For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

பங்காரு அடிகளார் போன்றவர்கள் ஒரு "அரைப்பைத்தியங்கள்"!

08:23 PM Oct 20, 2023 IST | admin
பங்காரு அடிகளார் போன்றவர்கள் ஒரு  அரைப்பைத்தியங்கள்
Advertisement

ங்காரு அடிகளார், பெண்களை பீடத்தில் ஏற்றினார், மாதவிடாய் காலத்தில் கோவில்களுக்குள் செல்வதை அனுமதித்தார், பிற்படுத்தப்பட்ட ஒருவர் சந்நிதானமாக வலம் வந்தார். பிராமணர்களின் கோட்டையாக இருந்த ஆன்மீக இடத்தை அனைவருக்கும் சொந்தம் என்று மாற்றினார் என்றெல்லாம் புகழ் பாடி, அரசு சார்பில் இரங்கலோ, மரியாதையோ கொடுக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

Advertisement

பங்காரு ஒரு தனியார் நிறுவனமாக ஆன்மீக வழிபாட்டுத்தலத்தை மாற்றினார். அதன் வழியாக பொருளாதார நலன்களை அடைந்தார். பிறகு அரசுக்கு கட்டவேண்டிய வருமான வரியை "தர்மம்" என்ற பெயரில் Tax Free ஆக மாற்றிக் கொண்டார். மக்கள் உண்டியல் போட்ட பணத்திலிருந்தும், நன்கொடை பெற்ற பணத்தில் இருந்தும் அளவற்ற சொத்துக்கள் குவித்தார், அரசுகளுக்கு நெருக்கமானவராக இருந்து அதிகார மையமாக மாற்றமடைந்தார். இப்போது அவர் மறைந்து விட்டார், ஆழிரங்கள், ஒரு தனி மனிதராக அவரது இறப்பால் பிரிவில் வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல், தனிப்பட்ட முறையில் அவர் மீது எனக்கு எந்தக் காழ்ப்புணர்வும் எனக்கில்லை.

Advertisement

பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் இருந்து ஆன்மீகத்தடத்தில் கால் பதித்து மிகப்பெரிய கல்வி நிறுவனங்களைக் கட்டி செயல்படுத்த முடிந்தது. அதனால் நமது சமூகத்தின் ஏதோ ஒரு வகையில் குழந்தைகள் பயன்பெற்றார்கள், மக்களுக்கு உணவளித்தார் என்பதை எல்லாம் நான் மறுக்க மாட்டேன். அவற்றைத்தாண்டி, பங்காரு அடிகளார் போன்றவர்கள் ஒரு "அரைப்பைத்தியங்கள்" என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும், தான் அரைப்பைத்தியமாக இருந்தது மட்டுமில்லாமல் தமிழகமெங்கும் அவரைப் பின்பற்றுகிற பல அரைபபைத்தியங்களை அவர் உருவாக்கினார்.

உயிரியல் வழியான பாலின வேறுபாட்டை கேலிக்கூத்தாக்கும் வண்ணம் அவருடைய செயல்பாடுகள் இருந்தன. ஏழ்மையில் உழலும் குடும்பங்கள் பக்கத்தில் இருக்கும் போது ஊருக்கு இரண்டு அம்மன் கோவில்களை லட்சக்கணக்கில் செலவு செய்து உருவாக்குகிற முட்டாள்தனமான குறு அதிகார மையங்களை உருவாக்கியது. அதற்குள் மீண்டும் சாதிய கட்டமைப்பை உறுதியாக்குவது என்று அதே பழைய பார்ப்பனீய சிந்தனைகளின் தொகுப்பையே அவர் அவரையும் அறியாமல் உருவாக்கினார். கூட்டம் கூட்டமாக சிவப்பு வண்ணத்தில் சேலையோ, வேட்டியோ அணிந்து கொண்டு மேல்மருவத்தூர் கோவிலுக்குப் போகிறவர்கள்.

கருவறைக்குள் அனுமதிக்கப்பட்டவர்கள், பீடத்தில் வழிபட அனுமதிக்கப்பட்ட மாதவிடாய் காலப் பெண்கள் யாரும் முற்போக்கு சிந்தனை உடையவர்களாக, பெண்ணடிமைத் தனத்தை உடைத்து நொறுக்கும் ஆற்றலைப் பெற்றார்கள் என்று சொல்ல முடியாது. மென்மேலும் ஆட்டுமந்தைகளாய், தங்கள் உழைப்பை ஆன்மீகத்தில் கொட்டி விளிம்பு நிலையிலேயே அவருடைய பெரும்பான்மையான ரசிகர்கள் பின்தங்கி இருக்கிறார்கள்.

மற்றபடி பங்காரு உருவாக்கிய சமூக மாற்றங்கள் அல்லது மானுட மேம்பாட்டுக்கான விஷயங்கள் என்று ஏதுமில்லை, நிறுவனமயப்படுத்தப்பட்ட ஒற்றை இந்துத்துவ அமைப்பிலிருந்து ஒரு புதிய கிளையை அவர் உருவாக்கினார், அந்தக் கிளை மிக உன்னிப்பாக கவனித்தால் இந்துத்துவ பிற்போக்குவாதத்தோடு இணக்கமாகவே இருந்தது.

முதல்வர் ஒருவேளை தனது தனிப்பட்ட அன்பினால், அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக இரங்கல் செய்தி வெளியிட்டிருக்கலாம், நேரில் சென்று அஞ்சலி செலுத்துவது ஒருவரின் தனிப்பட்ட உரிமை. முதல்வராக .மு.க.ஸ்டாலின் பங்காருவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியது இன்றைய வாக்கரசியலில் மிக முக்கியமானது, அது ஒரு பொதுத்தன்மை வழியிலான வாக்கு சேகரிப்பு. லட்சக்கணக்கான பங்காருவின் ரசிகர்களை திமுகவின் பக்கம் சாய்த்துக் கொள்வதற்கு இத்தகைய நிகழ்வுகள் ஒரு கருவி. அதற்கான உரிமை அவருக்கு உண்டு.மற்றபடி இதுதான் திராவிட மாடல் என்றும், பெண்கள் நலம், பெண் விடுதலை, பிற்படுத்தப்பட்டோர் நலம், முற்போக்கு என்றெல்லாம் காரணம் காட்டுவதும், பங்காருவை பெரியாராக்குவதும், பங்காருவுக்கு முட்டுக் கொடுப்பதும் எவர் செய்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாத பிற்போக்குத்தனம்.

தனியொரு மனிதராக, எளிய எப்போதும் ஏமாந்தபடி அலையும் உழைக்கும் எளிய மக்களின் சார்பில் பங்காருவுக்கு எனது இதயப்பூர்வமான அஞ்சலி.

"நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்"

கை.அறிவழகன்

Tags :
Advertisement