தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

ஏகப்பட்ட புரொட்யூசர்கள் எடுக்கத் தயங்கிய சப்ஜெக்ட்தான் 'பராரி'!

02:19 PM Aug 28, 2024 IST | admin
Advertisement

'குக்கூ', 'ஜோக்கர்', 'ஜிப்ஸி', 'ஜப்பான்' போன்ற பல படங்களை இயக்கிய டைரக்டர் ராஜு முருகன், எஸ்பி சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து வழங்கும் படம் 'பராரி'. ராஜு முருகனிடம் அசிஸ்டெண்ட் டைரக்டராக பணியாற்றிய எழில் பெரியவேடி எழுதி இயக்கியிருக்கும் 'பராரி' என்ற சொல் தங்கள் சொந்த இடங்களிலிருந்து, பல்வேறு இடங்களுக்கு தங்களுடைய வாழ்க்கைக்காக போகும் மக்களைக் குறிக்கிறது என்று படக்குழுவினர் கும்றிப்பிட்டிருந்தனர். மேலும் திருவண்ணாமலையை சுற்றி இருக்கும் அந்த நிலத்தின் எளிய மக்களின் வாழ்க்கை முறையையும், அவர்களுக்கான அரசியலையும் 'பராரி' பேசுகிறது என்றும் தகவல் வெளியானது. இதில் தோழர் வெங்கடேசன் படத்தில் நடித்த ஹரிசங்கர் பராரி திரைப்படத்தின் நாயகனாக நடித்துள்ளார். புதுமுக நடிகையான சங்கீதா கல்யாண் படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். அத்துடன் 40 புதுமுக நடிகர், நடிகைகள் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்கள். இவர்கள் நடிப்பில் பி.எச்.டி படித்து டாக்டர் பட்டம் பெற்றவர்கள் என்பது ஹைலைட் .ஆனாலும் இவர்கள் அனைவரும் மூன்று மாதங்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் தங்கியிருந்து, படத்தின் காட்சிகளை ஒத்திகைப்பார்த்து மண்ணைச் சேர்ந்த மக்களாகவே படத்தில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

விரைவில் படம் ரிலீசாக இருக்கும் நிலையில் இப்படம் குறித்து இயக்குநர் எழில் பெரியவேடி சொன்ன தகவலிது :

Advertisement

“ராஜு முருகன் சாரிடம் அசிஸ்டெண்டா ஒர்க் பண்ணினேன் . அப்போ சார் ஜிப்ஸி படம் முடிக்கும் போதே இந்த பராரி கதையை நான் முடித்துவிட்டேன். சில நிறுவனங்களில் கதை சொன்னேன், கதையை கேட்டுவிட்டு நன்றாக இருப்பதாக சொல்வார்கள், ஆனால் கிளைமாக்ஸ் காட்சியை கேட்டு விட்டு பயந்து ஜகா வாங்கிவிட்டார்கள். கூடவே இந்த காட்சியில் எந்த நடிகர், நடிகையும் நடிக்க மாட்டாங்க, என்று நிராகரித்தார்கள். இப்படி பலரிடம் கதை சொல்வேன், அவர்களும் கதையின் கிளைமாக்ஸ் காட்சியை கேட்டு பயந்து விடுவார்கள். இப்படியே போனதால் எனக்கே என் கதை மீது சலிப்பு ஏற்பட்டு விட்டது. அதனால் சினிமாவை விட்டே போய் விடலாம் என்று முடிவு செய்து ராஜூ முருகன் சாரிடம் சொன்னேன். உடனே அவர் கேஷூவலாக ஊருக்கெல்லாம் போக வேண்டாம் என்று சொன்னதோடு, இந்த படத்தை நானே தயாரிக்கிறேன், என்று கூறி அப்படி தான் ‘பராரி’ தொடங்கியது.

வட தமிழகத்தில் இருக்கும் இரண்டு விளிம்புநிலை சமூக மக்களிடையே இருக்கும் அரசியலை தான் இந்த கதை முன் வைக்கிறது. வட தமிழகம் பற்றி இதுவரை சொல்லாத அரசியல், இரண்டு சமூகமாக இருப்பவர்கள் ஒரே குலசாமியை வணங்குகிறார்கள், இது தான் அங்கிருக்கும் மிகப்பெரிய அரசியல். இருவரும் தினக்கூலியாகத்தான் இருக்கிறார்கள், அப்படி இருக்கும் போது இவர்களிடம் ஏற்ற தாழ்வு எப்படி வந்தது? என்ற கேள்வியை முன் வைப்பதோடு, திராவிட் நாடு அரசியலையும் இந்த படத்தில் பேசியிருக்கிறேன். திராவிட நாடு அரசியல் என்பது திராவிட அரசியல் இல்லை, மொழி வாரியாக பிரிந்து கிடக்கும் திராவிட நாடு அரசியல். மொழி வாரியாக திராவிட நாடுகள் பிரிந்திருந்தாலும், அதன் வேர்கள் தமிழ்நாட்டில் இருந்து தான் பிரிந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், தமிழர்கள் வேறு மாநிலங்களுக்கு செல்லும் போது அவர்களை வேற்று மொழி பேசுபவர்களாக பார்ப்பதோடு, அவர்களை எப்படி நடத்துகிறார்கள், அங்கே மொழி ரீதியிலான அரசியல் எப்படி இருக்கிறது, என்பதை தான் படத்தில் சொல்லியிருக்கிறேன்.

டீசரில் இரண்டு சமூகங்களைச் சேர்ந்த மக்களிடையே நடக்கும் பிரச்சனை போல் காட்சிகள் இருக்கலாம், ஆனால் படம் அதை மட்டும் பற்றி பேசவில்லை, அதை தாண்டிய மனிதத்தை பற்றி பேசும். ஒரு சமூகத்திற்கு ஆதரவாகவும், மற்றொரு சமூகத்தினரை குறை சொல்வது போல் காட்சிகள் இருக்காது, தவறு செய்பவர்களை குத்திக்காட்டுவதோ அல்லது குறை சொல்வதோ என் நோக்கம் இல்லை, அனைவரையும் நேசிக்க வேண்டும், அனைவரும் சமம், நீ பெரியவன் நான் பெரியவன் என்று பார்க்க கூடாது, தமிழ் மரபுகளில் இருந்து தான் உயிரினம் உருவானது என்று வரலாற்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள், அப்படிப்பட்ட தமிழ் சமூகம், மேலே கீழே என்று பார்க்காமல், அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்பது தான் இந்த கதை. இந்த படத்தை பார்த்து ஒரு சமூகம் திருந்திவிட்டது அல்லது சிலர் திருந்திவிட்டார்கள் என்று சொல்லலாம், அப்படி தான் கதை இருக்கும். படத்தில் கிளைமாக்ஸ் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்துவதோடு, அனைவரையும் யோசிக்க வைக்கும். 20 நிமிட கிளைமாக்ஸ் இதுவரை எந்த படத்திலும் வராத கிளைமாக்ஸாக இருக்கும். படம் முடிந்து வெளியே வரும் போது கண்கலங்கியபடி தான் வருவீர்கள். நான் சொல்வது உங்களுக்கு கொஞ்சம் அதிகமாக தோன்றலாம். ”ஒரு படைப்போ, கவிதையோ, கட்டுரையோ, சிறுகதையோ, நாவலோ படிக்கும் போது உங்கள் மனதை சலனப்படுத்தவில்லை என்றால் அதை குப்பை தொட்டியில் போட்டுவிடுங்கள்”, என்று அருந்ததி ராய் சொல்லியிருப்பார், அதுபோல் என் படம் உங்களை 10 நிமிடமோ அல்லது ஒரு நாளோ உங்கள் மனசாட்சியை கேள்வி கேட்கவில்லை என்றால், என் படத்தை குப்பையில் போட்டு விடுங்கள்.இந்த படத்தில் இருக்கும் பெருபாலான சம்பவங்கள் உண்மையில் நடைபெற்றவை. இந்த படத்தில் யார் மீதும் குற்றம் சொல்லவில்லை, எந்த குறியீடுகளையும் வைக்கவில்லை.” என்றார்.

படத்தின் கேமராமேன் ஸ்ரீதர் சொன்ன சேதியிது

“’பரியேறும் பெருமாள்’ படத்திற்குப் பிறகு 9 படங்களில் பணியாற்றி விட்டேன், அதன் பிறகு நான் எதிர்பார்த்த கதை எனக்கு அமையவில்லை. கமர்ஷியல் படங்களாக இருந்தாலும், அவை எதாவது நம்மை செய்ய வேண்டும் அல்லவா? அப்படி எந்த கதையும் எனக்கு அமையாததால் காத்துக்கொண்டிருந்தேன். அப்போது தான் எழில் என்னை தொடர்பு கொண்டு இந்த கதையை கேளுங்கள், என்றார். அதற்கு முன்பு அவரை எனக்கு தெரியாது, அவரை பற்றி எனக்கு எந்த தகவலும் தெரியாது. அவர் அனுப்பிய கதையை படித்த போது, என்னை ஒரு மாதிரி செய்துவிட்டது. குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸ் ஏசி அறையில் எனக்கு வியர்க்கும் அளவுக்கு பதற்றத்தை கொடுத்துவிட்டது, அந்த அளவுக்கு இந்த கதை என்னை உலுக்கியது, அதனால் இதில் பணியாற்றினேன். ‘பரியேறும் பெருமாள்’ போல் தமிழ்நாட்டில் நிறைய சாதி அரசியலை வைத்து படங்கள் வருகிறது. ஆனால், அதை தாண்டி மொழி, மதம், கார்ப்பரேட் ஆகியவற்றில் இருக்கும் அரசியலை தான் இந்த படம் அழுத்தமாக பேசுகிறது. குறிப்பாக மாநிலம் மற்றும் மத்திய அரசியலை தழுவி இந்த படத்தின் கதை எழுதப்பட்டிருக்கிறது.

இந்த படத்திற்குப் பிறகு சினிமாவில் சாதி படம் எடுப்பவர்கள் காலாவதியாகி விடுவார்கள். ஒரு சமூகத்தினரை தாழ்த்தி பேசுவதோ அல்லது ஒரு சமூகத்தை பெருமையாக பேசுவதாக தான் சாதி படங்கள் இருக்கிறது. ஆனால், இந்த படம் முதலில் மக்கள் மன ரீதியாக திருந்த வேண்டும், பிறகு பொருளாதார ரீதியான மாற்றங்கள், முன்னேற்றங்கள் தானாக வரும் என்பதை வலியுறுத்துகிறது. ஆரம்பத்தில் சொன்னது போல் நான் இதுவரை 9 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறேன், பல பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டிருக்கிறேன், ஆனால் இதுவரை எந்த படத்திற்காகவும் இவ்வளவு பேசியதில்லை. ஆனால், இப்போது இவ்வளவு பேசுகிறேன் என்றால் இந்த கதை தான் காரணம். இந்த படத்தில் இருக்கும் புதுமுகங்களை எடுத்துவிட்டு பிரபலமான சில நடிகர்களை நடிக்க வைத்திருந்தால் இந்த படம் தமிழ் சினிமாவின் சிறந்த படமாக மட்டும் இன்றி, திரையரங்கில் ரசிகர்களை கொண்டாட வைக்கும் நல்ல படமாகவும் இருக்கும். 120 ரூபாய் கொடுத்து இந்த படத்தை பார்க்கும் ரசிகர்கள், படம் முடிந்த பிறகு கூடுதலாக 120 ரூபாய் கொடுக்க தயாராக இருப்பார்கள், அந்த அளவுக்கு தியேட்டருக்கான படமாகவும் ‘பராரி’ இருக்கும். இதை நான் இப்போது சொல்லவில்லை, 2021 ஆம் ஆண்டே என் சமூக வலைதளப் பக்கத்தில் சொல்லியிருக்கிறேன். படம் பார்த்த பிறகு நான் சொன்னது தவறு என்று நீங்கள் நினைத்தால், என் பதிவை நீக்க சொல்லுங்கள், தாராளமாக நீக்கி விடுகிறேன்.” என்றார்.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘தோழர் வெங்கடேஷ்’ பட புகழ் ஹரி சங்கர் படம் பற்றி கூறுகையில், “’பராரி’ படத்தின் கதை மிக சிறப்பானதாக மட்டும் இன்றி எனக்கு பொருத்தமானதாகவும் இருந்தது. படத்தில் இடம்பெறும் சம்பவங்களை நான் பார்த்திருக்கிறேன், அதனால் தான் இந்த கதையில் என்னை தொடர்பு படுத்திக் கொள்ள முடிந்தது. இந்த கதைக்காக நான் என் உடல் எடையை குறைத்திருக்கிறேன். 100 கிலோவாக இருந்த நான் 44 கிலோவாக உடல் எடையை குறைத்து நடித்திருக்கிறேன். உடல் எடையை குறைத்து கூலி வேலை செய்யும் ஒரு இளைஞர் போல இருக்க வேண்டும், அப்படி இருந்தால் மட்டுமே படப்பிடிப்பை தொடங்குவேன், என்று இயக்குநர் சொல்லிவிட்டார். அதன்படி நான் உடல் எடையை குறைக்க முயற்சித்தேன். ஆனால், சென்னையில் இருந்துக் கொண்டு உடல் எடை குறைப்பதில் ஈடுபட்டால், அதை எளிதில் செய்ய முடியாது, என்பதால் படப்பிடிப்பு நடக்கும் திருவண்ணாமலை மாவட்டத்திற்கே சென்று அங்கு மூன்று மாதங்கள் தங்கியிருந்து, கரும்பு வெட்டுவது, செங்கல் சூளையில் வேலை செய்வது என்று ஒரு கூலி தொழிலாளியாகவே இருந்து உடல் எடையை குறைத்து, என் தோற்றத்தில் மாற்றத்தை கொண்டு வந்தேன்.” என்றார்.

இன்று மாலை (ஆக.28) ‘பராரி படத்தின் டீசரை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட உள்ள நிலையில், படத்தை இந்த மாதம் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Tags :
Parariraju muruganபராரி
Advertisement
Next Article