Paytm ஊழியர்கள் 1000 பேர் பணி நீக்கம்.. -காரணம் AI?
இந்திய ஸ்டார்ட்அப் மற்றும் நியூ ஏஜ் டெக் நிறுவனங்களுக்கான நிதி ஆதாரங்கள் 2022 ஜூன் முதல் இன்று வரையில் மேம்படாத காரணத்தால் பல நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தைக் காப்பாற்றிக்கொள்ள பணிநீக்கம் செய்து வருகிறது. இதேபோல் பல டெக் நிறுவனங்கள் லாபகரமான நிலையை அடையச் செலவுகளைக் குறைக்கும் வகையிலும் ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது. அதிலும் இன்றைய காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப வளர்ச்சியின் ஆதிக்கத்தால், எதிர்காலத்தில் மனிதர்களின் பல வேலைகள் பரிபோகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் உலகில் பல மாற்றங்களைக் கொண்டு வரும் என சொல்லிக் கொண்டிருக்கும் அதே வேளையில், இந்த தொழில்நுட்பத்தால் பல வேலைகள் முற்றிலுமாக மாறும் அபாயம் இருப்பதாக பல புதிய அறிக்கைகள் கூறுகின்றன.
இந்நிலையில் நம் நாட்டி மிகப்பெரிய டிஜிட்டல் பேமென்ட் சேவை நிறுவனமான பேடிஎம்-ன் தாய் நிறுவனமான ஓன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் திடீரென ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. . இதை பேடிஎம் செய்தி தொடர்பாளரும் உறுதி செய்துள்ளார். குறிப்பாக இந்த ஆட்குறைப்பு ஆபரேஷன் அண்ட் மார்க்கெட்டிங் பிரிவில் நடந்துள்ளது. டிஜிட்டல் பேமென்ட் நிறுவனங்கள் அவர்களின் செலவுகளைக் குறைப்பதற்காக பல செயல்பாடுகளுக்கு ஏஐ மாடலை பயன்படுத்த ஆரம்பித்துள்ளன. மீண்டும் மீண்டும் ஒரே வேலையை செய்யும் நபர்களை நீக்கிவிட்டு அதற்கு மாற்றாக AI tool பயன்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருவதாக அந்நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
அதாவது இந்தப் பணிநீக்கம் குறித்துப் பேடிஎம் செய்தி தொடர்பாளர் பேசுகையில், நிறுவனத்தின் செலவுகளைக் குறைக்கும் நோக்கில் நிறுவனத்தின் செயல்திறன் மேம்படுத்தவும், தொடர்ச்சியாகச் செய்யப்பட்டும் செயல்களை AI பயன்படுத்தி ஆட்டோமேஷன் செய்யப்பட்டு உள்ளோம். இதன் மூலம் தேவைக்கு அதிகமாக இருக்கும் ஆப்ரேஷன், விற்பனை, இன்ஜினியரிங் அணியில் இருக்கும் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர், இதனால் நிறுவனத்தின் செலவில் 10 முதல் 15 சதவீதம் வரையில் குறையவாய்ப்புகள் உள்ளது எனத் தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் இன்சூரன்ஸ் மற்றும் வெல்த் ஆகியவை தான் எங்களுடைய முக்கிய வர்த்தக இலக்காக உள்ளது, இதேவேளையில் மற்ற வர்த்தகங்களும் தொடர்ந்து வளர்ச்சி அடைவதில் கவனம் செலுத்தப்படும் எனவும் பேடிஎம் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மேலும், அந்நிறுவனம் ஆட்டோமேஷனை நோக்கி நகர்வதாகவும, மீண்டும் மீண்டும் ஒரே பணியை செய்யும் பணியாளை மாற்றி அமைப்பதே அவர்களின் திட்டம் என்றும், இதனால் செலவுகளை குறைத்து அதிக செயல் திறனை ஏற்படுத்தி ஊழியர்களின் செலவை 15 சதவீதம் வரை குறைக்க முடியும் எனக் கூறியுள்ளார்.
அதே சமயம் தற்போதைய சூழலில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு வேலை நீக்கத்துக்கான இழப்பீடு தொகை வழங்கப்படுமா அல்லது மேலும் பல ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படுமா என உறுதியான தகவல் வெளியாகவில்லை.