தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

‘ஒரே நாடு ஒரே தேர்தல்' & தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானங்கள் நிறைவேற்றம்!

07:12 PM Feb 14, 2024 IST | admin
Advertisement

மோடி தலைமையிலான மத்திய அரசு அரசின் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்' மற்றும் தொகுதி மறுவரையறை கொள்கைகளுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த தனித் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

Advertisement

தமிழ்நாடு சட்டப்பேரவை நடப்பாண்டின் கூட்டதொடர் பிப். 12 ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பெற்று அதன் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்றைய பேரவையில் கேள்வி நேரத்திற்கு பிறகு, ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தியும், மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளை மறுவரையறை செய்யும் நடவடிக்கையை கைவிடக் கோரியும் 2 தனித் தீர்மானங்களை தாக்கல் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "ஒன்று - ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற மிக மோசமான எதேச்சதிகார எண்ணம் ஆகும். இதனை நாம் கடுமையாக எதிர்த்தாக வேண்டும். இரண்டு - மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரால் தமிழ்நாட்டின் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க நினைக்கும் சதியை முறியடித்தாக வேண்டும்.இவை இரண்டுமே மக்களாட்சியைக் குலைக்கும் செயல்கள் என்பதால் இவை இரண்டுக்கும் எதிராக நாம் அனைவரும் ஒருசேரக் குரல் கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பதை முதலில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisement

பேரவைத் தலைவர் அவர்களே! முதலில் - ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது எத்தகைய ஆபத்தானது என்பதை விளக்க விரும்புகிறேன். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற முறை முற்றிலுமாக நடைமுறைக்கு சாத்தியமற்ற ஒன்று. அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சத்திற்கு எதிரானது. அரசியல் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள “சுதந்திரமான, நேர்மையான” தேர்தலுக்கு முற்றிலும் எதிரானது.

ஒரே நேரத்தில் தேர்தல் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்றங்களை முன்கூட்டியே கலைக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பதாலும் அப்படி கலைப்பது அரசியல் சட்டவிரோதம் என்பதாலும்- இந்த நடைமுறையை நாம் எதிர்க்க வேண்டும்.அனைத்து மாநிலங்களும் ஆட்சி அமைந்து - ஒன்றியத்தில் அமையும் ஆட்சி கவிழுமானால் - அனைத்து மாநிலங்களையும் கலைத்து விட்டு தேர்தல் நடத்துவார்களா? சில மாநிலங்களில் ஆட்சி கவிழ்ந்து - தேர்தல் நடத்தும் சூழல் ஏற்பட்டால்ஒன்றியத்தில் ஆட்சியில் இருப்பவர்கள் தானாக முன் வந்து பதவி விலகுவார்களா? இதை விட காமெடிக் கொள்கை இருக்க முடியுமா? நாடாளுமன்ற சட்டமன்றத்துக்கு மட்டுமல்ல -உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமா? நாடாளுமன்றத் தேர்தலையே கூட -ஒரே நாளில் இந்தியா முழுக்க நடத்துவதற்கு தயாராக இல்லாத சூழல் தான் இப்போது இருக்கிறது?

இந்த நிலையில்நாடாளுமன்றத் தொகுதிக்கும் 30 மாநில சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடத்துவது மாயாஜாலமா?நகராட்சிகளும், பஞ்சாயத்துகளும் மாநில அரசின் நிர்வாக அமைப்புகள் என அரசியல் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டவை. ஆகவே இவற்றுக்கும் சட்டமன்றம், பாராளுமன்றத்துடன் தேர்தல் என்பது அரசியல் சட்ட விரோதமானது. உள்ளாட்சித் தேர்தல் முழுக்க முழுக்க மாநில அரசின் நிர்வாக கட்டுப்பாட்டில் இருப்பதாகும்.

அதற்கும் சேர்த்து தேர்தல் நடத்தப் போவதாகச் சொல்வது மாநில உரிமைகளைப் பறிப்பது ஆகும். அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கும் அரசியல் சட்டத்தை நமது அரசியல்சட்டத்தை உருவாக்கியவர்கள் சிந்தித்து நிறைவேற்றியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட அரசியல் சட்டத்தை சிதைக்கவோ- உருமாற்றவோ, விரைவில் மக்களால் நிராகரிக்கப்படும் பாராளுமன்ற மெஜாரிட்டி உள்ளோரின் சுயநலத்திற்கு யாரும் பலியாகி விடக் கூடாது. எனவ நாடாளுமன்றம், சட்டமன்றம், நகராட்சிகள், பஞ்சாயத்து ஆகியவற்றிற்கு “ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்ற நடைமுறையை மிக கடுமையாக எதிர்த்தாக வேண்டும்.

பேரவைத் தலைவர் அவர்களே! இரண்டாவதாக தொகுதி மறுவறையறை குறித்த ஆபத்துகளை விளக்க விரும்புகிறேன். தொகுதி மறுவரையறை என்ற திட்டத்தில் தென்னிந்திய மக்களை, குறிப்பாக தமிழ்நாட்டு மக்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் பேராபத்து - சூழ்ச்சி இருக்கிறது. இது முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்! தமிழ்நாட்டின் மீது - தென்னிந்தியாவின் மீது தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக தொகுதி மறுவரையறை (delimitation) உள்ளது. அரசியல் விழிப்புமிக்க தமிழ்நாட்டை வஞ்சிக்கிற அநீதியான முயற்சி முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்.

இந்திய அரசமைப்பின் 82 மற்றும் 170-ஆம் பிரிவுகளின் படி, ஒவ்வொரு மக்கள் தொகைக்கணக்கெடுப்புக்குப் பிறகும், நாடாளுமன்றம், மாநிலச் சட்டமன்றங்களில் புதிய இடங்கள் உருவாக்கப்படுகின்றன. ஏற்கனவே உள்ள தொகுதிகளின் எல்லைகள் மறுசீரமைக்கப்படுகின்றன.எல்லை நிர்ணய சட்டத்தின் படி இவை செய்யப்படுகிறது. இச்சட்டத்தின் படி எல்லை நிர்ணய ஆணையத்தைக் (Delimitation Commission of India) ஒன்றிய அரசு அமைத்து வருகிறது. இதுவரை1952, 1962, 1972 மற்றும் 2002 ஆகியஆண்டுகளில் எல்லை நிர்ணய ஆணையங்கள்அமைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் 1976-ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்குப்பிறகும், மக்களவை, மாநிலங்களவை மற்றும்சட்டமன்றப் பேரவை இடங்கள் மறுநிர்ணயம்செய்யப்பட்டு வந்தன. இவ்வாறு மறுநிர்ணயம்செய்யும்போது, மக்கள்தொகையின்அடிப்படையில் மக்களவை, மாநிலங்களவைமற்றும் சட்டமன்றப் பேரவைகளின் இடங்கள் குறைக்கப்படுகிறது. அதாவது ‘மக்கள்தொகைக் கட்டுப்பாடு’ எனும் கொள்கையைத் தீவிரமாகச் செயல்படுத்தி-மக்கள் தொகையை குறைத்துக் கொள்ளும் மாநிலங்களுக்குத் தரப்படும் தண்டனையாக இது அமைந்துள்ளது. இதனால் மக்கள் தொகை குறையும் மாநிலங்களுக்கான நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறையும். மக்கள்தொகைக் கட்டுப்பாட்டில் ஆர்வம்செலுத்தாத மாநிலங்கள் கூடுதல் பரிசைப்பெறும்; அவற்றுக்கான பிரதிநிதித்துவம்அதிகமாகும். இதனை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

இதனை நாம் எதிர்த்தாக வேண்டும்.மக்கள் தொகை குறைவதால் ஜனநாயக உரிமைகள் மாநிலங்களுக்கு குறையக் கூடாது என்பதால் தான் அரசியலமைப்பில் 42 ஆவது சட்டத் திருத்தம் செய்யப்பட்டது.2001-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு வரை தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் செய்வதை ஒன்றியஅரசு நிறுத்தி வைத்திருந்தது. அந்த மாதிரியே அரசியலமைப்பு சட்டத்தின் 84-வது திருத்தமும் செய்யப்பட்டது.தொகுதிகளின்எண்ணிக்கையில் 2026-ஆம் ஆண்டு வரைமாற்றம் செய்யப்படமாட்டாது என்றும், 2026-ஆம் ஆண்டிற்குப் பிறகு மக்கள் தொகைக்கணக்கெடுப்பின் அடிப்படையில் ஒவ்வொருமாநிலத்திலும் உள்ள மக்களவை, மாநிலங்களவை மற்றும் சட்டமன்றப்பேரவைகளில் உள்ள

தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் செய்யப்படும் என்றும்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்தால் - தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் பெரும் பின்னடைவை சந்திக்கும்.1971-ஆம் ஆண்டு தமிழ்நாடும் பீகாரும் கிட்டத்தட்ட ஒரேஅளவிலான மக்கள் தொகையைக்கொண்டிருந்ததால் மக்களவையில் கிட்டத்தட்டஒரே அளவிலான தொகுதிகளைக்கொண்டிருந்தன.

இன்று தமிழ்நாட்டோடு ஒப்பிடுகையில் பீகாரின் மக்கள் தொகைஒன்றரை மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், ஒன்றிய அரசு மேற்கொள்ள உத்தேசித்துள்ள தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் தமிழ்நாட்டில் தற்போதுள்ள மக்களவை, மாநிலங்களவை மற்றும் சட்டப்பேரவைஇடங்களின் எண்ணிக்கை பல வடமாநிலங்களின் எண்ணிக்கையை விட விகிதாச்சாரத்தில் குறைந்து விடும்.

இதனை நினைத்துப் பார்த்தால் அச்சமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்ற தொகுதிகள் இருக்கிறது. தமிழ்நாட்டின் உரிமைக்காக இவர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதியை குறைத்துவிட்டால் உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்து விடுவார்கள். 39 எம்.பி.கள் இருக்கும் போதே ஒன்றிய அரசிடம் கெஞ்சிக் கொண்டு இருக்கிறோம்.

இதிலும் குறைந்தால் என்ன ஆகும்? தமிழ்நாடு, கோரிக்கை வைக்கும் பலத்தை இழக்கும். அதனால் உரிமைகளை இழக்கும். இதனால் தமிழ்நாடு பின் தங்கி விடும். எனவே தான் தொகுதி வரையறை , மறுசீரமைப்பு என்ற பெயரால் தொகுதிகளின் எண்ணிக்கையை எந்த சூழலிலும் குறைக்கக் கூடாது என்கிறோம்.மக்கள்தொகைக் குறைந்துவிட்டதைக் காரணம் காட்டி தென் மாநிலங்களுக்குத்தொகுதிகளைக் குறைப்பது தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களை பலவீனம் அடையச் செய்யும். எனவே, அனைத்து மாநிலங்களிலும் மக்கள்தொகைக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தீவிரமாகமேற்கொள்ளும்வரை, தொகுதிகளின்எண்ணிக்கையை இப்படியே தொடரச் செய்வதேசரியாகும். இதே போன்ற பாரபட்சம் தான் நிதி ஒதுக்கீட்டிலும் - நிதி பகிர்விலும் காட்டப்படுகிறது. மக்கள் தொகையைக் காரணமாகக் காட்டி தென்னிந்தியமாநிலங்களுக்கு வரி வருவாயில் பங்குகுறைந்துவிட்டது.

இந்தியா என்பது பல்வேறு மாநிலங்கள் இணைந்த மாபெரும் நாடு ஆகும். பல்வேறு மாநிலங்கள் இணைந்த கூட்டாட்சி கூட்டரசு இது.இங்கு எந்த மாநிலமும் பிற மாநிலத்தைவிடஉயர்ந்ததோ முக்கியமானதோ அல்ல. அனைத்தையும் சமமாக நடத்த வேண்டும். மக்களுடைய எண்ணிக்கைக்கு ஏற்ப மட்டுமே பிரதிநிதித்துவம் என்று கணக்கிடப்பட்டு, மாநிலங்களுக்கான இடம் ஒதுக்கப்பட்டால், புவியியல், மொழி, பொருளாதார, அரசியல்பின்னணிகளைப் புறந்தள்ளும் செயலாகிவிடும்.

மக்களாட்சியின் ஆதாரப் பண்பையே அதுநாசமாக்கிவிடும். இதனால் ஏற்கெனவே கனல்வீசிக்கொண்டிருக்கும் எதிர்ப்புணர்வுகளை மேலும்வளர்ப்பது போலாகிவிடும். இந்தியாவின் ஒற்றுமையை இதுநாள் வரை கட்டிக்காத்துவரும்கூட்டாட்சித் தத்துவத்தை மீறும் செயல் எதையும் ஒன்றிய அரசு மேற்கொள்ளக் கூடாது. அதிகதொகுதிகள் மூலம் ஆதிக்கம் செலுத்துவதுகூட்டரசின் தன்மைக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாகிவிடும்" என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்த தனித் தீர்மானங்கள் குறித்த விவாதங்கள் நடைபெற்றது. அப்போது அதிமுக, கொ.ம.தே.க., தவாக, விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்ற கட்சிகள் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தன.. உறுப்பினர்களின் விவாதங்களை தொடர்ந்து மத்திய அரசின் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்' மற்றும் தொகுதி மறுவரையறை கொள்கைகளுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த தனித் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

Tags :
assemblydelimitation exerciseOne Nation One Election Policypasses resolutionstn
Advertisement
Next Article