For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

தமிழகத்தில் ஒரே கட்டமாகத் தேர்தல்! - தேர்தல் கமிஷன் முடிவு?

07:37 PM Feb 24, 2024 IST | admin
தமிழகத்தில் ஒரே கட்டமாகத் தேர்தல்    தேர்தல் கமிஷன் முடிவு
Advertisement

இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான புகார்களை மக்கள் தெரிவிக்க ‘சி-விஜில்’ (CVigil) என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளதாகவும், புகார் தெரிவித்த 100 நிமிடங்களில் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.

Advertisement

தமிழகத்தில் மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில், தேர்தல் ஆணையர் அருண் கோயல், மூத்த துணை தேர்தல் ஆணையர்கள் தர்மேந்திர சர்மா, நிதேஷ் வியாஸ், துணை தேர்தல் ஆணையர்கள் அஜய்பதூ, மனோஜ்குமார் சாஹு, ஊடகப்பிரிவு தலைமை இயக்குநர் பி.நாராயணன், தலைமை இணை இயக்குநர் அனுஜ் சந்தக், முதன்மை செயலர் மல்லே மாலிக் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தனர்.

கடந்த இரண்டு நாடக்ள் நடந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநிலகட்சிகளின் பிரதிநிதிகளை அவர்கள்சந்தித்து, மக்களவை தேர்தலை தமிழகத்தில் ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று பெரும்பாலும் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் வலியுறுத்தினர்.

Advertisement

பிற்பகலில், தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களிடம் கேட்டறிந்தனர். பல்வேறு அறிவுறுத்தல்களையும் வழங்கினர். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு மற்றும் கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர் உடன் இருந்தனர்.

கடந்த 2 நாட்களாக ஆலோசனை நடத்திய நிலையில் இன்று (பிப்.24) அவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்,

“கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் தேசிய, மாநிலக் கட்சிகள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளோம். மக்களவைத் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக பல கட்சிகளாலும் முன்வைக்கப்பட்டது. அதேபோல் தேர்தலில் பணப் பட்டுவாடாவை தடுக்க வேண்டும், மது விநியோகத்தைத் தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

தேர்தலை நியாயமாக, சுதந்திரமாக நடத்த வேண்டும் என்பதில் தேர்தல் ஆணையம் உறுதியாக இருக்கிறது. தேர்தல் தொடர்பாக புகார்களை மக்கள் ஆணையத்திடம் தெரிவிக்கும் வண்ணம் சி-விஜில் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் மக்கள் அளிக்கும் புகார்களுக்கு 100 நிமிடங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் மொத்தம் 6.19 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 3.04 கோடி, பெண்கள் 3.15 கோடி பேர்.

மூன்றாம் பாலின வாக்காளார்கள் 8294. பெண் வாக்காளர்களே இங்கு அதிகமாக உள்ளனர். தேர்தலின்போது அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அடிப்படை வசதிகள் இருப்பது உறுதி செய்யப்படும். தேர்தலுக்கு 7 நாட்களுக்கு முன்பு வரை பூத் ஸ்லிப் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

மாநிலங்களுக்கு இடையே சோதனைச் சாவடி அமைத்து தீவிரமாகக் கண்காணிக்கப்படும். பதற்றமான வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டு துணை ராணுவப் படை கண்காணிப்பு உறுதிப்படுத்தப்படும்” என்றார்.

“தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கட்சிகளின் கோரிக்கை பரிசீலிக்கப்படும். ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளும் கண்காணிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

Tags :
Advertisement