாகியபோது முதல்வேலையாக அங்குள்ள விஷ்ணு கோயில் ஒன்றுக்கு பிள்ளையை அழைத்துச்சென்று நீலகண்டன் என்ற பெயரை சக்கரபாணி என மாற்றினாராம். கூடவே,’’ இனி அந்தப் பெயரில்தான் யாரும் அழைக்கவேண்டும்’’ என கறார் உத்தரவும் போட்டாராம். அப்படி ஒரு விந்தை மனிதர் அவர்.
1914-ல், தான் தீர்ப்பு வழங்கிய ஒரு வழக்கில்... அவரது தன்மானத்தை உரசிப்பார்க்கும் ஒரு சம்பவம் நடந்தது. தன்னை விட்டுக்கொடுக்க விரும்பாத கோபால மேனன், தன் பணியை யை ராஜினாமா செய்தார். மாத வருவாயில் இருந்தவரை குடும்பம் வசதியான வாழ்க்கை வாழ முடிந்தது. இப்போது வறுமை, குடும்பத்தைச் சூழ்ந்துகொண்டது. கோபால மேனனுக்கு அப்போது 4 பிள்ளைகள். இவர்களில் கோபாலனின் முதல் தாரத்து பிள்ளைகளும் அடக்கம். குடும்ப வறுமையைப் போக்க வேலை தேடி இலங்கை அடுத்த கண்டிக்கு இடம்பெயர்ந்தது கோபால மேனன் குடும்பம். அங்கு கல்லூரி ஒன்றில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். அப்படி கண்டியில் வசித்தபோது 1917-ம் ஆண்டு இதே ஜனவரி 17-ம் தேதி வானத்தை எந்தக் கருமேகங்களும் சூழவில்லை; தேவதூதன் பிறக்கப்போவதாக எந்த அசரீரி குரலும் மக்களுக்குக் கேட்கவில்லை; அசாதாரண சூழல் அங்கு எங்கும் தென்படவில்லை. ஆனால் அப்துல்கலாம் குறிப்பிட்ட அந்தச் 'சம்பவம்' நிகழ்ந்தது. ஆம்...அன்றிரவு அந்தக் குடும்பத்தின் 5-வது குழந்தையை சத்யபாமா பெற்றெடுத்தார். குழந்தைக்கு ராம்சந்தர் என பெயர் சூட்டப்பட்டது.
ராமச்சந்தர் பிறந்த இரண்டரை ஆண்டுகளிலேயே தந்தை கோபால மேனன் இறந்து விட, தாயார் சத்யபாமா பூர்விகமான கேரளத்தின் பாலக்காடுக்கு திரும்ப முடிவெடுத்தார். ஆனால், உறவினர்களின் ஆதரவு கிடைக்காததால் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் உள்ள உறவினர் வேலு நாயரின் வீட்டில் தமது இரண்டு பிள்ளைகளுடன் அடைக்கலமானார் சத்யபாமா. அங்கு வீட்டு வேலை செய்து தனது இரு பிள்ளைகளை சத்யபாமா காப்பாற்றினார்.
பதினான்கு வயதில் நடிப்புத்துறைக்குள் நுழைந்த எம்ஜிஆருக்கு ஆரம்ப காலத்தில் கைகொடுத்தது மேடை நாடகமும் நாடகக் கலைஞர்களும்தான். பதின்ம வயதில் தனது சகோதரர் எம்.ஜி. சக்ரபாணியுடன் பாய்ஸ் கம்பெனி என்ற நிறுவனத்தில் சேர்ந்தார் எம்ஜிஆர். அங்கு கிடைத்த சிறு, சிறு வேடங்களில் நடித்தாலும் எம்ஜிஆரின் கனவு வெள்ளித்திரை மீதே இருந்தது.
ஆனால் அந்த காலத்தில் நடிப்புத் துறைக்குள் நுழைவது அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. அதுவும் கதாநாயகனாக வேண்டுமானால், அவருக்கு இயல்பாகவே ஆடலும், பாடலும், வார்த்தை சுத்தமாக தமிழ் பேசவும் சரியான உச்சரிப்பும் தெரிந்திருப்பது கட்டாயம்.
இந்த நேரத்தில் எம்ஜிஆர் மற்றும் அவரது சகோதரரை மேடை நாடகங்களில் பங்கேற்கச் செய்ய ரங்கூனுக்கு அனுப்பி வைத்தார் கந்தசாமி முதலியார். அவர்தான் எம்ஜிஆரின் திரை வாழ்க்கைக்கான ஆதர்ச வழிகாட்டி என பின்னொரு நாளில் எம்ஜிஆரே குறிப்பிட்டார். ரங்கூனில் ஆண் வேடம் மட்டுமின்றி பெண் வேடத்திலும் எம்ஜிஆர் நடித்தார்.14 வயதில் மேடை நாடகங்களில் தோன்றிய எம்.ஜி.ஆருக்கு வெள்ளித்திரை செட்டுக்குள் நுழைய ஆறு ஆண்டுகள் தேவைப்பட்டன. 1936ஆம் ஆண்டில் தனது 20ஆவது வயதில் எல்லிஸ் ஆர்.டங்கன் இயக்கத்தில் சதி லீலாவதி என்ற படத்தில் ஓர் ஊழல் காவல் அதிகாரி வேடத்தில் நடித்தார் எம்ஜிஆர்.
அதன் பிறகு சிறு, சிறு வேடங்கள் அவருக்கு கிடைத்தாலும், எல்லா திரை நாயக, நாயகிகளுக்கும் ஏற்படுவது போன்ற திருப்புமுனை, எம்ஜிஆருக்கு 1950ஆம் ஆண்டில் நடந்தேறியது. அப்போது வரலாறறுக்காவியமான மந்திரி குமாரி என்ற படத்தில் எல்லிஸ் ஆர்.டங்கன் இயக்கத்தில் நடித்த எம்ஜிஆரின் கதாபாத்திரம், அவரை ஏழை, எளியவர்களின் நாயகனாக உலகுக்கு அடையாளப்படுத்தியது வெள்ளித்திரை.
அந்த ஒரு திருப்பத்திலேயே தனக்கான பாதை எது என்பதை உணர்ந்தவராக தனது அடுத்தடுத்த படங்களை மிகவும் கவனமாகவும், அவை சாமானியர்களை ஈர்க்கக் கூடியதாகவும் இருக்கும்படி பார்த்துக் கொண்டார் எம்.ஜி.ஆர். அதற்கு கைகொடுத்தவை, எம்ஜிஆர் நடித்த கதை வசனங்கள் மற்றும் திரைப்பாடல்கள்.
1936ஆம் ஆண்டு முதல் 1976ஆம் ஆண்டுவரை அவர் இறப்புக்குப் பிறகு வெளியான இரண்டு படங்கள் உட்பட எம்ஜிஆர் நடித்த படங்களின் எண்ணிக்கை 136. அவற்றில் 132 படங்கள் தமிழிலும், இரண்டு படங்கள் மலையாள மொழியிலும், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் தலா ஒரு படமும் அடங்கும்.
தான் கால் பதித்த முதல் படத்திலிருந்து 20 ஆண்டுகளாக மக்களைத் தன் ரசிகர்களாக வைத்திருந்தது அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். மக்களைத் தன் நடிப்பாலும் துடிப்பாலும் கட்டி வைத்திருந்தவர். எத்தனையோ சண்டைக் காட்சிகள், பாடல்கள், தனித்துவமான நடன அசைவுகள், கருத்துகள் என அனைத்தையும் கொண்டு தமிழ்நாட்டு மக்களை ரசிக்கச் செய்தவர். எம்.ஜி.ஆர் ஹிட்ஸ் பாடல்களைப் பலரும் தங்களின் தொலைபேசியில் இன்றும் பதிந்து வைத்துள்ளனர்.
எம்ஜிஆருக்கு, பல விஷயங்கள் அவரை முதன்மையானவராக உலகுக்கு அடையாளப்படுத்தியது. அது இந்திய அரசியல் வரலாற்றில் மாநிலத்தின் முதல்வராக முதலாவதாக பதவிக்கு வந்த நடிகர் என்பது. அதேபோல, இந்திய திரைப்பட வரலாற்றில், குறிப்பாக தென்னிந்தியாவில் இருந்து சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை பெற்ற முதலாவது நடிகராக அவர் அறியப்பட்டார். 1972ஆம் ஆண்டில் ரிக்ஷாகாரன் படத்தில் நடித்ததற்காக எம்.ஜி.ஆருக்கு அந்த விருது கிடைத்தது.
இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்.. இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.. இந்த வரிகள் நூற்றுக்கு நூறு பொருந்தக் கூடிய ஒரு மனிதர், ஒரு சகாப்தம் என்றென்றும் மறையாத மாணிக்கம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன்.. திரையில் மக்களின் வளர்ச்சிக்காக பஞ்ச் வசனங்கள் பேசுவது எளிது தான்.. ஆனால் அதை நடைமுறை படுத்துவதும், மக்களுக்காக களத்தில் இறங்கி பாடுபடுவதும் அவ்வளவு எளிதானதல்ல.. அதை தனது செயலில் செய்து சாதித்து காட்டிய உன்னத தலைவர் எம்.ஜி.ஆர்.
ஆம்.. நடிப்பின் மூலம் மக்கள் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்தவர், அரசியலுக்குள் வந்தது என்னவோ எதேச்சையாகத் தான் என்றாலும், பின்னாளில் தங்களுக்கான தலைவர் இவர் தான் என்று அந்த சிம்மாசனத்தில் சிங்கமென அமர்ந்தார் எம்.ஜி.ஆர்., திமுகவில் பிரதிநிதியாக இருந்தவர், அங்கு ஏற்பட்ட மனக்கசப்பால் அங்கிருந்து பிரிந்து 1972-ல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியை உருவாக்கி 1977 மற்றும் 1987-ல் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று 10 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்து, பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை கொடுத்தவர் எம்.ஜி.ஆர்.,
திரைப்படங்களில் சாதனை படைத்தவர், அரசியலில் விட்டு விடுவாரா என்ன? சத்துணவுத் திட்டம், ஆதரவற்ற பெண்களுக்கு திருமண உதவி, மகளிருக்கு சேவை நிலையங்கள், தங்கும் விடுதிகள், இலவச சீருடை, காலனி, பாடநூல் வழங்கும் திட்டம் என ஏழை, எளிய மக்களுக்கு இவர் வழங்கிய திட்டங்களும், உதவிகளும் எண்ணிலடங்காதவை..
எம்.ஜி.ஆரின் சாதனைகள் பற்றி பேச வேண்டும் என்றால் ஒரு நாள் போதாது, இத்தனை காலம் உழைத்தவர் இளைப்பாற வேண்டும் அல்லவா? 1987-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24-ம் தேதி மண்ணுலகை விட்டு விண்ணுலகம் சென்றார் எம்.ஜி.ஆர்., உலகம் இருக்கும் வரை அவரது பெயரும், சாதனையும், புகழும் இருந்து கொண்டே தான் இருக்கும்.. மக்கள் மனதில் அந்த சிம்மாசனத்தில் அவரும் வாழ்ந்து கொண்டே தான் இருப்பார்.. !
வாத்தி அகஸ்தீஸ்வரன்