ரேஷன் கடைகளில் இன்று முதல் பேடிஎம் வழியாக பணம் செலுத்தும் நடைமுறை அமல்!
தற்போதெல்லாம் பணத்தை பெரும்பாலானோர் தங்கள் கைகளில் எடுத்து செல்வதில்லை. மாறாக மொபைல் போனில் உள்ள கூகுள் பே, போன் பே போன்ற ஆப்களை பயன்புடத்தி பணத்தை செலுத்துகின்றனர். சிறு கடைகள் முதல் மாலில் உள்ள பெரிய கடைகள் வரை அனைத்திலும் வாங்கப்படும் சிறு பொருளாக இருந்தாலும் சரி, தங்கள் மொபைல் மூலம் பணம் செலுத்தும் வசதி உள்ளது. மக்கள் இதற்கே பழகியுள்ளனர். இந்த சூழலில் மக்களின் நலன் கருதி ரேஷன் கடைகளிலும் UPI வசதி மூலம் பணம் செலுத்த ஏற்பாடு செய்துள்ளது தமிழ்நாடு அரசு.
அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் பொருட்களை வாங்கிக் கொள்ளும் முறை விரைவில் அமல்படுத்தப்படும் என பேரவையில் கூட்டுறவு துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்த சூழலில் தற்போது இந்த சேவை சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அம்பத்தூர், ஆவடி புறநகர் பகுதிகளில் உள்ள 588 நியாய விலைக் கடைகளில் 562 கடைகளில் UPI மூலம் பணம் செலுத்தி ரேசன் பொருட்களை பெற்றுக்கொள்ள நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள கடைகளில் விரைவில் நடைமுறை படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வசதிக்காக UPI மூலம் பணம் செலுத்தும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், டிஜிட்டல் பரிவர்த்தனையை மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் 'மொபைல் முத்தம்மா' என்ற பெயரில், எப்படி பணம் இல்லாமல் மொபைல் மூலம் பொருட்களை வாங்கலாம் என ரேசன் கடைகளில் விழிப்புணர்வு வாசகங்கள் வைக்கப்பட்டுள்ளது
சென்னை மாநகர் முழுவதும் மொத்தமாக 1700 க்கும் மேற்பட்ட ரேசன் கடைகள் உள்ள நிலையில், 1500 க்கும் மேற்பட்ட கடைகளில் இத்திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் விரைவில் இந்த திட்டம் அமல்படுத்தப்படவுள்ளதாக தமிழ்நாடு கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் இனி தங்கள் கைகளில் பணமில்லை என்றாலும், அதனை மொபைல் UPI மூலம் செலுத்தலாம்.