For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

நாடாளுமன்றத் தேர்தல் - வேகமெடுக்கும் திமுக!

05:48 PM Jan 19, 2024 IST | admin
நாடாளுமன்றத் தேர்தல்   வேகமெடுக்கும் திமுக
Advertisement

ராமர் கோவில் திறப்பு முடிந்தவுடன் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிடலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவும் நிலையில் திமுகவின் தேர்தல் பணி சூடு பிடித்திருக்கிறது...!ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள 68 ஆயிரம் பூத்களுக்கும் தலா ஒரு பொறுப்பாளரை நியமித்து அவர்களுக்கு மண்டல வாரியாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன! அதன் பிறகு ஒவ்வொரு 100 வாக்காளர்களுக்கும் ஒரு பொறுப்பாளர் என 6 லட்சம் பேர்களை நியமித்தது...!

Advertisement

கடந்த மாதத்தில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை மேற்பார்வை செய்ய பத்து பூத்களுக்கு ஒருவர் என சத்தமில்லாமல் நியமனம் செய்தது...இதில் கட்சியின் அனைத்துப் பொறுப்பாளர்களுக்கும் வாக்குச்சாவடிகள் பிரித்து வழங்கப்பட்டிருக்கின்றன. காதும் காதும் வைத்தது போல கட்சிக்காரர்களுக்கும் தீபாவளி, பொங்கல் என பரிசுப் பொருட்களை வழங்கி குளிர்வித்தது... பிரதான எதிர்கட்சியான அதிமுக சத்தமில்லாமல் கிடக்க, பாஜகவோ தமிழ்நாட்டில் எடுபடாத விஷயங்களை ஊடகங்களில் மட்டும் சத்தம் போட்டு பெரிதாக்கிக் கொண்டிருக்க, இன்று அதிரடியாக மூன்று குழுக்களை நியமித்திருக்கிறது திமுக தலைமை....

Advertisement

கே.என்.நேரு தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு என்று அமைக்கப்பட்டு அதில் மண்டலத்துக்கு ஒருவர் என மேற்கு மண்டலத்துக்கு உதயநிதி, வடக்குக்கு எ.வ.வேலு, தெற்கில் தங்கம் தென்னரசு, டெல்டாவுக்கு நேரு, சென்னைக்கு ஆலந்தூர் பாரதி என தேர்தல் வித்தகர்கள், கட்சிக்காரர்களை அடக்கி ஆளும் ஒரு குழு...

கனிமொழி கருணாநிதி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைக்கப்பட்டு அதில் அறிவுஜீவி பிடிஆர், உலக முதலீட்டாளர் மாநாட்டில் மாஸ் காட்டிய டிஆர்பி ராஜா, சென்னை வெள்ளத்தில் களமாடிய மேயர் பிரியா, நாமக்கல்லைச் சார்ந்த இளம் மாவட்டச் செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், எம்.எம்.அப்துல்லா, கொறடா கோவி செழியன், மருத்துவர் எழிலன், மாணவரணிச் செயலாளர் சிவிஎம்பி எழிலரசன், திராவிடச்சுரங்கம் டிகேஎஸ் இளங்கோவன் என்று இளைஞர்கள் மற்றும் படித்தவர்கள் நிரம்பிய சிறப்பான ஒரு குழு...

கூட்டணிக்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அனுபவஸ்தரான டி.ஆர்.பாலு தலைமையில் மூத்த பெருந்தலைகள் ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், நேரு, ஆ.ராசா என எடக்கு மடக்குத் தெரிந்தவர்கள் நிறைந்த குழு என மூன்று குழுக்களை நியமித்து அதிரடி காட்டியிருக்கிறது.

சத்தமில்லாமல் தேர்தல் பணிகளைச் செய்து கட்டமைப்பை வலுவாக்கி வைத்திருக்கும் திமுக இவ்வளவு விரைவாக இத்தகைய குழுக்களை அறிவிக்கும் என எதிர்கட்சியினர் மட்டுமில்லாமல் கூட்டணிக்கட்சிகளே எதிர்பார்க்கவில்லை போலிருக்கிறது...!புதியவர்கள், அனுபவஸ்தர்கள் என பொறுக்கி எடுத்து குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

தேர்தல் என்று வந்துவிட்டால் திமுகவின் பலம் யானை பலம் என்று எம்.ஜி.ஆர் அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களைப் பேசும் போது சொல்வாராம். அதைத்தான் திமுக இன்று வரை காட்டிக் கொண்டிருக்கிறது என்கிறார் பத்திரிக்கையாளர் தராசு ஷ்யாம்.

தேர்தல் பிரச்சாரம், களப்பணி என இக்குழுக்களுக்கான பணிகள் உடனடியாக தொடங்கும் என்று திமுக வட்டாரம் தெரிவிக்கிறது.

Tags :
Advertisement